புதன், 25 ஏப்ரல், 2018

வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தங்கள் தேவையே! – குவியாடி


அகரமுதல

வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தங்கள் தேவையே!
–      குவியாடி
ஒடுக்கப்பட்ட மக்களின் – பாரதியின் மொழியில் சொல்வதானால்  தணிந்த சாதியினரின் – நலன்கள் காக்கப்பட வேண்டும் என்பதில்மாற்றுக்கருத்து இல்லை. அவர்களுக்கு எதிராக இன்றும் வன்கொடுமைகள் தொடர்வதும் உண்மைதான். எனவே, வன்கொடுமைத்தடுப்புச்சட்டத்தின் மூலமாகவாவது அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும்.
நடைமுறைக் குறைபாடுகளைத் தவிர்ப்பதற்காக இச்சட்டத்தில்    ஒடுக்கப்பட்டவர்கள் நலன்கருதிச் சில திருத்தங்கள் தேவை. அதே நேரம், பொய்க்குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்படும் பிற வகுப்பினரின் நலன்களைக் காக்கவும் சட்டத்தில் திருத்தம் தேவை.
இதைக் காலங்கடந்தேனும் உச்சநீதிமன்றம் சொல்லியிருப்பது பாராட்டிற்குரியது. ஆனால் சட்டத்திருத்தத்தின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல், அப்பாவிகள் பழிவாங்கப்படுவதற்காகத் திருத்தம் தேவை என்றால், ஆழமாகச் சிந்திக்காமல் பெரும்பான்மையர் எதிர்க்கின்றனர்.               
அரசியல் யாப்பு , பிரிவு 17 இன்படி நம் நாட்டில்  தீண்டாமை ஒழிக்கப்பட்டது.ஆனால்,  நடைமுறையில் தீண்டாமைச் செயல்கள் இருந்தன; இருக்கின்றன, எனவே, தீண்டாமை ஒழிப்புச் சட்டம் 1955இல் கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் குடியுரிமைகள் பாதுகாப்புச் சட்டம்(Protection of Civil  Rights) என 1976 இல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  தாழ்த்தப்பட்டோருக்கான சட்டமாக இஃது இருந்ததே தவிரப் பழங்குடியினர் நலன் குறித்துப் பொருட்படுத்தவில்ல.,
  எனவே, 1989இல் தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும், 1995இல் அதற்கான விதிகளும் உருவாக்கப்பட்டன.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்கள் இருப்பினும் நடைமுறைக் குறைபாடுகள் உள்ளன. குற்றங்களைப் பதிவு செய்யாமை, பதிந்தாலும் பிறழ்சான்றர்(hostile witness) மூலம் வழக்கை இலலாமல் ஆக்கல், கட்டைப்பஞ்சாயத்து, பாதிப்புற்றவர் மீதே எதிர் வழக்கு தொடுத்து வழக்கை   நீர்த்துப்போகச் செய்தல், பொய் வழக்குகள் மூலம் அச்சுறுத்தல், இச்சட்டத்தின் படிக் குற்றம் புரிந்தவர்களுக்குக்  குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 438வது பிரிவு பொருந்தாது எனச்சட்டம் இருப்பினும் இப்பிரிவில் பிணையில் விடுதல்.  ஆகியவற்றால் வன் கொடுமையாளர்கள் தப்பி விடுகின்றனர் என்கின்றனர். ஆனால், இத்தகைய செயல்பாடுகள் இவற்றிற்கு மட்டும் உரியன அல்ல. வரன் கொடை(வரதட்சணை) முதலான பல வழக்குகளிலும்இதுதான நிலை. காவல் துறையில் வழக்குஉசாவல் தொடர்பான உரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் பொழுது இவையும் மாறும்.
அதே நேரம்,  வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கூறுவதற்கிணங்க மாநில அளவில்   தாழ்த்தப்பட்ட  பழங்குடி மக்கள் பாதுகாப்புக் குழு அமைக்கவும் மாவட்ட அளவில் கண்காணிப்பு  விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கவும் வேண்டும்.  இவற்றை முறையாக அமைத்து நடவடிக்கைகள்எடுத்திருந்தாலே பெருமளவு விழிப்புணர்வு ஏற்பட்டுக் குற்றங்களும் குறைந்திருக்கும்.
இச்சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பொய் வழக்குகள் போடப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதி 10இல்  தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினரைப் பொது இடத்தில் இழிவுபடுத்தும் கருத்துடன் வேண்டுமென்றே அவமானப் படுத்துவது அல்லது அச்சுறுத்துவது தண்டைனக்குரிய குற்றமாகக் கூறப்பட்டுள்ளது.  இதனைப் பலர் தவறாகப் பயன்படுத்திவருகின்றனர்.
இன்ன வகுப்பு என்று தெரியாமல் இடம் பெறும் வாதங்களையும் எதிர்ப்புக் குரல்களையும் சாதியைச் சொல்லித் திட்டி இழிவுபடுத்தியதாகக் கூறிப்பொய் வழக்கு தொடுத்து அலலலுக்கு உள்ளாக்கும்  போக்கு வளர்பிறையாக உள்ளது. இந்தப் போக்கிற்கான கண்டனமும் வளர்ந்து கொண்டேஉள்ளது.
பாபு செகசீவன்ராம் இந்தியத் துணத்தலைமையமைச்சராகவும் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்த பொழுது(1977–1979) இப்போக்கு வளர்ந்தது.  தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பிறரை அடித்து விட்டு உடனே செகசீவன்ராம் அலுவலகத்திற்குப் பிற வகுப்பாரால் அடிக்கப்பட்டதாகத் தொலைவரி கொடுத்துப் பிறரை இன்னலுக்கு உள்ளாக்கிய நிகழ்வுகள் உண்டு. இதன் தொடர்ச்சியாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பொய்வழக்கு போடுவது மிகுதியானது.
இத்தகைய பொய்வழக்குகளால் பாதிப்பறுவோர் வளர்ந்ததால் மதுரையில் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போக்கும் வளர்ந்து வருகிறது. தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான கூட்டமைப்புகூட உருவாக்கப்பட்டது.  பாட்டாளி மக்கள் கட்சியினரும்  தொடர்ந்து  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுமையும் உள்ளது. அதற்குச் சான்றுதான் மகாராட்டிரத்தில் இத்தகைய பொய்வழக்குகளுக்கு எதிராக நடைபெற்ற பேரணிகளில் இரு கோடி மக்களுக்கும் மேலாகக் கலந்து  கொண்டமை.
இந்திய அரசியல் யாப்புச் சட்டத்தின் பிரிவு 338இன் படி 1952இல் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் சார்பு அமைப்புகளாக  நாடு முழுவதும் 12 மாநில (மண்டல) ஆணையங்கள் உள்ளன.  தமிழ்நாடு, புதுச்சேரிக்கென்று சென்னையில் தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் ஆணையம்  உள்ளது. 89-ஆவது இந்திய அரசியல்யாப்புத் திருத்தச் சட்டம், 2003-இன் படி முன்பிருந்த பட்டியல் சாதிகள் மற்றும்பட்டியல் பழங்குடி மக்களுக்கான ஆணையத்தை (1) பட்டியல் சாதிகளுக்கான தேசிய ஆணையம் (2) பட்டியல் பழங்குடி மக்களுக்கான தேசியஆணையம் என இரண்டு ஆணையங்களாக அரசு அமைத்தது.
சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்பு காலங்கடந்து அமைப்புகளை உருவாக்கல், அமைப்புகள் உருவாக்கினாலும் காலந்தவறிச் செயல்படல் போன்றவற்றால் எதிர்பார்த்த பயன்கள் விளையவில்லை, 3 ஆ்ண்டுகளுக்கு ஒருமுறை இவ்வாணையங்கள் கூடுவதாலும் போலோ பாசுவான்சாத்திரி, விசய்சங்கர் சாத்திரி போன்ற முற்பட்ட வகுப்பினர் இவற்றின் தலைவர்களாக இருந்துள்ளமையாலும் இவற்றால் போதிய பயனிருந்திருக்காது என்பதைப் புரிந்திருக்கலாம்.
நீதிபதிகள்  இலலித்து, கோயல் ஆகியோர் கொண்ட  உச்சநீதி மன்ற அமர்வில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்க் குற்றச்சாட்டின் மெய்த்தன்மையை ஆராய்ந்த பின்னரே வழக்கு பதிய வேண்டும் என்று மார்ச்சு 20இல் சொல்லியுள்ளார்கள். இதற்கு முன்பு பிணை வழங்க இயலாக் கைதுகளை மேற்கொண்டு வந்தனர். பொய்வழக்குகள் பெருகுவதால், முறையீடு வந்த 7 நாளுக்குள் மெய்த்தன்மையை ஆராய்ந்த பின்னரே கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிததுள்ளனர். மேலும் அரசு ஊழியர்கள், மேல் அலுவலர்களின்  எழுத்து மூலமான இசைவு  பெற்றபின்னரே கைது செய்யப்பட வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளனர்.
இந்த முடிவிற்கு அவர்கள் வந்தது திடீரென்று நடந்ததல்ல. நாடெங்கும் உள்ள நீதி மன்றங்களில் முன்னரே பல தீர்ப்புகளில் பொய் வழக்குகளுக்குஎதிரான கண்டனங்கள் வந்த பின்னரும்   பட்டியல் சாதியினர், பழங்குடியினருக்கான ஆணையர்கள் இது குறித்து எச்சரித்த பின்னருமேதெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கூறுவது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்து விடும் என்றே இதன் ஆதரவாளர்கள் போராடுகின்றனர். நீதிபதிகள் கைது செய்யத் தடைவிதிக்கவில்லை. மெய்த்தன்மையைக் கண்டறிந்த பின்னரே நடவடிக்கை எடுக்கச் சொல்லியுள்ளனர். சட்டத்தால் பாதிப்பு உறுபவர்களுக்காகவும் நீதிமன்றம் பேசுவதுதானே முறை .அந்தக் கடமையைத்தானே நீதிபதிகள் ஆற்றி உள்ளனர்.
வன்கொடுமைத்தடுப்புச் சட்டத்தின் படியான நடவடிக்கைகளை விரைவு படுத்தவும் விழிப்புணர்வுக் குழுக்களைச் செயல்படச் செய்யவும் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறவர்களுக்கு விரைவில் தீர்ப்பும் இழப்பீடும் கிடைக்கவும் போராட வேண்டும். மாறாகச் சட்டத்தால் பாதிப்படை வோர்களுக்கு எதிராகப் போராடுவது முறையல்ல.
இந்திய அரசும் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறவர்கள் தீர்வு பெறுவதற்குரிய உரிய திருத்தங்களை உடனே மேற்கொள்ள வேண்டும். அவற்றுடன் சேர்த்துப் பொய் வழக்குகளைத் தடுக்கவும் அவற்றால் பாதிப்புறுவோர்க்குத் தீர்வு கிடைக்கவும் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கும் பொழுது இத்தகைய எதிர்ப்புகள்அடங்கும்.
”பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற நெறி பிறந்த நாட்டில் தீண்டாமைக் கொடுமை இருப்பது கொடுமையல்லவா? உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனைக் களைய  அரசுமுற்பட வேண்டும்.  பொய்வழக்குகளுக்கு எதிராகத் தீர்ப்பு கூறியதற்கு எதிராகப் போராடுவதைப் போராட்டக்காரர்களும் கைவிட வேண்டும்!
– குவியாடி

எந்த இராமனின் கதையைப் பாடமாக வைக்க வேண்டும்? – குவியாடி


அகரமுதல

எந்த இராமனின் கதையைப் பாடமாக வைக்க வேண்டும்?


விசுவ இந்து பரீச்சத்து என்னும் அமைப்பு இராமனின் கதையைப் பாடமாக வைக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.
தமிழ்நாட்டு மாணவர்கள், தமிழ்ப்பாடத்தில் மேனிலைக்கல்வியை முடிக்கும் முன்னர் இராமகாதையைக் கம்பரின் வரிகளில் படித்து விடுகின்றனர். பிற மாநிலங்கள் குறித்துத் தெரியவில்லை.
ஒரே நாடு, ஒரேமொழி, ஒரே கல்வி ஒரே சமயம் என வெறி பிடித்துக் கூக்குரலிடும் அமைப்பு இப்பொழுது நாடு முழுவதும் இராமன் கதையைப் பாடமாக வைக்க வேண்டும் எனச் சொல்வதால் சில ஐயங்கள் ஏற்படுகின்றன.
வரலாறு என்று சொல்லாமல் கதை என்று அவர்களே ஒத்துக் கொண்டது மகிழ்ச்சிதான். ஆனால்  வால்மீகி இராமாயணம், துளசிதாசு இராமாயணம், பௌத்த இராமாயணம், சமண இராமாயணம், திபேத்து இராமாயணம், கம்பர் இராமாயணம் எனப் பல்வேறுமொழிகளிலும் 300 இராமாயணங்கள் உலகம் முழுமையும் உள்ளன. இராவணனின் மகள் சீதை, தசரதன் மனைவியர் வரிசை முறை கோசலை, சுமத்திரை, கைகேயி, என்பனபோன்று 80 வகையான இராமகாதைகள் உள்ளன. இவற்றுள் எந்தக் கதையைப் பாடமாக வைக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள்? தெரியவில்லையே!
 இராமன் முதலானவர்கள் பிறப்பும் வெவ்வேறு வகையாகச் சொல்லப் படுகின்றன. தசரதன் மனைவிகள் வேள்வியில் பாயாசம் குடித்ததால் பிறந்தவர்கள், பானம் பருகியதால் பிறந்தவர்கள், விந்து உண்டு பிறந்தவர்கள், குதிரைப் பிணத்தைக் கட்டிக் கொண்டமையால் பிறந்தவர்கள் எனப் பிறப்பு முறைகள் வெவ்வேறாக க் கூறப்படுகின்றன.
மற்றொரு கதையும் உள்ளது. இராமன், உத்காதா என்னும் பூசாரிக்கும் கோசலைக்கும் பிறந்தவன்; இலக்குமணனும் சத்துருக்கனனும் பரிவிருத்தி என்னும் பூசாரிக்கும் சுமத்திரைக்கும் பிறந்தவர்கள்; பரதன், மற்றொரு பூசாரிக்கும் சுமத்திரைக்கும் பிறந்தவன் என்பது ஒரு கதை.
இவற்றுள் எதனைப் பாடமாக வைப்பார்கள்? எல்லாக் கதைகளிலுமுள்ள ஒற்றுமை தசரதனுக்கும் மனைவியருக்குமான உறவில் இராமன் முதலானோர் பிறந்தமையாகத்   தெரிவிக்காத துதான்.
கடவுளுக்குப் பிறப்பு கிடையாது. தாய்க்கும் அவரின் கணவர் அல்லாத மற்றொருவருக்கும் பிறந்தவரைக் கடவுளாகச் சொல்ல முடியாது  அல்லவா? 
கடவுளுக்கு இறப்பும் கிடையாது. ஆனால், இராமன் சரயு ஆற்றில் இலக்குவனை(இலக்குமணனை)த் தள்ளிக் காென்றுவிட்டுத் தானும் குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறான். அப்படியானால் கடவுளாகவோ கடவுளின் பிறப்பாகவோ இராமன் இருக்க முடியாதே! 
இராமன் பட்டத்து அரசனானால் அவனுடைய மனைவிமார்களின்  ஏளனத்திற்கும் ஆளாவாள் எனக் கைகேயியைக் கூனி எச்சரிக்கிறாள். இராமனின்  ஒற்றை மனைவி – ஏகப்பத்தினி – உடையவன் என்னும் பிம்பம் உடைந்து ஏகப்பட்ட பத்தினி உடையவன் என மக்கள் தூற்றமாட்டார்களா?
அன்னைக்கும் மேலாக அண்ணனை மதிப்பவன் இலக்குவன். அண்ணி சீதையையும் அன்னையாகப் போற்றுபவன். உடன்பிறப்புப் பாசத்திற்கு இராமன் இலக்குவனைத்தான் மக்கள் கூறுவர். மூத்த பிள்ளைக்கு இராமன் பெயரை வைத்தால் இளையவனுக்கு இலக்குவன் பெயரை வைப்பது மக்கள் வழக்கம்.
இராமன் காட்டிற்குச் செல்ல நேரிட்டதும் தன் அன்பு மனைவியைப் பிரிந்து உடன் செல்கிறான் பாசமிகு தம்பி இலக்குவன். ஆனால் இலக்குவன் பாசத்தினால் வரவில்லை; தன்மீதுள்ள காமத்தினால் வந்ததாகச் சீதை கூறுகிறாள்.இலக்குவனின் பாசம் பற்றிய நம்பிக்கையைத் தவறு என்பதா? பாசப்பார்வையைக் காமப் பார்வையாக நோக்கும் சீதையின் ஒழுக்கத்தில் ஐயப்படுவதா?
இலங்கையுடனான போருக்கு அடிப்படை சூர்ப்பனகையின் மூக்கு, காதுகள், மார்புக்காம்புகள் ஆகியவற்றை இலக்குவன் அறுத்துத் துன்புறுத்தியதுதான். காரணம், சூர்ப்பனகை, இராமன் தனியாக இருப்பதாக எண்ணி அவனைத் திருமணம் செய்து கொள்வதாகத் தெரிவித்ததுதான். ஒழுக்கமுடையவனாகப் போற்றப்படும் இராமன் தான் மணமானவன் என்பதை முதலிலேயே தெரிவித்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் தானும் உடன்படுவதுபோல் முதலில் பேசியிருக்கக் கூடாது. சீதை, குடிலில் இருந்து வெளியேவந்த பின், சூர்ப்பனகையும் சீதையும் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்கள். அப்பொழுதுதான் தனக்கு மணமான உண்மையைத் தெரிவிக்கிறான். அதுவரை இராமன் விளையாட்டிற்குப் பேசினானாம். காதற்சொற்களைப் பேசிவிட்டு விளையாட்டாகப் பேசியதாகக் கூறுவது ஏமாற்று வேலை அல்லவா? பாதிக்கப்பட்ட பெண்ணிற்குப் பரிகாரம் தண்டனை வழங்குவது என்பது கொடுமை அல்லவா? இராமனையும் இலக்குவனையும் எப்படி அறவடிவங்களாகக் கூறுவார்கள்?
பிறரின் தம்பியர் தத்தம் தமையன்மாருக்கு எதிராகத் திரும்பினால் உடன்பிறப்புப் பாசத்திற்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படும் இராமன் என்ன செய்திருக்க வேண்டும்? அவர்களிடையே ஒற்றுமை அல்லவா ஏற்படுத்தி யிருக்க வேண்டும். மாறாக அண்ணன்களைக் கொன்று ஆட்சியைப் பறித்து அரசாளத்தானே உதவி செய்துள்ளான். இதனைப் படிக்கும் மாணவர்கள், இராமனை எப்படி நல்ல அண்ணனாக எண்ணுவார்கள்?
இராமர் பாலம் கட்டுக்கதை என்பதை விரிவாகத் தனியாகப் பார்க்கலாம். ஆனால் புத்தத்துறவிகளையும் புத்த மடங்களையும் இராமாயணத்தில் படிக்கும் மாணவர்கள் பொய்யான இராமர் பாலத்தை வைத்து ஏய்ப்போரின் உண்மை முகத்தை அறிந்து கொள்வார்கள் அல்லவா? 
இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகும் அளவுள்ள உண்மைகளைப் படிப்பவர் உணர்ந்தால் இராமனின் புகழ் மங்கும். அப்படி யென்றால் நமக்கு ஒன்றும் இல்லை. மாறாக, மதவெறியைத்தூண்டுவதற்காக இராமனின் பாடம் என்றால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது நம் அனைவரின் முதற்கடமை!

— குவியாடி

ஒளவை தி.க.சண்முகம் பெருமங்கலம் 106, சென்னை


அகரமுதல

ஒளவை தி.க.சண்முகம் பெருமங்கலம் 106, சென்னை

சங்கரதாசு சுவாமிகள் நினைவு மன்றம்

சித்திரை 13, 2049 வியாழன் ஏப்பிரல் 26, 2018 மாலை 5.30

இடம் – இராகசுதா அரங்கம், மயிலாப்பூர்,

சென்னை 600 004

கலை மேதை விருதுகள்,
தமிழ்ச் சான்றோர் விருதுகள்,
சுவாமிகள் நினைவு சிறப்பு விருதுகள், 
நூற்றாண்டு நினைவு விருதுகள் வழங்கல்

திருக்குறள் திருவிழா, திருச்சிராப்பள்ளி


திருக்குறள் திருவிழா, திருச்சிராப்பள்ளி

திருக்குறள் திருவிழா, திருச்சிராப்பள்ளி

திருக்குறள்திருமூலநாதன் அறக்கட்டளை

21 ஆம் ஆண்டு மாநில அளவிலான
திருக்குறள் ஒப்பித்தல் போட்டி

சேவாசங்கம் மேனிலைப்பள்ளி, திருச்சிராப்பள்ளி
சித்திரை 18, 2049, செவ்வாய், மே 01,2018

பூவை பி.தயாபரன்

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

புத்தகங்களே படிக்கட்டுகள் – கவிஞர் மு.முருகேசு


புத்தகங்களே படிக்கட்டுகள் 


 வந்தவாசி அரசுக் கிளை  நூலக வாசகர் வட்டமும்  திரு அகிலாண்டேசுவரி மகளிர் கல்லூரியும் இணைந்து தேசிய நூலக வார வாசிப்பு விழிப்புணர்வு விழா நடத்தின.
இவ்விழாவில், சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குப் புத்தகங்களே என்றும் படிக்கட்டுகளாக அமைந்துள்ளன என்று நூலக வாசகர் வட்டத் தலைவரும் கவிஞருமான மு.முருகேசு குறிப்பிட்டார்.
   இவ்விழாவிற்குப் பங்கேற்ற அனைவரையும் கிளை நூலகர் பூ.சண்முகம் வரவேற்றார்.
  திரு அகிலாண்டேசுவரி மகளிர் கல்லூரியின் நூலகர் கே.கலாராணி, உதவி நூலகர் எசு.காந்திமதி, அரசுக் கிளை நூலகர் க.மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
  விழாவிற்குத் தலைமையேற்ற நூலக வாசகர் வட்டத் தலைவரும் கவிஞருமான மு.முருகேசு,  ’வாசிப்பால் உலகை நேசிப்போம்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:
”புத்தகம் வாசிப்புப் பழக்கத்தை இளம் அகவையிலேயே குழந்தைகளின் மனத்தில் விதைக்க வேண்டும். இன்றைக்குப்  பொதுவாகவே நமது வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பதிலேயே பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகின்றோம். படிப்பதைவிடப் பார்ப்பது நமக்குப் பிடித்தமானதாக மாறிப்போயிருக்கிறது.
இன்றைய குழந்தைகள் புத்தகம் படிப்பது, விளையாடுவது  என்பதையெல்லாம் மறந்து, கைப்பேசியைப் பயன்படுத்துவதிலும், கணிணியில். காணொளி ஆட்டங்களை  விளையாடுவதிலும் மிக அதிகமாக ஈடுபடுகிறார்கள். இதனால் இளம் அகவையிலேயே அவர்களின் சிந்திக்கும் ஆற்றல் தடைப்படுகிறது.
        ஒவ்வொரு மனிதனின் சிந்தனைக்கும் அறிவு வளர்ச்சிக்கும் புத்தக வாசிப்பே மிகுந்த பயனளிக்கும். குழந்தைகளைக் கோயில்களுக்கும் திரையரங்குகளுக்கும் பெற்றோர்கள் அழைத்துச் செல்வதைப் போல், நூலகங்களுக்கும் அழைத்துச் செல்ல வேண்டும். உலக அறிஞர்கள், இந்தியத் தலைவர்கள் நம்மோடு பேசுவதற்காகப் புத்தகங்கள் வழியே காத்திருக்கிறார்கள். பாடப்புத்தகம் படிப்பது மதிப்பெண் பெறுவதற்காக என்றால், மற்ற சமூக – கலை – இலக்கிய – வரலாற்று நூல்களைப் படிப்பது வாழ்வில் நம்மை உயர்த்திக் கொள்வதற்காகவே என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். சுவாசிப்பதால் வாழ்கிறோம்; புத்தகங்களை வாசிப்பதால் வளர்கிறோம் என்கிற எண்ணமிருந்தால், அனைவரும் புத்தகம் படிக்கிற நல்ல பழக்கத்தைக் கைக்கொள்ள முடியும். அண்ணல் காந்தியடிகள், பண்டித சவகர்லால் நேரு, சட்ட மேதை அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா போன்ற பல தலைவர்கள் புத்தகங்களின் வழியே சமுதாய மறுமலர்ச்சிக்கு புது வெளிச்சம் பாய்ச்சியவர்கள். அவர்கள் காட்டிய வழியில் நாம் புத்தகங்களை வாசிப்போம். சமுதாயத்தின் புதிய தலைமுறை வாசிப்பதனால் மட்டுமே விழிப்புணர்வை அடைய முடியும்” என்று குறிப்பிட்டார்.
  விழாவில், மாணவிகளுக்காக நடத்தப்பட்ட ’புத்தக விநாடி -வினா’வில் வெற்றிபெற்ற  திரு அகிலாண்டேசுவரி மகளிர் கல்லூரி மாணவிகள் எழில்வாணி, அன்புச்செல்வி, ஐசுவரியா, திவ்வியா, சிந்துசா, தெய்வானை, தி.சங்கீதா, இலக்கியா, இ லதா, பவித்திரா ஆகியோருக்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேசு, புத்தகப் பரிசுகளை வழங்கினார்.
 கல்லூரியைச் சேர்ந்த 192 மாணவிகள் நூலக உறுப்பினர்களாக இணைந்தனர்.
 நிறைவாக, வந்தவாசி அரசுக்கிளை நூலகர் சா.தமீம் நன்றி கூறினார். நூலக உதவியாளர் பு.நாராயணன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

வந்தை அன்பன்