செவ்வாய், 16 ஏப்ரல், 2013

மாநில உரிமையில் தலையிடாதீர்கள்: தமிழகம்

மாநில உரிமையில் தலையிடாதீர்கள்: மத்திய அரசுக்குத் தமிழகம் வலியுறுத்தல்




மாநிலங்களின் உரிமையில் தலையிடும் எந்தவொரு முயற்சியையும் மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது என்று தில்லியில் நடைபெற்ற மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே தலைமையில் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்து விவாதிக்கும் முதல்வர்கள் மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவரது உரையை தமிழக சட்ட அமைச்சர் கே.பி. முனுசாமி வாசித்தார். அதன் விவரம் வருமாறு:
பொது ஒழுங்கு என்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அப்பாவி மக்களைப் பாதுகாக்கவும் சமூக விரோத சக்திகள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு சுதந்திரமான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனால்தான் தமிழ்நாடு அமைதியாகவும் அதன் மக்கள் ஒற்றுமையாகவும் உள்ளனர். பிற மாநிலங்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் வகுப்புவாத வன்முறை, மோதல்கள் தமிழ்நாட்டில் மிகவும் குறைவு.
முதலுக்கே மோசமாகும்: குற்றவியல் விசாரணைக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் மத்திய நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதில், குற்றவியல் விசாரணைக்காக தனியாக ஒரு புலனாய்வு அமைப்பை புலனாய்வு வாரியத்தின்கீழ் அமைத்து அதற்கென பிரத்யேகமாக அதிகாரிகளும் அலுவலர்களும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வது முதலுக்கே மோசமாகும் நிலையை உருவாக்கும்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சட்டம் ஒழுங்கு பிரிவும் குற்றவியல் பிரிவும் உள்ளன. மாவட்டக் கண்காணிப்பாளர், மாநிலக் காவல் தலைமையகம் மூலம் இந்தப் பிரிவுகளின் பணிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. புலனாய்வு என்பது காவல்துறையின் பிரிக்க முடியாக அங்கமாகும். அந்த வகையில், இரு பிரிவுகளையும் தனிமைப்படுத்தினால், விசாரணைக் காலங்களில் போதிய தகவல்களை ஒரு பிரிவிடம் இருந்து மற்றொரு பிரிவு பெற முடியாத நிலை உருவாகும்.
இதேபோல, மாநில காவல்துறை தலைமை இயக்குநரின்கீழ் இல்லாமல் புலனாய்வு வாரியத்தின் தலைவர் தன்னிச்சையாக செயல்பட அனுமதித்தால் ஒட்டுமொத்த காவல்துறை கட்டமைப்பு, ஒழுங்கமைப்பு சீர்குலையும். இது, முற்றிலும் நடைமுறைக்கு உதவாத, ஆபத்தை விளைவிக்கக் கூடிய பரிந்துரையாகும்.
தமிழக காவல்துறையில் பணி நியமனம், மாற்றல் போன்றவற்றை மேற்கொள்ள காவல் அமைப்புக் குழு உள்ளது. அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. எனவே, இந்தப் பணிகளுக்காக மூன்றடுக்கு முறை கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்ற நிர்வாக சீர்திருத்த ஆணைய பரிந்துரை நியாயமானதாகத் தோன்றவில்லை.
இதேபோல், அரசு வழக்குரைஞர்களை மாநில, மாவட்ட அளவில் நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு மட்டும்தான் இருக்க வேண்டும். அந்தப் பொறுப்பை புதிதாக உத்தேசிக்கப்படும் புலனாய்வு வாரியத்திடம் வழங்கக் கூடாது.
அண்மைக் காலமாக நகராட்சிகள், பஞ்சாயத்துகள் ஆகியவற்றின் பணிகளில் மாநில அரசுகளை மீறி மத்திய அரசு தலையிடும் போக்கு அதிகரித்து வருகிறது. நமது அரசியல் கட்டமைப்பு, கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுவதை மத்திய அரசு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
நம் நாட்டில் 750 குடிமக்களுக்கு ஒரு காவலர் என்றவாறு அவர்களின் பணி உள்ளது. இந்த நிலையில், காவலர்களுக்கு பதிலாக துணை உதவி ஆய்வாளர்கள் பணிகளுக்கு ஆள் தேர்வு செய்ய வேண்டும் என்ற ஆணையத்தின் பரிந்துரை, மாநில அரசின் நிதிச் சுமையை அதிகரிக்கும்.
அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள், அந்த வழக்குகளில் ஆஜராக பெண் அரசு வழக்குரைஞர்கள், பாலியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்டோர், நலிவடைந்தோரின் பிரச்னைகளை விசாரிக்க  காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் மனித உரிமைகள் பிரிவு உள்ளது.
குற்றவியல் வழக்கு விசாரணைக்கு உதவிடும் வகையில் நிபுணத்துவமிக்க நவீன தடயவியல் துறையை அமைக்க வேண்டும் என்று கூறுவதை தமிழக ஏற்றுக்கொள்கிறது. அந்த வகையில் தமிழக தடயவியல் துறை 14 சிறப்புப் பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது.
மாநில அரசு கேட்டுக் கொள்ளாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பணியில் மத்திய படைகளை அனுப்பும் யோசனையை தமிழக அரசு கடுமையாக ஆட்சேபிக்கிறது.
இதே போல, குறிப்பிட்ட சில குற்றங்களைத் தேசிய குற்றமாகக் கருதி சி.பி.ஐ. தன்னிச்சையாக விசாரிக்க அதிகாரம் வழங்குவதையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. மாநில காவல் துறை விசாரிக்கும் வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைப்பது குறித்து அதிகாரமளிக்கப்பட்ட குழு முடிவு செய்யும் என்ற ஆணையத்தின் கருத்தை தமிழக அரசு ஏற்கவில்லை.  எந்த வழக்காக இருந்தாலும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் சி.பி.ஐ.க்கு மாற்றக்கூடாது.
கைதிகளை பரோலில் அனுப்புவது, தண்டனையைக் குறைப்பது போன்ற விதிகளை நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களும் சீராகப் பின்பற்ற வேண்டும். இந்த உரிமை மாநிலங்களுக்கு மட்டும்தான் இருக்க வேண்டும். அதை ஆலோசனைக் குழு முடிவு செய்ய விட்டு விடக் கூடாது.
மாநிலங்களின் உரிமையில் தலையிடும் எந்தவொரு முயற்சியையும் மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது. காவல் துறை நவீனமயமாக்கல், தரம் உயர்த்துதல் ஆகியவற்றுக்கு மாநிலங்களிடம் போதுமான நிதி ஆதாரம் இல்லை. அந்த நிதியை வழங்கவும் மாநில காவல் நவீனமயமாக்கலுக்கு தேசிய செயல் திட்டத்தை உருவாக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முனுசாமி பேசினார்.
இந்த மாநாட்டில் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஜக்கையன், தமிழக உள்துறை முதன்மைச் செயலர் ஆர்.ராஜகோபால், தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் கே.ராமானுஜம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக