சனி, 20 ஏப்ரல், 2013

"தினத்தந்தி' அதிபர் சிவந்தி ஆதித்தன் மறைவு

"தினத்தந்தி' அதிபர் சிவந்தி ஆதித்தன் மறைவு

"தினத்தந்தி' நாளிதழ் அதிபர் சிவந்தி ஆதித்தன் (76) சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு காலமானார்.
கடந்த சில நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதா அவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்தது. மாலையில் அவரது உயிர் பிரிந்தது.
தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் மறைந்த சி.பா.ஆதித்தனாரின் மகன் சிவந்தி ஆதித்தன் 27.9.1936 அன்று பிறந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப் படிப்பு முடித்த அவர், ஆதித்தனார் மறைவுக்குப் பிறகு தினத்தந்தி நிர்வாகத்தைப் பொறுப்பேற்று நடத்தி வந்தார். தந்தி டி.வி. தொலைக்காட்சி நிறுவனத்தையும், ஹலோ எப்.எம். வானொலியையும் அவர் நிர்வகித்து வந்தார். ஆதித்தனார் கலை அறிவியல் கல்லூரி உள்பட பல கல்லூரிகளை நடத்தி வந்தார்.
பத்திரிகைத் துறை, கல்வித் துறை மட்டுமின்றி விளையாட்டுத் துறையிலும் சிவந்தி ஆதித்தன் சிறந்து விளங்கினார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக அவர் பணியாற்றியுள்ளார். வாலிபால் விளையாட்டுக்கு அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி சர்வதேச வாலிபால் சம்மேளனம் அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கி கெüரவித்துள்ளது. மத்திய அரசு கடந்த 2008-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி அவரை சிறப்பித்தது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன.
அவரது இறுதிச் சடங்கு பெசன்ட் நகர் மயானத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 20) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
அமைச்சர்கள் அஞ்சலி: தமிழக அரசின் சார்பில் சமூகநலத் துறை அமைச்சர் பா.வளர்மதி, வணிவ வரித்துறை அமைச்சர் பி.வி. ரமணா ஆகியோர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் காலமானார்

சென்னை: தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 76. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

"தினத்தந்தி' நாளிதழின் நிறுவனர் மறைந்த சி.பா.ஆதித்தனார் மகன் சிவந்தி ஆதித்தனார். இவர் கல்வியாளர், தொழிலதிபர், பத்திரிகையாளர், விளையாட்டு நிர்வாகி என பன்முக திறமை கொண்டவராக இருந்தார். தினத்தந்தி நாளிதழின் அதிபராக இருந்து வந்த சிவந்தி ஆதித்தனார், பல்வேறு கல்லூரிகள், மாலைமலர், தந்தி டிவி, ஹலோ எப்.எம்., ஆகியவற்றையும் நிர்வகித்து வந்தார். கடந்த 1936 செப்., 24ம் தேதி பிறந்த சிவந்தி ஆதித்தனார், பிரசிடென்சி கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். இவரது தந்தை 1942ல் மதுரையில் தொடங்கிய தினத்தந்தி நாளிதழை தனது சிறந்த சீர்மிகு தலைமையில் ஒவ்வொரு நாளும் புத்தம் புது மலராக மலர்ந்து மணம் வீச செய்திருக்கிறார். தினந்தந்தி நாளிதழ், சென்னை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை, சேலம், ஈரோடு, வேலூர், கடலூர், புதுச்சேரி, பெங்களூரு, மும்பை என 15 பதிப்புகள் வெளியிடப்படுகிறது. இவரது சேவையை அங்கீகரிக்கும் விதமாக 2009ம் ஆண்டு மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான "பத்ம ஸ்ரீ' விருது வழங்கப்பட்டது. மேலும் கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

சிவந்தி ஆதித்தனாரின் கல்விச் சேவை: ஆதித்தனார் கல்வி நிறுவன அறக்கட்டளை திருச்செந்தூரில் இயங்கிவருகிறது. கிராமப்புற, பின்தங்கிய மக்களுக்கு சேவை செய்யும் நோக்கோடு ஏற்படுத்தப்பட்ட இக்கட்டளையில், தற்போது 7 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
1, ஆதித்தனார் கலை அறிவியல் கல்லூரி

2. கோவிந்தமாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி

3. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி

4. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி

5. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி

6. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்

7. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி

இக்கல்வி நிறுவனங்களுக்கு டாக்டர். பா சிவந்தி ஆதித்தனார் தலைவராக இருந்தார். தனது பன்முகத்தன்மை மற்றும் ஆளுமை தன்மையால், கல்வித்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்தவர் சிவந்தி ஆதித்தனார். தமிழகத்தில் சிவந்தி ஆதித்தனாரின் கல்வி பங்களிப்பு போற்றத்தக்கது. இக்கல்வி நிறுவனங்களில் தற்போது ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். கல்வித்துறையில் அவரது முன்உதாரணமான சேவையை பாராட்டி இந்திய அரசு அவருக்கு, பத்மஸ்ரீ விருது வழங்கியது. மேலும் இவரது கல்விச் சேவையை பாரட்டி 1993 ம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலை, 1994 ல் அண்ணாமலை பல்கலை, 2004 ல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, 2007 ல் சென்னை பல்கலை, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. மதுரை காமராஜ் பல்கலை, அண்ணாமலை பல்கலை, பாரதிதாசன் பல்லை, சென்னை பல்கலையில் சிண்டிக்கேட் உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார். இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரர். 10 ஆண்டுகள் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக இருந்துள்ளார். தற்போது பல்வேறு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பொறுப்பாளராக உள்ளார். கல்வி மற்றும் விளையாட்டுத்துறையில் இவரது சேவையை பாராட்டி "ஒலிம்பிக் ஆர்டர் பார் மெரிட்' என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் பத்தாம்வகுப்பு, பிளஸ் 2, பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவருக்கு 10,000 ரூபாயும், இரண்டாவது மாணவருக்கு 7,000 ரூபாயும், மூன்றாவது மாணவருக்கு 5,000 ரூபாயும், வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவருக்கு 5,000 ரூபாயும், இரண்டாவது மாணவருக்கு 3,000 ரூபாயும், மூன்றாவது மாணவருக்கு 2,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.

சிவந்தி ஆதித்தனாரின் சமூகப்பணிகள்: சிவந்தி ஆதித்தனார், சமூகப்பணிகளில் ஆர்வம் கொண்டவர். ஏழை மாணவர்கள் கல்வி பயில பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு தினத்தந்தி சார்பில் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. தற்போதைய கல்விமுறைகளை மாணவர்களுக்கு விளக்க "வெற்றி நிச்சயம்' என்ற நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்துகிறார். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வினாவிடையும் தினத்தந்தி இதழில் வெளியாகிறது. ஒவ்வொரு ஆண்டும் சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாள் அன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அறிஞர்களுக்கு பரிசுத்தொகையும், பொற்கிளியும் கொடுத்து அவர்களை கவுரவிக்கிறார். ஏழை மாணவர்கள் கல்வி பயிலும் வண்ணம் பல உயர் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். மேலும் பல்வேறு சமூக பணிகளையும், நலத்திட்ட உதவிகளையும் சிறப்பாக செய்து வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக