செவ்வாய், 30 ஏப்ரல், 2013

அப்பாடா இப்பவாவது கிடைத்ததே: 57 அகவைப் பெண்ணுக்கு அரசுப் பணி




அப்பாடா இப்பவாவது கிடைத்ததே: 57 அகவை ப் பெண்ணுக்கு அரசுப் பணி
ஓய்வு பெறும் வயதை எட்ட, இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், பெண்ணுக்கு, அரசுப் பணி கிடைத்துள்ளது. அவர், சென்னை மாநகராட்சியில், "டைபிஸ்ட்' பணியில் நேற்று சேர்ந்தார்.சென்னை மாநகராட்சியில், 3,189 பணியிடங்களை நிரப்ப, அரசு அனுமதித்தது. இதன்படி, காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தட்டச்சர் பணிக்கு, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம், 35 பேர், தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி, மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், நேற்று நடந்தது.

மேயர் சைதை துரைசாமி, பணி ஆணைகளை வழங்கினார். திருவல்லிக்கேணியைச் சேர்ந்த, கீதா என்பவரும், பணி ஆணை பெற்றார். இவருக்கு, வயது 57. நில உடமை பிரிவில் பணி வழங்கப் பட்டுள்ளது. இவர், குதூகலமாக பணியை, நேற்று துவங்கினார்.ஓய்வு வயதுக்கு இன்னும், ஒரு ஆண்டே உள்ள நிலையில், அரசுப் பணி கிடைத்தது குறித்து, கீதா கூறியதாவது: நான், 1975 ம் ஆண்டு, பி.யூ.சி., முடித்து, வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்தேன். அரசு பணிக்காக, இதுவரை, 10 முறை, நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்றுள்ளேன்.வேலைவாப்பக பதிவை, தவறாமல் புதுப்பித்து வந்தேன். இரண்டு மகள்களும், "இனிமேல் எப்படி வேலையாக கிடைக்கப் போகிறது...' என, கிண்டல் செய்தனர். நான், "ஒரு மாதமாவது அரசுப் பணி செய்வேன்; எனக்கு நம்பிக்கை உள்ளது' என்று, கூறி வந்தேன்; என் நம்பிக்கை வீண் போகவில்லை.
இப்போது, பணி கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. என் கணவர், தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக உள்ளார். என் மூத்த மகள், பி.இ., முடித்துள்ளார். இரண்டாவது மகள் பி.காம்., இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். அவர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர்.பணம் கொடுத்தால் தான், அரசு வேலை கிடைக்கும் என்ற காலம், மாறியிருக்கிறது. இந்த நிலை, தொடர வேண்டும், என்பதே என் விருப்பம். ஓராண்டு காலம் பணியாற்றுவேன்; அது போதும். ஓய்வு பெறும் வயது, 60 ஆக உயரும் என்கின்றனர். அப்படியானால் மூன்று ஆண்டுகள் பணியாற்ற முடியும்.
இவ்வாறு, கீதா கூறினார்.

"குடும்ப கஷ்டம் தீரும்'
ராயபுரத்தைச் சேர்ந்த, 51 வயதான புருஷோத்தமனுக்கு, மாநகராட்சியில் தட்டச்சர் பணி கிடைத்துள்ளது. இவர், திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில், நேற்று பணியில் சேர்ந்தார்.அவர் கூறுகையில், ""பி.எஸ்சி., கணிதம் படித்துள்ளேன். பல முறை, "இன்டர்வியூ' சென்றும் வேலை கிடைக்கவில்லை. தனியார் நிறுவனத்தில் வேலை செய்தேன். "இன்டர்வியூ' அழைப்பு வந்ததும், நம்பிக்கை இல்லாமல் தான் வந்தேன். எந்த சிபாரிசும், பணமுமின்றி, வேலை கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வளவு நாள் பட்ட கஷ்டம் தீரும்,'' என்றார். -நமது நிருபர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக