புதன், 27 மார்ச், 2013

தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்த சட்டசபையில் தீர்மானம்: செயலலிதாவுக்கு வைகோ பாராட்டு

தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்த சட்டசபையில் தீர்மானம்: செயலலிதாவுக்கு வைகோ பாராட்டு
தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்த சட்டசபையில் தீர்மானம்: ஜெயலலிதாவுக்கு வைகோ பாராட்டு
சென்னை, மார்ச் 27-

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈழத்தமிழருக்கு விடியல் ஏற்பட, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று, தமிழ்நாடு சட்டப் பேரவையில், தமிழக முதல் அமைச்சர் கொண்டு வந்து நிறைவேற்றி உள்ள தீர்மானம், வரலாற்றுப் புகழ்மிக்க சிறப்புக்கு உரியது ஆகும்.

துன்ப இருளில் துயரத்தில் பரிதவிக்கும் ஈழத்தமிழருக்கு, சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்றுதான் ஒரே தீர்வு ஆகும் என்பதால், 1976 மே 14 இல், வட்டுக்கோட்டையில், தந்தை செல்வா தலைமையில், ஈழத்தமிழர்கள் அனைவரும் கூடி ஒருங்கிணைந்து, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்காகச் செய்த பிரகடனத்தின் வழியிலும், பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் வீரம் செறிந்த போர் நடத்தி, உயிர்த்தியாகங்கள் செய்து, கட்டி எழுப்பிய தமிழ் ஈழத்தை, சிங்கள அரசு சிதைக்க முனைந்தபோதும், அதை நிர்மாணிக்கின்ற விதத்தில், தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி இருக்கின்ற தீர்மானத்துக்கு வரலாறு பொன் மகுடம் சூட்டும்.

சுதந்திரத் தமிழ் ஈழம் மலரத்தான் போகிறது. இதே தீர்மானத்தை, இந்திய நாடாளுமன்றமும் நிறைவேற்றும் நாள் வரும். அனைத்து உலகம், அதைச் செயல்படுத்தும் நாளும் வந்தே தீரும். விடியலின் வெளிச்சத்தைத் தரும் தீர்மானத்தை முன்வைத்து நிறைவேற்றிய, தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கும், தமிழகச் சட்டப்பேரவைக்கும், தரணி எங்கும் வாழும் தமிழர்கள் சார்பிலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளை, நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக