திங்கள், 18 மார்ச், 2013

இலங்கையில் தமிழர்கள் சிந்திய இரத்தம் வீண் போகாது: வைகோ

இலங்கையில் தமிழர்கள் சிந்திய இரத்தம் வீண் போகாது: வைகோ



இலங்கையில் தமிழர்கள் சிந்திய ரத்தம் வீண் போகாது. மாறாக உலகத் தமிழர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
இலங்கை அதிபர் ராஜபக்சே மீதான மனித உரிமைக் குற்றங்களைக் கண்டித்து எண்ணூர் அசோக் லேலண்டு ஆலை தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்  நடைபெற்றது. இதில் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது,
1987-ல் இலங்கை அரசை எதிர்த்து திலீபன் உண்ணாவிரதம் இருந்து தனது உயிரை மாய்த்தார். அதன் பிறகு கிட்டு நடுக்கடலில் கொல்லப்பட்டார். கடந்த ஆண்டு இசைப் பிரியா கொல்லப்பட்டார். அன்றிலிருந்து இன்றுவரை இலங்கையின் அடாவடிகளை இந்திய அரசு கண்டித்தது உண்டா.  உலக நாடுகளில் போர்க்குற்றங்களுக்கு எதிராக பல  நாடுகளின் ராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனால் திட்டமிடப்பட்ட, கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலையை இலங்கை நடத்தியது. இதனைத் தட்டிக்கேட்க வேண்டிய இந்தியா இலங்கையைக் காப்பாற்ற உலக நாடுகளை ஒன்று திரட்டுகிறது. இதற்கு காரணம் இலங்கையில் இனப்படுகொலையை நடத்தியதே இந்தியாதான். இந்த துரோகம் 1987-லேயே தொடங்கிவிட்டது. இந்திய அமைதிப்படைத் தளபதியை சந்திக்க பிரபாகரன் வரும்போது அவரைச் சுட்டுக் கொல்லும்படி இலங்கைக்கான இந்தியத் தூதர் தீட்சித் மூலம் அப்போதைய இந்திய அரசு உத்தரவிட்டது. இது அத்தளபதி எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளை ஒழிப்போம் எனக் கூறிக்கொண்டு அப்பாவிப் பெண்கள், குழந்தைகள், முதியவர்களை கொண்டு குவித்துள்ளனர். இந்தியா ஆயுதம் வழங்கி, விமானத் தளங்களைப் புதிப்பித்து, ரேடார்கள் மூலம் கண்காணித்து இந்தியா உதவி செய்தது. அதனால் இந்தியாதான் இலங்கை இனப் படுகொலையை நடத்தியது என நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். இவ்வாறு நான் தெரிவித்து வரும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக தேச விரோத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் நான் தண்டிக்கப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன்.
இலங்கையில் தமிழர்கள் சிந்திய ரத்தம் வீண் போகாது. தமிழகத்தில் முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். இவர்களுடைய தியாகத்தையடுத்து  தற்போது மாணவர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் மூலம் ஈழத்தமிழர்களின் வாழ்வு முள்ளிவாய்க்காலோடு முடிந்துவிடவில்லை. தமிழர்களின் வாழ்வுரிமையை நிலை நாட்ட பொதுவாக்கெடுப்பு நடத்தி தனிஈழம்பெற உலக நாடுகள் முன் வர வேண்டும். இதற்கான முயற்சிகளை உலகத் தமிழர்கள் அனைவரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக