சனி, 23 மார்ச், 2013

இலங்கையில் நடக்கும் வாலாயநல (காமன்வெல்த்து) மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்: இராமதாசு

இன வேறுபாட்டுடன் நடந்து கொள்ளும் நாடுகளுடனே இது போன்ற உறவு முறிவு நிகழ்வுகள் உள்ளன. இனப்படுகொலை நாட்டில் நடக்கும்  நிகழ்ச்சியில் பங்கேற்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். மரு.இராமதாசின்  நல்ல கருத்தைப் புரிந்து கொள்ளாமல் வரலாறு தெரியாதவர்கள் பதிவதை எல்லாம் தினமணி வெளியிடத் தேவையில்லை.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

இலங்கையில் நடக்கும் வாலாயநல (காமன்வெல்த்து) மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்: இராமதாசு

இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கை இனப் படுகொலைகளுக்காக ராஜபட்சவை தண்டிக்கும் வகையில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கடுமையான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில், உப்புசப்பில்லாத தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கப் போராடுவதாகக் கூறி களமிறங்கிய அமெரிக்கா, இந்தியாவுடன் கை கோர்த்து,  தமிழர்களுக்கு மிகப் பெரிய துரோகத்தை செய்திருக்கிறது. ஈழத்தமிழர் படுகொலைக்கு நியாயம் கிடைக்கும் வகையில் அமெரிக்கத் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்; இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கூறி வந்த மத்திய அரசு, இந்த இரண்டையுமே செய்யாமல் தமிழர்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டது. இதை தமிழர்கள் ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தமிழர்களுக்கு சாதகமாக தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்ற போதிலும், அதற்காக தமிழர்களும், தமிழக மாணவர்களும் நடத்திய தன்னெழுச்சியான போராட்டம் வீணாகி விடாது. ராஜபட்ச தண்டிக்கப்படும் வரை தமிழகத்தின் உணர்ச்சிகரமான போராட்டம் தொடரும். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் உதவியுடன் தப்பித்துக்கொண்ட இலங்கை, அடுத்ததாக உலக நாடுகளின் ஆதரவு தமக்கு இருப்பதாக காட்டிக்கொள்ள காமன்வெல்த் மாநாட்டை நடத்த ஆயத்தமாகி வருகிறது. வரும் நவம்பர் 15 முதல் 17 வரை கொழும்பில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் காமன்வெல்த் தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அவர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாக காட்டிக்கொள்வது தான் ராஜபட்சவின் நோக்கமாகும்.
ஆனால், ஓர் இனத்தையே அழித்துவிட்டு உத்தமர் வேடம் போட முயலும் ராஜபட்சவின் முயற்சிக்கு துணை போகக் கூடாது என்ற எண்ணத்தில், இலங்கையில் தமிழர்கள் விரும்பும் மாற்றம் ஏற்படாத நிலையில், கொழும்பில் நடைபெறும் மாநாட்டில் கனடா பங்கேற்காது என அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் அறிவித்துள்ளார். அதேபோல் காமன்வெல்த் அமைப்பின் தலைவரான எலிசபெத் அரசியாரும், இங்கிலாந்து பிரதமர் கேமரூனும் இம்மாநாட்டை புறக்கணிப்பது குறித்து ஆய்வு செய்துவருகின்றனர்.
ஆனால், ஈழத்தமிழர் படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்பதற்காக இம்மாநாட்டை புறக்கணிக்க வேண்டிய இந்தியாவோ, இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக இலங்கைக்கு உதவி வருகிறது. பாகிஸ்தானில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுவிட்டதாகக் கூறி காமன்வெல்த் அமைப்பிலிருந்து  அந்நாடு பலமுறை நீக்கப்படுவதற்கு காரணமாக இருந்த இந்தியா, தற்போது கொலைகார நாடான இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கவேண்டும் என்று வலியுறுத்துவதை விடுத்து அந்நாட்டுக்கு ஆதரவாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தமிழர்களை ஏமாற்றிய மத்திய அரசு, இனியாவது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்.
இந்த விசயத்தில் இந்திய அரசுக்கு நெருக்கடி தரும் கடமை தமிழகத்திற்கு உள்ளது. இதுவரை இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி போராடி வந்த தமிழக மக்களும், மாணவர்களும், இனி இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் & காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட வேண்டும். மக்கள் எழுச்சியைக் கண்டு அஞ்சி மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் வகையில், நாட்டையே உலுக்கும் அளவுக்கு இப்போராட்டம் அமைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த பகுதியில் மேலும்

கருத்துகள்(3)

முதலில், தமிழ் நாட்டில் நடக்க வேண்டியதைப் பாருங்கள். பிறகு அண்டை நாட்டு தமிழ் சுதந்திரதிற்காக குரல் கொடுக்கலாம்.
பாமரத்தனமான கருத்து .... எப்படித்தான் மருத்துவர் பட்டம் கிடைத்ததோ? இத்தனை வருடங்கள் அரசியலில் குப்பை கொட்டியும் விஷயம் தெரியவில்லையே ... கலந்து கொண்டால் இலங்கை தவிர்த்துப் பல காமன்வெல்த் நாடுகளுடன் தொடர்பை நாம் புதுப்பிக்கலாம் .... பிராந்திய அமைதி குறித்தும், வணிக ரீதியாகவும் .... நாம் பலன் பெற வாய்ப்புண்டு .... புறக்கணித்தால் இலங்கைக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டு விடும்? விளக்குவாரா? இன்றைய அரசியல் வியாபாரத்தில் இலங்கைப் பிரச்னை நல்லாப் போணி ஆகுற சரக்குப் போலிருக்கு!!!!
பாமரத்தனமான கருத்து .... எப்படித்தான் மருத்துவர் பட்டம் கிடைத்ததோ? இத்தனை வருடங்கள் அரசியலில் குப்பை கொட்டியும் விஷயம் தெரியவில்லையே ... கலந்து கொண்டால் இலங்கை தவிர்த்துப் பல காமன்வெல்த் நாடுகளுடன் தொடர்பை நாம் புதுப்பிக்கலாம் .... பிராந்திய அமைதி குறித்தும், வணிக ரீதியாகவும் .... நாம் பலன் பெற வாய்ப்புண்டு .... புறக்கணித்தால் இலங்கைக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டு விடும்? விளக்குவாரா? இன்றைய அரசியல் வியாபாரத்தில் இலங்கைப் பிரச்னை நல்லாப் போணி ஆகுற சரக்குப் போலிருக்கு!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக