ஞாயிறு, 31 மார்ச், 2013

பழநி அருகே 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு, சிலை, பீடம் கண்டுபிடிப்பு




பழநி அருகே 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு, சிலை, பீடம் கண்டுபிடிப்பு

பழநி: பழநி அருகே, வீரக்குளத்தில், 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு, சிலை, பத்ம பீடம் கண்டுபிடிக்கப்பட்டன. பழநி அருகே, ஆயக்குடி ஊர் எல்லையிலுள்ள, வீரக்குளத்தில், வரலாற்று ஆய்வாளர் கன்னிமுத்து, ஆசிரியர்கள் மூவர் கொண்ட குழு, ஆய்வு மேற்கொண்டது. அங்கு, 12ம் நூற்றாண்டை சேர்ந்த, அழிந்து போன கோவிலைக் குறிக்கும் கல்வெட்டுகள், சிலை, பத்ம பீடம் கண்டுபிடிக்கப்பட்டன. ஆய்வாளர் கன்னிமுத்து கூறியதாவது: வீரக்குளத்தில் அழிந்து போன கோவிலை குறிக்கும் கல்வெட்டுகள் கிடைத்தன. சில சிதைந்த நிலையிலும், 10 வரிகளைக்கொண்ட ஒரு கல்வெட்டும் கிடைத்துள்ளது. அது, கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்தது. ஆயக்குடி பட்டளத்து விநாயகர் கோவிலுக்கு, பெரிய திருமண்டபம் அமைத்து கொடுத்த செய்தியை தெரிவிக்கிறது. குளத்தின் மதகு ஓரத்தில், கோவிலின் அழிந்து போன பகுதிகள் சிதறிக் கிடக்கின்றன. மயில் மேல் முருகன் அமர்ந்த நிலையில் உள்ள சிலை, பத்ம பீடம் ஆகியவையும், சேதமடைந்த நிலையில் உள்ளன. இங்கு தனிக்கோவில் இருந்ததா அல்லது ஆயக்குடி சோழீஸ்வரர் கோவிலைச் சேர்ந்த பகுதிகளா என்பது குறித்து, ஆய்வு நடக்கிறது. கல்வெட்டில், தேசி விநாயகப் பிள்ளையார், நானா தே திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர், ஆயிரவர் ஆகிய பண்டைய வணிகக் குழுக்களின் வார்த்தைகள் உள்ளன. "தேசி' என்ற வார்த்தை, வணிக குழுக்களுடன் தொடர்பு உடையது. இவ்வாறு, அவர் கூறினார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக