செவ்வாய், 15 ஜனவரி, 2013

மாட்டுப் பொங்கலின் நினைவலைகள்

"ஆட்டோகிராப்' பட்டம் சூடும் மாட்டு ப் பொங்கல்

"டிவி' முன் பொழுதை கழித்து, பண்டிகைகளை பகல் கனவாய் கழித்து வரும், இந்த தலைமுறைக்கு, நம் பாரம்பரியத்தை கூட, நினைவூட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இது ஒரு வகையில் வேதனையான விஷயம் என்றாலும், நிகழ்வுகளை முன்வைக்கும் போது, இதைப் படித்தாவது, பாரம்பரியத்தை அறிந்து கொண்டால், சந்தோஷம் தானே!

கிராமங்களிலும் நுழைந்த "டிவி', நம் கலாசாரத்தை கரையானாய் கரைத்ததன் விளைவு, மாட்டு பொங்கல் பண்டிக்கைக்கும் "ஆட்டோகிராப்' பட்டம் சூட்ட வேண்டிய கட்டாயம்.

இதோ கிராமங்கள் தொலைத்த இந்த பொங்கல் பண்டிகை குறித்து ஒரு நினைவூட்டல்:காலை முதல் மாலை வரை தொடரும் மாடுகளின் வழக்கமான மேய்ச்சல் முறை, பொங்கல் அன்று மாறுபடும். அறுவடை முடிந்த புஞ்சை நிலத்தில், காலையில் மட்டும் மேய்ச்சலுக்காக மாடுகள் அவிழ்த்துவிடப்படும். மதியம், அறுவடை முடிந்ததால், அரை, குறை தழும்பலில் நிற்கும் கண்மாயில், மாடுகளுக்கு "காக்கா குளியல்' நடக்கும். கரையேறிய பின், வண்ண பொட்டிட்டு, கொம்புகளில் சொட்ட, சொட்ட விளக்கு எண்ணெய் காப்பு நடக்கும்.

கதம்ப மாலைகள், மாடுகளின் கழுத்தை கட்டிக் கொள்ளும். அவற்றை ருசிக்க முயன்று, முடியாத விரக்தியில் மாடுகள் மவுனமாகும். இன்னும் சிலர், தன் கட்சி செல்வாக்கை காட்ட, மாடுகளின் கொம்புகளில், கட்சிக் கொடிகளின் வண்ணம் தீட்டி, மாடுகளை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முயல்வர்.வீடுகளுக்கு மாடுகளை அழைத்துச் செல்லும் விவசாயி, கதிரவனுக்கு பூஜை செய்து, மாடுகளுக்கு பொங்கல் படைப்பார். அந்த சமையத்தில் பொங்கல் பொங்கும் போது, அந்த வீட்டார் மட்டுமின்றி, எதிர் வீட்டாரும் சேர்ந்து குலவையிடுவர். பூஜை முடிந்த கையோடு, தான் எந்த கட்சியில் இருக்கிறோம் என்பதே தெரியாமல், பல்வேறு கட்சிகளின் வண்ணங்களை சுமந்த மாடுகள், ஊர் பொது திடலில் கூட்டணி அமைத்து, நிற்கும். "வெட்டிய கரும்பு, வேட்டி, துண்டு, பணம் படைத்தவராய் இருந்தால், சிறு பணமுடிப்பு,' போன்றவற்றை, மாட்டின் கழுத்தில் கட்டிவிடுவார் உரிமையாளர். சிலர், தங்களுக்கு பிடித்தமான மாடுகளுக்கு, வேட்டி, துண்டு கட்டி, மரியாதை செய்வதும் நடப்பதுண்டு. அதுவரை அடியும், உதையும் வாங்கிய மாடுகள், பொங்கலன்று உரிமையாளர் காட்டும் பாசத்தில், ஆனந்த கண்ணீர் வடிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் போது, அவற்றை விரட்டி விடுவர்.

ஒரே நேரத்தில் ஓடும் மாடுகளை, இளைஞர் பட்டாளம் பின்தொடர்ந்து ஓடும். மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள பரிசுகளை அவிழ்ப்பவருக்கு, பொருட்கள் சொந்தமாகும். மாடுகளுடன் மந்தை ஓட்டம் நடத்திய இளைஞர்கள், பரிசுகள் கிடைத்த மகிழ்ச்சியை ஒயிலாட்டம் ஆடி வெளிப்படுத்துவர். இரவில், ஊருக்கு ஏற்றார் போல், நாடகமோ, கரகாட்டமோ நடக்கும். இது தான், 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களில் நடந்த மாட்டு பொங்கல்

தற்போது, கிராமங்களை யே காணவில்லை; பிறகு எங்கே மாட்டு பொங்கலை பார்ப்பது? வயல்வெளிகள், ரியல் எஸ்டேட் ஆக மாறிய பின், விவசாயம் குறைந்தது. டிராக்டர் வந்த பின் மாடுகள் குறைந்தது. மாடுகள் குறைந்ததால், மனித உழைப்பு குறைந்தது. நம் பாரம்பரியமும் குறைந்து வருகிறது. அழுத்தமான இந்த "ஆட்டோகிராப்', பாரம்பரியத்தை தொலைத்த நமக்கு ஆறுதல் தரட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக