புதன், 17 ஏப்ரல், 2013

பதவி இழப்பால் வந்த சுறுசுறுப்பு : தி.மு.க. கவன ஈர்ப்புத் தீர்மானம்

கச்சத்தீவு, பொதுநல மாநாடு : கவன ஈர்ப்பு த் தீர்மானமாக க் கொண்டு வர தி.மு.க.,  கலந்துரை

புதுதில்லி :"பார்லிமென்ட் கூட்டத் தொடரில், காமன்வெல்த் மாநாடு, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக, கவன ஈர்ப்பு தீர்மானமாக, தி.மு.க., கொண்டு வருவது குறித்து, டெசோ கலந்துரையாடல் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது' என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை, அறிவாலயத்தில், டெசோ உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். கூட்டத்தில், இலங்கை தமிழர்கள் பிரச்சனை தொடர்பான தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும் வலியுறுத்தி, இரு தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்கள் குறித்த, தி.மு.க., விளக்கப் பொதுக் கூட்டம், வரும், 24ம்தேதி சென்னை, திருவான்மியூரில் நடைபெறவுள்ளது.

இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:டெசோ அமைப்பின் கலந்துரையாடலில், உறுப்பினர் ஒருவர், "டெசோ அமைப்புக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்த்த ஆதரவு ஏற்படவில்லை' என, கூறியுள்ளார். மற்றொரு உறுப்பினர், "டெசோ அமைப்பு ஏற்பட்ட பின் தான், இலங்கை தமிழர் பிரச்சனை உலக அளவில் பேசப்பட்டது' என, மறுத்துள்ளார்.வழக்கமாக நடைபெறும் டெசோ உறுப்பினர்கள் கூட்டத்தில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான விஷயங்களை விவாதித்து, தீர்மானமாக நிறைவேற்றப்படுவது உண்டு. ஆனால், இந்தக் கூட்டத்தில், எம்.பி., க்கள் குழு, இலங்கை சென்று வந்தது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆனால், இலங்கை தமிழர்கள் பிரச்சனை தொடர்பாக, எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றவில்லை.நவம்பர் மாதம், இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி, ஐ.நா., உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளிடம், தி.மு.க., - எம்.பி., க்கள் மற்றும் டெசோ உறுப்பினர்கள் வலியுறுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. காமன்வெல்த் மாநாடு, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக, பார்லிமென்ட் கூட்டத் தொடரில், கவன ஈர்ப்பு தீர்மானமாக, தி.மு.க.,- எம்.பி.,க்கள் கொண்டு வர வேண்டும் என, அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக