வெள்ளி, 5 ஏப்ரல், 2013

சௌதியில் குற்றவாளிக்கு முடக்குவாதம் ஏற்படுத்தும் தண்டனை

சௌதியில்  பழிக்குப்பழி த் தண்டனை: குற்றவாளிக்கு முடக்குவாதம் ஏற்படுத்தும் தீர்ப்பால் வாதம்

BySriram Senkottai

First Published : 04 April 2013 02:44 PM IST

சௌதி அரேபியாவில் ஒரு தீர்ப்பு பலரால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. பத்துவருடங்கள் முன்னர் அந்தக் குற்றவாளி செய்த தண்டனைக்குத் தீர்ப்பாக, பதிலுக்கு பதில் முடக்குவாதம் ஏற்படுத்த விதிக்கப்பட்ட தண்டனைதான் அது. ஒரு மில்லியன் ரியால் பணத்தை அவரது குடும்பத்தினர் அபராதமாக அளிக்க இயலாத பட்சத்தில் இந்த தண்டனையாம்!
சௌதி அரேபியாவில் ஷரியத் சட்டம் அமலில் உள்ளது. இது, கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல் என்ற தண்டனையினை வலியுறுத்துவது.
10 வருடங்களுக்கு முன்னர் செய்த ஒரு தவறுக்காக 10 வருடங்கள் சிறைத் தண்டனையினை அனுபவித்து வரும் இளைஞர் ஒருவர், இப்போது, முடக்கு வாதம் ஏற்படுத்தப்பட்டு, சக்கர நாற்காலியில் வாழ்க்கையைக் கழிக்கவுள்ளார். அதுவும், அவரது குடும்பத்தினர் ஒரு மில்லியன் சவுதி ரியால் பணத்தை (1,76,000 யுரோ) பாதிக்கப்பட்டவருக்கு அளிக்காத பட்சத்தில்!
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு.
அலி அல்-கவாஹர் என்ற 24 வயது இளைஞர் பத்து வருடங்கள் சிறையில் இருந்துள்ளார். அவர் செய்த குற்றம், தனது நண்பர் ஒருவரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில், கோபமுற்ற அவர், கத்தியால் நண்பரின் முதுகுத் தண்டு வடத்தில் தாக்கியுள்ளார். இதில், அந்த நண்பருக்கு முடக்கு வாதம் ஏற்பட்டு, நடமாட முடியாத நிலை வந்துவிட்டது.
பதிலுக்கு அதே போன்ற நிலையை அல்-கவாஹருக்கு ஏற்படுத்த தீர்ப்பு விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகள், வட ஆப்ரிக்க நாடுகளின் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் துணை இயக்குனர் ஆன் ஹாரிஸன், “ஒரு நபரை முடக்குவாதத்தில் தள்ளுவது என்பது மிகவும் கொடூரமான ஒன்று. அவருக்கு விதிக்கப்படும் கடுமையான துன்புறுத்தல்” என்றார்.
"இதுபோன்ற அதிர்ச்சி தரத்தக்க தண்டனைகள் எல்லாம் சௌதி அரேபியாவில்தான் பார்க்க முடியும்.” என்று கூறியுள்ளார் ஹாரிஸன்.
அல்-ஹாயத் என்ற அரபு மொழி தினசரி இதழ், கவாஹரின் 60 வயது தாயார் கூறியதாக, ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது. "என் மகன் 14 வயதுச் சிறுவனாக இருந்தபோது இந்தக் குற்றம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர், என்னிடம் 2 மில்லியன் ரியால் சமரசத்துக்கான இழப்பீடாகக் கேட்டார். எங்களால் அவ்வளவு இயலாது என்றதும் ஒரு மில்லியன் ரியால் என குறைக்கப்பட்டது. ஆனால், எங்களிடமோ அதில் 10ல் ஒரு பங்கு பணம் கூட கிடையாது” என்று அவர் கூறியுள்ளார் என தெரிவித்துள்ளது பத்திரிகை.
அல்-ஹாயத் மேலும் " இந்த இளைஞனுக்காக பெயர் தெரியாத நபர் ஒருவர் இரத்தத்துக்காக பணம் என்ற இதன் கோட்பாட்டுக்காக பணத்தைத் திரட்ட முயன்று வருகிறார். ஆனால், எத்தனை தூரம் அது சாத்தியம் என்று தெரியவில்லை. அதுவும் கவாஹரின் தண்டனை நிறைவேற்றப்படும் முன் அது நடக்குமா என்றும் தெரியவில்லை” என்று கூறியுள்ளது.
இந்த வழக்கு விவரமாக அம்னெஸ்டி கூறுகையில், "சௌதி அரேபியா இதுபோன்ற தனது சட்டங்களை மறுபரிசீலனை செய்யும் நேரம் இது. சர்வதேச மரபுகளுக்கு மதிப்பு அளித்து, இதுபோன்ற மிக மோசமான தண்டனைகளை வழங்குவதை அது விலக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.
சௌதி நீதிபதிகள், இதற்கு முன்னர் ஷரியத்  சட்டப்படி, பல்லைப் பிடுங்குதல், கண்ணைச் சிதைத்தல், சவுக்கடி அளித்தல்... கொலை வழக்குகளில் மரண தண்டனை அளித்தல் என பல தீர்ப்புகளை அளித்துள்ளனர்.

கருத்துகள்(10)

தினமணி அவர்களே இடையில் ஒரு அப்பா தன் மகளுக்கு ஆசிட் வீசியவன் மீது அதே ஆசிட் வீசி தண்டனை அளிக்க வேண்டும் என்று சொன்னது நினைவில் இல்லையா?
இருபத்தோராம் நூற்றாண்டிலும் ஷரியத் சட்டம் என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனம் ....
முஸ்லிம் சட்டம் மாற்றப்பட வேண்டும். மனித நேய மிக்க கண் பார்வை வேண்டும்
மிக சரியான சட்டம் அப்பொழுதுதான் குற்றம் செய்ய பயப்படுவார்கள் நாம் எப்பொழுதும் பாதிக்க பட்டவர் தரப்பிலிருந்து சிந்திக்க வேண்டும்.
கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் உயிருக்கு உயிர் எனபது இஸ்லாமிய சட்டம் அதை நடைமுறை படுத்தினால் குற்றங்கள் கட்டாயமாக குறையும் நமது நாட்டு குற்றவியல் சட்டங்கள் சரியில்லாமல் இருப்பதால் தான் குற்றங்கள் மலிந்து காணப்படுகிறது நாம் அன்றாடம் செய்தி தாள்களில் பார்க்கிறோம் 33 தடவை திருடியவன் மீண்டும் திருட்டு வழக்கில் கைது இது எப்படி அவனால் முடிகிறது வெளியில் இருந்தால் உழைக்க மனம் வரமாட்ட்ங்கிது உள்ள போனால் ராஜா மரியாதை சாப்பட்டுக்கு சாப்பாடு நிம்மதியான தூக்கம் வாரம் வாரம் சினிமா இன்னும் பல சலுகைகள்... இந்த சட்டம் குற்றத்தை கூட்டுமா குறைக்குமா? இன்னும் எத்தனயோ பேர் பல கொலைகளை செய்துவிட்டு சாதரணமாக ஊருக்குள் வளம் வருகிறார்களே.. இவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் மன நிலை எப்படி இருக்கும்? எப்போது சட்டம் கடுமையாக்கப் படுகிறதோ அப்போது தான் குற்றங்கள் குறையும் பல பெண்கள் தங்களது கர்ப்பை இழந்து விட்டு நிற்கிறார்களே அவர்களை கற்பழித்த அந்த கொடூரனுக்கு நமது வரிபனத்தில் சோறு போடப் படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இது போன்ற ஒரு நிலை தனக்கு வந்தால் மட்டுமே இஸ்லாமிய சட்டம் சரியா தவறா என புரிய முடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக