வியாழன், 4 அக்டோபர், 2007

இராமர் பாலம்

சேது பாலமும் இராமர் பாலமும்

- இலக்குவனார் திருவள்ளுவன்

  தமிழ்நாட்டு வளத்திற்கு மட்டுமல்லாமல் பன்னாட்டு வணிகப் பெருக்கத்திற்கும் உதவுவது சேதுக்கால்வாய்த் திட்டம். மக்களாட்சியில் மக்கள் நலனுக்காகச் செயற்படுத்தப்படும் இத்திட்டத்தை இல்லாத பாலத்தின் பெயரால் பொல்லாதவர்கள் சிலர் உண்மையல்லாத காரணங்களைக் கூறித் தடுக்கப் பார்க்கின்றனர்.

1. இராமர் கடவுட் பிறவி.

2. இராமரால் கட்டப்பட்ட பாலம் மிகத் தொன்மையானது.

3. தொன்மையான பாலத்தை இடிக்கக் கூடாது.

4. கடவுளை இழிவுபடுத்தும் செயல்; என்றெல்லாம் கடவுள் பெயராலும் சமயத்தின் பெயராலும் திரித்துக் கூறி மக்களைப் பிரித்துக் குளிர்காய எண்ணுகின்றனர்.

  உண்மையில் இராமர் வாழ்ந்தாரா? அவர் கடவுள் பிறவியா? அவரால் பாலம் கட்டப்பட்டதா? அப்பாலம் 17.5 இலட்சம் ஆண்டுகள் தொன்மையானதா? என்றெல்லாம் கேள்விகள் கேட்டால் இதற்கு எதிர்வாதம் செய்ய இயலாதவர்கள் கூறிய பொய்களையே வலியுறுத்திப் போராட்டத்தில் ‘எப்பொருள் எத்தன்மையத்தாயினும் அப்பொருளின் மெய்ப் பொருளைக் காணும் அறிவு” என்னும் ஆயுத்ததைப் பயன்படுத்த மாட்டாதவர்களாக இருக்கிறார்கள்.

  ஏறத்தாழ 47 மொழிகளில் 117 இராமாயணம் இருப்பதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் அனைத்திலும் ஒரே மாதிரியான கதை இல்லை. உண்மையான வரலாறாக இருந்தால் இத்தனை முரண்பாடுகள் தேவையில்லை. இருப்பினும் முதலில் எழுதிய இராமாயணமான வால்மீகி இராமாயணத்தில் இராமரைக் கடவுளின் தோற்றமாகக் குறித்துள்ளாரா எனப் பார்த்தால் அவ்வாறு இல்லை. கதைக்காக்கூட அவர், கடவுள் இராமராக இந்த மண்ணில் தோன்றினார் என்று கூறவில்லை. மாறாக, ‘இந்திரனுடைய தம்பி விட்ணுவே பூமியில் மனித உருவில் தோன்றியது போல் இராமன் தோன்றினான்” (அயோத்தியா காண்டம்) என்றுதான் கூறுகின்றார். கடவுளைப் போலத் தோன்றியதாக வால்மீகி கூறினாலும் பாலகாண்டத்தில் பார்த்தால் இராமரின் பிறப்புக் கதை, அறிவுடையோரும் ஒழுக்கமுடையோரும் ஏற்கத்தக்கதாக இல்லை. யாகம் என்ற பெயரில், தசரதன் மனைவி கௌசல்யை உத்காதா என்ற பூசாரியுடன் இரவில் சேர்ந்திருந்ததால்தான் இராமனும் முறையே பிற மனைவியர் பிற பூசாரிகளுடன் சேர்ந்திருந்ததால்தான் பிற மூவரும் பிறந்துள்ளதாகத்தான் வால்மீகி கூறுகிறார். எனவே, கடவுளின் தோற்றம் அல்லது அவதாரமாகிய இராமரால் கட்டப்பட்ட பாலம் என்பது பொய்யே.

  இராமர் மனிதப் பிறவியாகவே இருக்கட்டும். அவரால் 17.5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலத்தை ஏன் இடிக்க வேண்டும் என்கிறார்களா? இராமரே புத்தருக்குப் பின் பிறந்தவர் என்னும் பொழுது அவரால் கட்டப்பட்ட பாலம் மட்டும் எவ்வாறு 17.5 இலட்சம் ஆண்டுகள் தொன்மையானதாக இருக்க இயலும்? வால்மீகி இராமாயணத்தில், புத்தர் முன்பு தங்கியிருந்த இடத்தில் தான் இப்பொழுது தங்கியுள்ளதாக விசுவாமித்திரர் கூறுவதாகவும் முடி சூட்டுவதற்காக இராமரை அழைத்து வருகையில் புத்தர் நினைவிடங்களையும் வலம் வந்ததாகவும், காட்டிற்குச் செல்லும் முன் புத்தத் துறவிகளுக்கும் தானம் செய்யுமாறு சீதையிடம் சொல்லியதாகவும், காட்டிற்குச் செல்லும் வழியில் இராமர் முதலானோர் புத்தர் நினைவிடத்தையும் பார்த்துக் கொண்டு சென்றதாகவும், இராவணன் புத்தத் துறவி வேடம் கொண்டுதான் சீதையைக் காண வந்ததாகவும், இலங்கையில் புத்த விகாரத்தின் அருகில் இருந்த மரத்தடியில் சீதையை அனுமன் கண்டதாகவும், இலங்கையில் புத்த விகாரங்களையும் அனுமன் இடித்துத் தள்ளியதாகவும், இராமர் வருகையைத் தெரிவிக்க வந்த அனுமன் நந்திக் கிராமத்தில் புத்தர் நினைவிடத்தையும் பார்த்ததாகவும், இராமர் வருவதைக் கேட்டு மகிழ்நத பரதன், புத்தர் மடங்களிலும் அருச்சனை செய்யுமாறு சொன்னதாகவும், பல இடங்களில் புத்தரின் நினைவிடங்கள் அல்லது புத்த மடங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. எனவே, இராமர் புத்தருக்குப் பிற்பட்டவர் எனத்  தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. எனவே, புத்தரின் மறைவிற்குப் பின் - அதாவது கி.மு.ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்தான் இராமர் வாழ்ந்திருக்க வேண்டும். கி.மு.ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின் வாழ்ந்த இராமரால் கட்டப்பட்ட பாலம் மட்டும் எவ்வாறு 17.5 இலட்சம் ஆண்டுகள் தொன்மையானதாக இருக்க இயலும்? அறிவுடையோர் சிந்திக்கட்டும்.

  தொன்மையோ இல்லையோ இராமரால் கட்டப்பட்ட பாலத்தை எப்படி இடிக்கலாம் என்கின்றார்களா? தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையே பாலம் கட்டப்பட்டது என்றால், அடியில் கடல்நீர் செல்லும் வகையிலும் மேலே இரு நிலப்பகுதிகளையும் இணைக்கும் வகையிலும் கட்டப்பட்டதாகப் பாலம் இருக்க வேண்டும். ஆனால், வால்மீகி, யுத்த காண்டத்தில், குரங்குகள் பல்வேறு மரங்களை வேரொடு பிடுங்கிக் கொண்டுவந்து குவித்தும் பாறைகளையும் சிறு குன்றுகளையும் பெயர்த்து எடுத்து வந்து போட்டும் கடல்நீரில் பாலத்தை அமைத்ததாகக் கூறுகின்றார். இவ்வாறு கடலின் இடையே அமைப்பது தடுப்பாக இருக்குமேயன்றிப் பாலமாக இருக்காது. ஆனால், உண்மையில் இந்தப் பகுதியில் சுண்ணாம்புக் கற்களால் ஆன மேடுகள்தாம் உள்ளன. சுணணாம்பு மேட்டிற்கும் கற்பாறைக் குவியலுக்கும் வேறுபாடு தெரியாதவர்கள்தாம் இதனை இராமர் பாலம் என்கின்றனர்.

  மேலும், வாலி என்றால் தூய்மையானவன் எனப் பொருள். இதனைப் புரியாமல் வால் உள்ளவனாக வாலியைப் படைத்தது போல் மனிதருக்கு இணையான வடிவத்தில் குரங்குகளைப் படைத்து அவை பேசுவதுபோலும் குடும்பம் நடத்துவது போலும் பறப்பது போலும் கூறுவதில் இருந்தே இராமாணயம் ஒரு கற்பனைக் கதைதான் என்று புரியவில்லையா? அனுமனால் மருத்துவ மலையையே பெயர்த்து எடுத்துப்பறந்து வர முடியும் என்னும் பொழுதும் இராம இலக்குமணரைத் தோளில் சுமந்து பறந்து செல்ல முடியும் என்னும் பொழுதும் பாலம் கட்டவேண்டிய தேவையே இல்லையே. எனவே, கட்டாத பாலம் குறித்து வெட்டிப் பேச்சுப் பேசி பொருள் வளத்தை இழக்கலாமா?

  மேலும், இராமர் கட்டிய பாலத்தின் அகலம் 80 கல் என்றும் நீளம் 800 கல் அளவு என்றும் வால்மீகி குறிப்பிடுகின்றார். ஆனால் இத்தகைய நெடுந்தொலைவு கடலுக்கும் இலங்கைக்கும் இடையே என்றைக்குமே இருந்ததில்லை. மேலும் 17.5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு குமரிக்கண்டமாகத் திகழ்ந்த காலத்தில் கடலால் இப்பகுதி பிரிக்கப்படவுமில்லை. ஒரே நிலப்பரப்பில் கடல்கோளாலும் நிலப் பெயர்வாலும்தான் இடையே கடல் புகுந்ததே தவிர, அதற்கு முன்பு இல்லாத கடலின் மேல் பாலம் கட்டவேண்டிய தேவையே இல்லை. எனவே, தொன்மை எனக் கூறி ஏமாற்றுவோரும் அதனை நம்பி ஏமாறுவோரும் புவியியல் வரலாற்றைப் படித்துத் தங்களைத் தாங்களே திருத்திக் கொள்ள வேண்டும்.

  எப்படி இருந்தாலும், இந்துக்களின் கடவுளான இராமரை இழிவு படுத்துவதாகப் பாலத்தை இடிப்பது அமையும் என்கின்றார்களா? இராமர் கடவுள் அல்லது கடவுளின் தோற்றம் என்பதுதான் பொய் என்று முதலில் பார்த்தோம். அதே போல் இராமர் இந்துக்களின் காவலராகவும் ஆட்சி செய்யவில்லை. பிராமணச் சாதியின் தவறான நெறிகளைக் காக்கவென்றே இராமர், நாட்டிலும் காட்டிலும் படுகொலைகள் புரிந்துள்ளார். ‘பிராமணியத்திற்கு எதிராய்ச் செயல்பட்டு யாகங்களை எதிர்த்த உத்தமி தாடகையை” இராமர் கொன்றதாகவும் வேள்விக்கு எதிரானவர்களையே அழித்ததாகவும் பிராமணர்களைக் காக்கவென்றே தாம் பிறந்ததாகப் பல இடங்களில் இராமர் கூறுவதாகவும், இராமாயணத்தில் உள்ளன. எனவே, குறிப்பிட்ட சாதி ஒன்றின் நலனுக்காவே வாழ்ந்த இராமரை எப்படி, அனைத்துச் சாதியினருக்கும் அனைத்துச் சமயத்தினருக்கும் ஏற்ற தலைவராகக் கூற இயலும்?

  இராமாயணம் என்பது பிராமணீயத்தைப் போற்றுதற்காகவும் அதனை எதிர்க்கும் புத்தத்தையும் நாத்திகக் கருத்துகளையும் எதிர்ப்பதற்காகவும் படைக்கப்பட்டக் கற்பனைக் காவியம். அதில் இராவணன் முதலான வரலாற்று மாந்தர்கள் இடம் பெற்றதாலேயே அது வரலாறாகி விடாது. இதனைப் புரிந்து கொள்ள இயலாதவர்களுக்கு ஒரு விளக்கம். ஓர் எழுத்துப் பெயர் கொண்ட எழுத்தாளர் ஒருவர் தன்னுடைய நாலெழுத்துப் பெயர் கொண்ட இதழில் அவ்வப் பொழுது தொடர்கதை என்ற பெயரில் சில எழுதி வருகிறார். அவற்றுள் இக்காலத்தில் வாழ்ந்து வரும் தலைவர்களும் கதைப் பாத்திரங்களாக வருவார்கள். கற்பனைப் பாத்திரங்களும் வருவார்கள். கிண்டலாகவோ நகைச்சுவையாகவோ கூறுவதாக எண்ணி மக்களும் அதனைப் பெரிதுபடுத்துவது இல்லை. இக்கதைகளில் உண்மையாய் வாழும் தலைவர்களைப் பற்றிய குறிப்புகள் இருப்பதாலேயே பிற கற்பனைக் கதைப் பாத்திரங்களையும் வரலாற்று மாந்தராகக் குறிக்க இயலுமா? அல்லது கற்பனைக் கதைப் பாத்திரங்கள் உள்ளமையால், இவற்றுள் குறிப்பிடப்படும் வரலாற்றுத் தலைவர்களும் கற்பனைப் பாத்திரங்கள்தாம் என்று கூறு இயலுமா? வரலாற்றைத் திரிப்பதற்காகக் காலங்காலமாக ஆரியர்கள் செய்யும் சூழ்ச்சி இது.

  சூழ்ச்சி வலையில் சிக்கி உண்மையாய் நடைபெற்ற தமிழர்-ஆரியர் போராட்டத்தை மையமாகக் கொண்டு தமிழரை ஆரியர் அடிமைப்படுத்தியதாகக் காட்டும் வகையில் தென்தமிழ் வேந்தரான இராவணனை இராமன் அழித்தாகக் கூறும் கற்பனைக் கதையை மெய்யே என நம்பலாமா? வடநாட்டு மன்னர்களைத் தமிழர் வென்றதாக வரலாறு உள்ளதே தவிர, தென்தமிழ் நாட்டை வடவர் வென்றதாக வரலாறே இல்லை. அவ்வாறிருக்கத் தென்தமிழ்நாட்டையும் கடந்து தென்னிலங்கைவரை சென்று இராமர் இராவணனை அழித்திருக்கத்தான் இயலுமா? வடக்கே இருந்து வந்த மோரியரைத் தமிழ் மன்னர் அடித்து விரட்டியது போல் இராமரால் உருவாக்கப்பட்ட படையையும் தமிழ் மன்னர்கள் விரட்டியடித்து இருக்கமாட்டார்களா? தமிழரை வீரத்தால் வெல்ல இயலாதவர்கள் கதை மூலமாவது வென்றது போல் காட்ட உருவான கற்பனைக் கதையை வரலாற்று நிகழ்வுகளாக எண்ணித் தமிழர்கள் தம்மையே இழிவுபடுத்திக் கொள்ளலாமா? தமிழர்கள் மட்டுமல்ல, உண்மை வரலாற்றைப் போற்றும் எவருமே ஏற்க இயலாக் கதையல்லவா இராமாயணக் கதை. அக்கதையில் பாலம் கட்டப்பட்டதாக வந்ததால் கடலில் இருக்கும் தடைமேட்டை அகற்றுவது மக்கள் நலனுக்கு ஏற்றதுதானா?

  உண்மையிலேயே அப்படி ஒரு பாலம் இருந்திருந்தால் இப்பொழுது பயன்பாட்டில் இல்லாத அப்பாலம் இருந்தென்ன? மறைந்தென்ன? பயன்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லாத ஒரு மேட்டுப்பகுதியை அகற்றுவதன் மூலம் பயன்பாடு கிடைக்கின்றது என்றால் அதை வரவேற்பவர்கள்தானே மக்கள் நலக் காவலர்களாய் இருக்க இயலும்? வரலாற்று அறிஞர்களும் அறிவியல் அறிஞர்களும் கூறுவதை ஏற்க மாட்டார்கள் என்றுதான் பண்டித நேருவின் கருத்தையே சான்றாகக் கொண்டு இராமர் என்னும் கற்பனையைக் கலைஞர் அவர்கள் விளக்குகையில் அவருக்கு விலைபேசுவோரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தாமல் வழக்கு மன்றத்தில் உண்மை கூறிய தொல்லியல் துறை அதிகாரிகளைப் பணியிலிருந்து இடை விலக்கம் செய்வது முறையாகுமா?


திங்கள், 10 செப்டம்பர், 2007