ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

பழங்குடியினருக்குக் கல்வி அளிக்கும் கல்லூரி மாணவர்கள்






jpghttp://img.dinamalar.com/data/large/Tamil_News_large_68413020130407001719.jpg


பழங்குடியினருக்கு க் கல்வி அளிக்கும் கல்லூரி மாணவர்கள்

இந்தியாவின் பழங்குடி இனங்களில் ஒன்று குறவர் இனம். குறவர்கள், தங்களது தனித் தன்மையான சில பழக்க வழக்கங்களால், சமுதாய நீரோட்டத்தில் கலந்தும் கலக்காமலும் உள்ளனர்.அவர்களது நிலையை மாற்ற, கல்வியால் மட்டுமே முடியும் என்ற நோக்கில், குறவர் குடும்ப குழந்தைகளுக்கு, கல்வி பயிற்சி கொடுத்து வருகிறது

"ரீயூனிட் டூ ரீடிபைன் இந்தியா' (ஆர்.ஆர்.ஐ.,) என்ற தொண்டு நிறுவனம். அதன் செயலர் அகிலனிடம் உரையாடியதில் இருந்து...

கல்வி பயிற்சிக்கு குறவர்களை தேர்ந்து எடுத்ததன் பின்னணி என்ன?
சுதந்திரம் அடைந்து, 66 ஆண்டுகள் ஆகியும், பல்வேறு சமூக மாற்றங்கள் வந்த போதிலும், தங்களது வாழ்க்கை முறையை மாற்றி கொள்ளாதவர்கள் குறவர்கள் மட்டுமே.தங்களது தொழிலுக்கு ஏற்ப இடம்பெயர்வதால், அவர்களின் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதற்கே வாய்ப்பிருக்காது. அவர்களின் குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்ற உந்துதலில், குறவர்களின் வாழ்விடங்களை கண்டறிந்து, முகாம்கள் நடத்தினோம்.இதற்காக, பல ஆண்டுகள் முயன்றும், ஒருங்கிணைக்க முடியவில்லை. திருவள்ளூர் மாவட்டம், அதிகத்தூர் கிராமத்தில், அதிகளவு குறவர்கள் தங்குவதாக கேள்விப்பட்டு, கிராம தலைவரின் உதவியோடு, விழிப்புணர்வு முகாம் நடத்தினோம். அவர்களின், 65 குழந்தைகள் தற்போது பள்ளிக்கு செல்கின்றனர்.

எந்த விதத்தில் அவர்களின் ஒத்துழைப்பு இருந்தது?
துவக்கத்தில், பெரும் சிரமமாக இருந்தது. குறவர்கள் இடம் பெயர்வதற்கு காரணமே, குடியிருக்க நிரந்தர இடமும், வருமானம் தரும் நிலையான தொழிலும் இல்லாதது தான்.கிராம தலைவர் உதவியோடு, அந்த கிராமத்தில், 100 குடும்பங்கள் தங்க, அரசின் இலவச வீடுகள் கட்டி தரப்பட்டன. தோட்டம், கிராம வேலைகளில் ஈடுபடுத்தி வருமானத்தை ஏற்படுத்தி கொடுத்ததால், இடம் பெயரும் எண்ணத்தை கைவிட்டனர்.குழந்தை வளர்ப்பு முறை, தன் சுத்தம் ஆகியவற்றை எடுத்து கூறினோம். நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருந்தாலும், தொடர் முயற்சியால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஒத்துழைத்தனர்.கிராம பள்ளி தலைமையாசிரியர் உதவியோடு, 65 மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு கிராமத்தில் உள்ள, 100 குடும்பங்களில் கல்வியை கொண்டு வருவதற்கே, 3 ஆண்டுகளாகி விட்டன.

சிறப்பு வகுப்புகளின் அம்சங்கள்?
எழுதக் கற்பித்தல், பின் எழுத்து கூட்டி வாசிப்பு, செய்தித் தாள் வாசிப்பு என, பல கட்டங்களாக கற்பித்தல் நடக்கிறது. ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு, ஆடியோ உதவியுடன் ஆங்கில வார்த்தை உச்சரிப்பு கற்று தரப்படுகிறது.எளிமையான ஆங்கில வார்த்தைகள், அவற்றின் பொருள் ஆகியவை கற்று கொடுக்கப்படுகின்றன. மாதந்தோறும் தேர்வு நடத்தி, பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக, பல நாட்கள் அலுவலக விடுப்பு எடுத்து, தொடர்ச்சியாக மாணவர்களை ஒன்றிணைத்ததால், முயற்சிக்கு வெற்றி கிடைத்தது.

இந்த முயற்சிக்கான உந்துதல் என்ன?
எங்கள் அமைப்பில், 10 பேர் மட்டுமே உறுப்பினர்கள். கல்லூரியில் படிக்கும் போதே, சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் இருந்தது. தற்போது ஒவ்வொரு துறையிலும் உள்ள, நண்பர்களின் உதவியோடு, இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.கடந்த, 2009ல் இந்த அமைப்பை துவக்கினோம். தற்போது சென்னை மட்டுமின்றி, கோவை, சேலம், டில்லி ஆகிய இடங்களிலும், எங்கள் அமைப்பு செயல்படுகிறது.குறவர் இனம் மட்டுமின்றி, ஏழை குழந்தைகளுக்கும் கல்வி கற்பிக்கும் முயற்சியில், இந்த அமைப்பை சேர்ந்த, 500 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், கல்லூரி மாணவர்கள் தான். rrindia.org என்ற இணையதளத்தில் எங்கள் செயல்பாடுகளை அறிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக