சனி, 16 மார்ச், 2013

கேரளாவில் முல்லை - பெரியாற்றில் புதிய அணை கட்ட ரூ.50 கோடி ஒதுக்கீடு

கேரளாவில் முல்லை - பெரியாற்றில் புதிய அணை கட்ட ரூ.50 கோடி ஒதுக்கீடு
கேரளாவில் பட்ஜெட் தாக்கல்: முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட ரூ.50 கோடி ஒதுக்கீடு
திருவனந்தபுரம், மார்ச். 16-

கேரள சட்டசபையில் 2013-2014-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி கே.எம். மானி தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

கேரளாவில் வாழும் சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும் என்ற எண்ணத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறு விவசாயிகளுக்கு விவசாய கடன் மீதான வட்டி தள்ளுபடிக்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேருக்கு குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

விவசாய கடனுக்கு காப்பீடு வழங்கப்படும். கடன் பெற்ற விவசாயி இறந்து விட்டால் கடனை திருப்பி செலுத்த தேவையில்லை. அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 56-லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரிகள் 13.5 சதவிகிதத்தில் இருந்து 14.5 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.650 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

கேரளாவில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களும் நவீனப் படுத்தப்படும். பிளாஸ்டிக்கை பயன்படுத்தி சாலைகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கப்படும். மத்திய கேரளாவில் புற்றுநோய் சிகிச்சைக்கு நவீன மருத்துவமனை அமைக்கப்படும்.

முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட ரூ.50 கோடி ஒதுக்கப்படும். குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மாநிலம் முழுவதும் 7 ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும். இதற்காக ரூ.400 கோடி நிதி ஒதுக்கப்படும். நிலத்தை வாங்கி 3 மாதத்திற்குள் மறு விற்பனை செய்தால் பத்திரப்பதிவு கட்டணம் இரு மடங்காக வசூலிக்கப்படும்.

பீடி தவிர மற்ற புகையிலை பொருட்களுக்கான வரி 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்படும். பீர், ஒயின் மற்ற மதுபான வகைகளுக்கு 105 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும். இதன் மூலம் ரூ.280 கோடி கூடுதல் வருவாய் அரசுக்கு கிடைக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக