ஞாயிறு, 24 மார்ச், 2013

பன்னாட்டு வாக்கெடுப்புக்கு ச் சட்டமன்றம் தீர்மானம் - வைகோ

கட்டுப்பாடற்ற பன்னாட்டு வாக்கெடுப்புக்கு ச் சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: வைகோ

இலங்கையில் சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கும், தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பிற்கும்  தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சருக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள், பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், வயதில் மூத்தோர், தாய்மார்கள் ஈவு இரக்கமின்றி சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான இளம் பெண்கள் கொடூரமான கற்பழிப்பிலும், பாலியல் வன்முறையிலும் நாசமாக்கப்பட்டு அவர்களில் பலரும் கொல்லப்பட்டனர். முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னரும், இக்கொடுமைகள் இன்றளவும் தொடருகின்றன என்பதை அசைக்க முடியாத ஆதாரங்களுடன், சாட்சியங்களுடன் அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் பிப்ரவரி 26 ஆம் தேதி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
இத்தகைய துன்ப நரகத்திலிருந்து ஈழத்தமிழர்கள் விடுபட மானத்தோடும் உரிமையோடும் அமைதியாக வாழ, ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது, அது தான் சுதந்திரத் தமிழ் ஈழ தேசமாகும்.
இலங்கைத் தீவில் தமிழர்கள் பிரிவினை கேட்கவில்லை. இழந்த சுதந்திரத்தை மீண்டும் பெறுவதற்கே போராடுகிறார்கள். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அந்தத் தீவின் பூர்வ குடிமக்களான ஈழத் தமிழர்கள் சுதந்திரமான அரசுகளை ஆண்டு வந்தனர். 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய வருகைக்குப் பின்னரே, குறிப்பாக பிரித்தானியப் பேரரசின் ஆதிக்கத்திற்குப் பின்னரே தங்கள் சுதந்திரத்தை இழந்து, சிங்களவர்களோடு கட்டாயமாக இணைக்கப்பட்டனர்.
1948 பிப்ரவரி 4 முதல் சிங்களர் ஆதிக்கத்தின் கீழே ஈழத் தமிழர்கள் உரிமைகள் இழந்தனர். உரிமைக்காக அவர்கள் நடத்திய அறவழிப் போராட்டங்கள் துப்பாக்கி முனையில் நசுக்கப்பட்டன. அப்பொழுதே தொடங்கிவிட்டது இன அழிப்பு வேலை.
தமிழர் வழிபாட்டுத் தலங்கள் உடைக்கப்பட்டதும், கல்வி வேலை வாய்ப்பு அனைத்திலும் தமிழர்கள் நிராகரிக்கப்பட்டதும், தந்தை செல்வாவுடன் செய்த 1957, 1965 ஒப்பந்தங்களை கிழித்துக் குப்பையில் வீசியதும், இக்கொடுமைகள் தொடர்ந்ததும் தான், 1976 மே 14 இல் பன்னாகம் வட்டுக்கோட்டையில், இறையாண்மையுள்ள சுதந்திர தமிழ் ஈழ தேசம் என்று அனைத்துத் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து தந்தை செல்வா பிரகடனம் செய்ய காரணம் ஆயிற்று.
சிங்கள அரசின் முப்படைகளின் பயங்கவாத தாக்குதலை எதிர்கொள்ளவே தமிழ் ஈழ விடுதலைப் புலிகள், தமிழ் தேசியத் தலைவர் பிரபாரகன் அவர்கள் தலைமையில் ஆயுதப்போரை முன்னெடுத்தனர்.
இந்திராகாந்தி அம்மையார் காலத்திற்குப் பின்னர், காங்கிரÞ தலைமையிலான இந்திய அரசு, ஈழத் தமிழர்கள், விடுதலைப் புலிகள் விருப்பத்திற்கு மாறாக, அன்றைய இந்திய அரசியலில் ஏற்பட்ட போபர்Þ பேர ஊழல் சிக்கலில் இருந்து மக்கள் கவனத்தைத் திசை திருப்ப இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் திணித்தது. ஒப்பந்தத்தின் மை காய்வதற்குள்ளாகவே, சிங்கள அதிபர் ஜெயவர்த்தனே வடக்கு-கிழக்கு இணைப்புக்கு எதிர்ப்பு என அறிவித்தார்.
நீதி கேட்டு, துளி நீரும் பருகாமல் உயிர் நீத்தான் திலிபன். புலிப்படையின் வீரமிக்க தளபதிகள் 12 பேர் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டனர். அதைத் தடுக்கின்ற வாய்ப்பு இருந்தும், இந்திய அரசு துரோகம் செய்தது. அமைதிப்படை அமளிப்படை ஆயிற்று. புலிகளும், தமிழர்களும் கொல்லப்பட்டனர். ‘வல்வெட்டித்துறை இந்தியாவின் மைலாய் ஆகிவிட்டது’ என்று டைம்Þ பத்திரிகை குற்றம் சாட்டியது. புலிகளின் முன்னணித் தளபதி கிட்டு சர்வதேசக் கடலில் இந்தியக் கடற்படையால் சாகடிக்கப்பட்டார்.
1998 ஆம் ஆண்டு, அன்றைய இந்தியப் பிரதமர் வாஜ்பாய் அவர்கள், இலங்கைக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதில்லை என்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவெடுத்தார்.
2004 காங்கிரÞ கட்சி தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஈழத் தமிழர்களை இனப்படுகொலையைச் செய்ய, சிங்கள அரசுக்கு அனைத்து வகையிலும் உதவியது. கொடியவன் இராஜபக்சே அரசுக்கு முப்படை ஆயுதங்களையும் வழங்கி, இந்தியத் தளபதிகளை அனுப்பி  ஆலோசனை தந்து, தமிழ்க் குலத்தை அழிக்க முனைந்த கோரமான யுத்தத்திற்கு உடந்தையாக செயல்பட்டது.
தமிழகம் கொந்தளித்தது. வீரத்தியாகி முத்துக்குமார் உள்ளிட்ட 16 தமிழர்கள் அக்காலகட்டத்தில் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்தனர். இயல்பாக எழுந்த தமிழகத்தின் கொந்தளிப்பை தடுக்க, அன்றைய தி.மு.க. அரசு அடக்குமுறையை ஏவியது. தீக்குளிப்பு தியாக மரணங்களை காவல்துறையின் மூலம் கொச்சைப்படுத்தியது. போர் நிறுத்தம் என்ற கோரிக்கைக்கு மாறாக, யுத்தத்தை வேகமாக சிங்கள அரசு நடத்துவதற்கு இந்திய அரசு அனைத்து வழிகளிலும் உதவி இயக்கியது. இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
2009 ஆம் ஆண்டு மே இறுதியில் ஜெனீவாவில், ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் சிங்கள அரசை வெகுவாகப் பாராட்டி, 29 நாடுகளின் வாக்குகளைப் பெற வைத்து தீர்மானத்தை  நிறைவேற்றிய துரோகத்தை இந்திய அரசு செய்தது. கடந்த ஆண்டும் அதே துரோகத்தைச் செய்ய முனைந்தபோது, தமிழக முதல்வரும் அனைத்துக் கட்சிகளும் அதனை வெகுண்டு எதிர்த்ததால், வெளிப்படையாக துரோகம் செய்ய முடியாமல், அமெரிக்காவின் கவைக்கு உதவாத தீர்மானத்தையும் நீர்த்துக்போகச் செய்தது.
இந்த ஆண்டும் தமிழக மாணவர்கள் எரிமலையாக சீறி எழுந்த பின்னரும், தமிழக முதலமைச்சர் அவர்கள் மார்ச் 19 ஆம் தேதி சரியான வரலாற்று ஆதாரங்களோடு திட்டவட்டமான கோரிக்கையை மத்திய அரசுக்கு முன்வைத்த பின்னரும்கூட, அமெரிக்கத் தீர்மானத்தில் ஒப்புக்கு இடம்பெற்று இருந்த சுதந்திரமான பன்னாட்டு விசாரணை கோரிக்கையையும் நீக்கச் செய்தது.
தமிழக மாணவர்களின் அறவழிப் புரட்சி அனைத்துத் தரப்பு மக்களின் அறப்போராக தற்போது உருவெடுத்துள்ளது. ஈழத் தமிழர்களுக்கு விடியல் வேண்டும் என்ற குரல் எட்டுத் திக்கிலும் பலமாக ஒலிக்கிறது.
2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 தேதி, தமிழக சட்டப் பேரவையில் சிங்கள அரசுக்கு எதிராகவும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் ஒரு மகத்தான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்றைய நிலையில், உலகமெங்கும் வாழும் தமிழர்களும் மரண பூமியில் வதைப்பட்டுக்கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களும், தாய்த் தமிழகத்து மக்களும், குறிப்பாக மாணவர் உலகமும் வேண்டுவதெல்லாம் சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பும், இனப்படுகொலை நடத்திய சிங்கள அரசு மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணையும் தான்.
கரிய இரவுக்குப் பிறகு பொழுது விடிவது இயற்கையின் நியதி என்பது போல், ஈழத் தமிழர்கள் சுமக்கின்ற கொடும் துயரத்திற்குப் பின்னர், தமிழ் ஈழ தேச விடுதலை என்பது வரலாற்றில் நிகழ்ந்தே தீரும். அதனை விரைவு படுத்துவதும், அதற்குத் தோள் கொடுப்பதும் தொப்புள் கொடி உறவு தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டின் தலையாய கடமையாகும். எனவே, தமிழக முதலமைச்சர் அவர்கள் இதற்கான ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டுவந்து சரித்திரத்தில் அழியாத புகழ் தரும் கல்வெட்டாக ஆக்கித்தர வேண்டுகிறேன்.
இலங்கைத் தீவின் தமிழர் தாயகத்தில் அக்கிரமமாக கடந்த 60 ஆண்டுகளில் திணிக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும் வெளியேற்றப்படவும், தமிழர்களை துன்புறுத்தி வதைக்கும் சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவமும், போலிசும் வெளியேற்றப்படவும், தமிழர் வழிபாட்டுத் தலங்களின் அருகே அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகள் அகற்றப்படவும், சிங்களச் சிறைகளிலும், வதை முகாம்களிலும் விசாரணையின்றி அடைபட்டுக் கிடக்கும் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட  அனைத்து ஈழத் தமிழர்களையும் விடுவிக்கவும், வீடு வாசல் இழந்து உணவுக்கும், மருந்துக்கும் வழியின்றி துயர்படும் ஈழத் தமிழர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களும், ஐ.நா.மன்றமும் நேரிடையாக நிவாரணம் வழங்கவும், இனப்படுகொலை செய்த சிங்கள இராஜபக்சே அரசு மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடைபெறச் செய்யவும், போராடி விடுதலை பெற்ற பல நாடுகளில் அமைக்கப்பட்டது போன்ற ஒரு இடைக்கால நிர்வாகத்தை ஈழத்தமிழர்களைக் கொண்டே செயல்படுத்துவதற்கான ஏற்பாட்டை ஐ.நா.மன்றம் மேற்கொள்ளவும், ஐ.நா. சபையின் மனித உரிமை பிரகடனம் அங்கீகரித்த சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், ஈழத் தமிழர் தாயகத்தில் உலக நாடுகள் மேற்பார்வையில் இறையாண்மையுள்ள சுதந்திர ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடைபெறச் செய்யவும், உலகத்தின் பல நாடுகளில் வசிக்கின்ற புலம்பெயர் ஈழத் தமிழர்கள் அத்தகைய பொதுவாக்கெடுப்பில், அந்தந்த நாடுகளிலேயே தங்களது வாக்கை பதிவு செய்யவும் ஐ.நா. மன்றம் அதற்கான உரிய ஏற்பாட்டை செய்யவும் வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் ஒரு தீர்மானத்தை முதலமைச்சர் அவர்கள் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டுமென வேண்டுகிறேன்.
வரலாற்றின் பக்கங்களில் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் தொடர்ச்சியாக வடிக்கப்படும் புதிய பரிமாணமாக அத்தீர்மானம் சரித்திரத் திருப்பமாக அமையும் என்பதால், ஈழத்தமிழர் பிரச்சினையில் 2011 ஆட்சிக்கு வந்தது முதல் இலங்கைக்குப் பொருளாதாரத் தடை உள்ளிட்ட சரியான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் அவர்கள், துன்ப இருளிலே இருந்து ஈழத்தமிழர்களை மீட்டு அவர்களுக்கு விடியலைத் தரும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றிட வேண்டுகிறேன்.
- என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த பகுதியில் மேலும்

கருத்துகள்(4)

இந்த பிரிவினை வாத கருத்துக்கு தமிழக முதல்வர் செவி சாய்க்க கூடாது.வேறு என்ன தீர்மானம் வேண்டுமானால் கொண்டுவாருங்கள்.இந்த ரெபெரெண்டம் பற்றி நமது சட்டசபையில் தீர்மானம் கூடாது.இந்திய இறையாண்மைக்கு இந்த தீர்மானம் ஊறு விளைவிக்கும்.காஷ்மீர்,வடகிழக்கு பிரிவினை வாதிகள் கை ஒங்க நாம் மறை முகமாக ஆதரவு அளிக்க கூடாது..
கிளிக்காடு நீ போய் கிளிகோடு விளையாடு தமிழீழ மக்களின் உரிமையோடு விளையாடாதே
இனமான காவலர் திரு வைகோ அவர்கள் கூறுவதில் தவறு ஏதுமில்லை. காஷ்மீர், வடக்கு கிழக்கு தீவிரவாதம் தோன்றியதே காங்கிர்சால்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக