செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

சமணர் பள்ளியைக் காக்க முன்வருவார்களா?

 
மதுரையில் அழியும்  தொன்மைச் சின்னம்: இனியாவது காக்க முன்வருவார்களா?
தொல்லியல்துறை பராமரிப்பில் உள்ள, தேசிய புராதனச் சின்னமான, "சமணர் பள்ளி' முற்றிலும் அழியாமல் பாதுகாக்க, உடனடி நடவடிக்கை தேவை என்ற கருத்து எழுந்துள்ளது.

மதுரை- செக்கானூரணி இடையே, கொ.புளியங்குளத்தில், சமணர்கள் வாழ்ந்த புராதன இடம் இருக்கிறது. ரோஜா நிறத்தில் அமைந்த பாறைகளால் ஆன மலையில், இங்கு, கி.மு., முதல் நூற்றாண்டில் சமணர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் உள்ளன. சமணர்கள் உறைவிடமாக இருந்ததற்கு அடையளாமாக, 50 கல் படுக்கைகளும் உள்ளன.இங்கு, பிராமி கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. சோழவந்தான் பகுதியில் அமைந்த, "பாகனூர்' என்ற பெயரும், கல்வெட்டில், குறிப்பிடப்பட்டுள்ளது. சமண துறவியர் தங்கிய இவ்விடத்தை, "சமணப்பள்ளி' என்று அழைப்பர். கி.பி., 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரரின் புடை சிற்பம் ஒன்றும், வட்டெழுத்து கல்வெட்டுடன் காணப்படுகிறது.தொல்லியல் துறை வசம் உள்ள இது, முறையான பராமரிப்பின்றி சீரழிந்து வருகிறது. காதலர்கள் பொழுது போக்கு இடமாக மாறியதால், பலர் தங்கள் பெயரை, உளி கொண்டு பதிவு செய்து, அதன் பெருமையை சீர்குலைக்கின்றனர்.

சமணர் படுக்கையில் ஒய்யாரமாக படுத்து, "குடி'மகன்கள் மது அருந்துவதும் வழக்கம். சமீபத்தில், "மாமதுரை போற்றுதும்' விழா நடந்தது. அதில் இப்புராதனச் சின்னம் நாள் தோறும் அழிந்து வருவதைப் பற்றி, முக்கிய முடிவுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் , யாரும் இதைப் பாதுகாக்க வலியுறுத்தி அவ்விழாவில், கருத்து தெரிவிக்கவில்லை. இனியாவது, இப்பகுதியை சமூக விரோதிகளும், மற்றவர்களும் அழிப்பதைத் தடுக்க சுற்றுச் சுவர் எழுப்பி தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும். வரலாற்றுப் பெருமையை அறிய விரும்பும் அனைவரும், பார்வையிட வசதியாக, முறையான நுழைவாயில், அதில் இந்த சமணப்பள்ளியின் சிறப்புகள் அடங்கிய தகவல்களை, விளம்பரப் படுத்த வேண்டும். அப்படிப் பாதுகாத்தால், மாமதுரை என்ற பெயருக்கு ஏற்ப, வரலாற்றுச் சின்னம், இனி பிழைக்கும் என்ற கருத்து பரவலாக எழுந்திருக்கிறது.
-தினமலர் செய்தியாளர்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக