சனி, 20 ஏப்ரல், 2013

உயிரிழந்தும் வாழ்கிறான் தியானேசு!



குடும்பத்தினரைப் பாராட்டுவோம். எனினும் இத்தகைய செய்திகளைப் படிக்கும் பொழுது் பின்வரும் ஐயங்கள் ஏற்படுகின்றன. 1. உண்மையிலேயே மூளைச்சாவு வந்தபின்தான் அறிவிக்கின்றார்களா? அல்லது பணத்திற்காக உயிர் ஊசலாடிக்  கொண்டிருக்கும் பொழுதே மூளைச்சாவு என்கின்றார்களா?  2. பொதுவாக இதுவரை  உடலுறுப்புகளைத் தானமாகப் பெறும் மருத்துவமனைகள் பணம் கொழிக்கும் மருத்துவமனைகளே!  கொடை யுள்ளத்துடன் அளிக்கப்படும் உடலுறுப்புகள் விலையடிப்படையில்  தரப்படுகின்றனவா? 3. உடலுறுப்பு தானமாகப் பெற்று ஏழை ஒருவர் நன்மை அடைந்ததாக இதுவரை செய்தி வந்ததில்லையே! பணம் உள்ளவர்களுக்குத்தான் உடல் உறுப்புதானமா? 4. அதிகப் பணம் அளிப்பவருக்கு முதலிடம் என்ற முறையில் வழங்குவதுபோல் தோன்றுகின்றது. அவ்வாறில்லாமல் தேவை  ஏற்பட்ட காலத்தின் அடிப்படையில் கொடுக்கலாமே! இவ்வாறு செய்தால் , ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடில்லாமல் வழங்கலாமே! 5. அரசு இதில் கருத்து செலுத்தி ஏன் முறைப்படுத்தாமல இருக்கின்றது. 6. ஊழல்களை எல்லாம் வெளிக்கெபாணரும் ஊடகங்கள் இவை பற்றி இனியாவது சிந்திக்குமா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


உயிரிழந்தும் இன்னும் வாழ்கிறான் தியானேசு!  
 கோவை : கோவையில் தீம் பார்க் ஒன்றில் தவறி விழுந்து இறந்த பள்ளி மாணவனின் உடல் உறுப்புகள், அவனது பெற்றோர்களின் ஒப்புதலோடு தானமாக வழங்கப்பட்ட உருக்கமான சம்பவம் நடந்துள்ளது. இந்த உடல் தானம் மூலம், ஆறு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

கோவை, ராமநாதபுரத்தில் உள்ள பெர்க்ஸ் பள்ளி மாணவன் தியானேஷ் (15). இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்தார். விடுமுறையை நண்பர்களோடு மகிழ்ச்சியாக கழிக்க, அவிநாசி ரோடு அருகே உள்ள ஒரு தீம் பார்க்கிற்கு சென்றார்.அங்கு நீர் வீழ்ச்சிகளில் நீந்தி விட்டு, அடுத்ததாக சறுக்கு விளையாட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தவறி விழுந்ததில், தலையில் அடிபட்டது. பலத்த காயமடைந்த அவர், அங்கேயே மயக்கமாகி விட்டார்.அருகில் உள்ள மருத்துவமனைக்கு முதலுதவிக்காக எடுத்துச் சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.தலையில் பலத்த காயம் அடைந்திருந்ததால், அவருக்கு எவ்வித சிகிச்சையும் பலனளிக்கவில்லை. அவருக்கு மூளை சாவு ஏற்பட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர். இதையறிந்து அதிர்ச்சியில் உறைந்தனர் பெற்றோர்.

தனியார் கட்டுமான தொழில் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் தந்தை நமச்சிவாயம், தாயார் விஜயலட்சுமி ஆகியோர் மூளைச்சாவு ஏற்பட்ட பின், மீண்டும் தங்கள் மகனின் உடல் உறுப்புகளாவது உயிர் வாழ வேண்டும் என விரும்பினர். மருத்துவமனையின் டாக்டர்கள், டீன் குமரன் ஆகியோருடன் ஆலோசனை செய்த பின், உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்தனர்.இதையடுத்து, உடல் உறுப்புகளை தானமாக பெற தேவையான நடவடிக்கைகளை மருத்துவமனை மேற்கொண்டது. கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அவரது இரண்டு சிறுநீரகங்களும் தானமாக பெறப்பட்டு, வேறு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. இதனால், இருவருக்கு சிறுநீரகம் கிடைத்து நலம் பெற்றனர்.இருதய வால்வுகள் சென்னையில் உள்ள மெடிக்கல் மிஷன் ஹாஸ்பிடலுக்கு வழங்கப்பட்டது.

மியாட் மருத்துவமனை ஈரலை தானமாக பெற்றது. இந்த உறுப்புகள் சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. கண்கள் இரண்டும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன. "இந்த உறுப்புகளால் ஆறு பேருக்கு மறு வாழ்வு அளிக்க முடியும்' என்றனர் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் டாக்டர் குழுவினர்.மருத்துவமனையின் டீன் டாக்டர் குமரன் கூறுகையில்,""மூளைச்சாவு பற்றியும், உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது, மருத்துவ உலகுக்கு கிடைத்த வெற்றி.மாணவன் தியானேஷ் இறப்புக்கு பின்னும், அவரது உறுப்புகளுக்கு வாழ்வு கிடைத்துள்ளது. உயிர் பிரிந்தாலும், உடல் உறுப்புகள் உயிர்வாழ்வது, மருத்துவ உலகின் வியத்தகு முன்னேற்றம். அதோடு, பலருக்கு மீண்டும் புது வாழ்வு கிடைத்துள்ளது,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக