வியாழன், 14 பிப்ரவரி, 2013

கழிவை க் கலையாக மாற்றலாம்!

கழிவை க் கலையாக மாற்றலாம்!

உபயோகமற்ற பொருட்களை, கலை வடிவமாக மாற்றும், கைவினைக் கலைஞர், புவனேஸ்வரி: அப்பா, லாரிக்கு தகரம் கட்டும் தொழிலாளி. சென்னையில் வேலை கிடைத்ததால், குடும்பத்தோடு கும்பகோணத்திலிருந்து மாற்றலானோம். 9ம் வகுப்பு படிக்கும் போது, தமிழ் வார இதழின் ஓவியத்தை, தத்ரூபமாக வரைந்து அப்பாவிடம் காட்டினேன். அப்பா பாராட்டி, "நீ அலங்கார ஓவியமாக இதை செய்தால், இன்னும் அழகாக இருக்கும்' என, என் செயலுக்கு பிள்ளையார் சுழியிட்டார். அன்று முதல், கிடைக்கும் ஓய்வு நேரங்களில், அலங்கார பொருட்கள் செய்வதை, பழக்கப்படுத்தினேன். "பொம்பளை பொண்ணு, வீட்டு வேலை, சமையல் வேலை செய்யாம, சும்மா இந்த வேலையே செய்றே'ன்னு, அம்மா திட்டாமல், என்னை ஊக்கப்படுத்தி, என் அலங்காரப் பொருட்களை ரசிப்பார்.பேப்ரிக், கிளாஸ், ரிவர்ஸ் கிளாஸ், மியூரல், செராமிக் என, பல பெயின்டிங் வகைகள் செய்வேன். டெக்ஸ்டைல் பிரின்டிங், மலர் கொத்து, காகிதப் பை, அலங்கார காகித நகைகள், வாழ்த்து அட்டைகள், முகமூடி தயாரித்தல் என, பலவற்றையும் கற்றேன்.உடைந்த கண்ணாடி வளையல் முதல், தேங்காய் சிரட்டை வரை, உபயோகமற்ற கழிவுப் பொருட்களை, கலை வடிவமாக பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தில், சணல் சுற்றிய கொட்டாங் குச்சியில் பொக்கே, தேங்காய் நாரில் குருவி கூடு, வேஸ்ட் பேப்பர் ரோலில் பென் ஸ்டாண்டு, உடைந்த வளையல் துண்டுகளை சேவல் போன்ற வடிவங்களாக மாற்றுவது என, நுற்றுக்கும் மேற்பட்ட அலங்காரப் படைப்புகளை உருவாக்கி, கண்காட்சியாக வைத்தேன்.கண்காட்சியை பார்த்து, பலர், என்னை பாராட்டியது, அம்மாவை நெகிழ வைத்தது. பின், மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டால், அப்பா இறந்து விட்டதால், குடும்ப பொறுப்பை ஏற்றேன். "புவனேஸ்வரி கிரியேட்டிவ் வேல்ட்' என்ற பெயரில், எனக்கு தெரிந்த கலைத் திறனை மற்றவர்களுக்கும் கற்று தருகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக