ஞாயிறு, 12 மே, 2013

பாரதி, வ.உ.சி.யால் போற்றப்பட்ட தலைவர் வரதராசுலு

பாரதி, வ.உ.சி.யால் போற்றப்பட்ட தலைவர் வரதராசுலு (நாயுடு)

பாரதியார், வ.உ.சிதம்பரனார், திரு.வி.க. போன்ற தலைவர்களால் போற்றப்பட்ட தேசியத் தலைவர் வரதராஜுலு நாயுடு என எழுத்தாளர் பெ.சு.மணி குறிப்பிட்டார்.
வரதராஜுலு நாயுடு குடும்பத்தினர் சார்பில் குருகுலம் என்ற அறக்கட்டளை தொடங்கும் நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் பெ.சு.மணி பேசியதாவது:
வரதராஜுலு நாயுடுவின் தேசியப் பணிகள் குறித்து 1934-ஆம் ஆண்டு வ.உ.சிதம்பரனார் எழுதியுள்ளார். "கடந்த 20 ஆண்டுகளாக மேடைகளில் பேசி வரும் வரதராஜுலு நாயுடு, நாட்டின் விடுதலைக்காக கிராமப்புற மக்களிடத்திலும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளார். நமது நாடு இழந்த பண்டைய பெருமைகளை மீட்டெடுக்க மக்களைத் தூண்டி வருகிறார். தமிழ்நாட்டில் இதழியல் துறையின் முன்னோடியான ஜி.சுப்பிரமணிய ஐயரைப் போலவே வரதராஜுலு நாயுடுவும் இதழியல் பணிகளில் தனிச் சுடராக விளங்குகிறார்' என்று அவர் பாராட்டியுள்ளார்.
இதேபோல் பாரதியார், சுப்பிரமணிய சிவா, திரு.வி.க., சி.ஆர்.தாஸ் என பலராலும் போற்றப்பட்ட சிறந்த தலைவராக வரதராஜுலு நாயுடு விளங்கினார்.
ஒவ்வொரு வகுப்பினரும் தங்களது நியாயமான உரிமைகளைப் பெற எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்று வலியுறுத்தியபோதிலும், வகுப்புவாதத்தை ஆதரிக்க மறுத்த தலைவர் அவர். தேசியம்தான் நாட்டின் எல்லா நோய்களுக்கும் தீர்வு காணும் சிறந்த மருந்து என்பதைக் கொள்கையாகக் கொண்டிருந்தார்.
பிரமணர் அல்லாதவர்களின் உரிமைகளை சற்றும் விட்டுக் கொடுக்காதவர். அதே நேரத்தில் விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான நீதிக் கட்சியை வேரறுக்கப் போராடியவர்.
என்னைப் பொருத்தவரை அவருடைய பணிகளிலேயே அவரது இதழியல் பணிகளைத்தான் மிகச் சிறந்த பணி என்று கூறுவேன். பிரபஞ்சமித்திரன் இதழ் மூலமாகவும், தமிழ்நாடு இதழ் மூலமாகவும் தமிழுக்கும், தேசியத்துக்கும் வரதராஜுலு நாயுடு ஆற்றிய பணிகள் ஏராளம்.
ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிப்படையானது கல்வி. அத்தகைய கல்வி சாதாரண ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக பள்ளிகளைத் தொடங்கி கல்வி அளித்தவர். அவரது வழியிலேயே தற்போது அவரது குடும்பத்தினரும் கல்விப் பணிக்காகத் தொடங்கியுள்ள குருகுலம் அறக்கட்டளை வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார் மணி.
முன்னதாக வரதராஜுலு நாயுடு குறித்து அறிமுகவுரையாற்றிய அவரது மகன் வி.தயானந்தா, "சித்த மருத்துவராக வாழ்க்கையைத் தொடங்கிய எனது தந்தை, "மின்சார ரசம்' என்ற பெயரில் அக்காலத்தில் தயாரித்த வலி நிவாரண மருந்து மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியது. பின்னர் அரசியலில் நுழைந்த எனது தந்தையார், காமராஜர் போன்ற தலைவர்களுடன் சேர்ந்து பணியாற்றினார். இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழைத் தொடங்கினார். பிரபஞ்சமித்திரன், தமிழ்நாடு போன்ற தமிழ் இதழ்களையும் நடத்தினார். ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் நோக்கில் திண்டிவனம் அருகே அசோகபுரி கிராமத்தில் குருகுலத்தைத் தொடங்கினார். அவரது வழியில் தற்போது குருகுலம் மூலம் மீண்டும் கல்வி சேவை வழங்கப்படுகிறது' என்றார்.
காக்னிசன்ட் நிறுவனத்தின் சமூகப் பணிகள் துறை இயக்குநர் அர்ச்சனா ரகுராம், குருகுலம் அறக்கட்டளைக்கான புதிய இணையதளத்தைத் தொடங்கி வைத்தார். "இந்தியா முழுவதும் 110 அரசுப் பள்ளி மாணவர்களோடு தொடர்பில் உள்ளோம். தினமும் ஏராளமான மாணவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கிறது. உணவுக்கு வழியின்றி ஏராளமான மாணவர்கள் பசியோடு வகுப்பறைகளில் அமர்ந்துள்ளதை அறிய முடிகிறது. ஏழைகள், தெருவோரக் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் பணியில் ஈடுபடுவோர் இத்தகைய சவால்களையெல்லாம் எதிர்கொண்டாக வேண்டும்' என்றார் அவர்.
சென்னை குழந்தைகள் நலக் குழுவின் தலைவரான அக்னேஸ் சாந்தி, எனது இளமைப் பருவத்தில் பள்ளிகளில் வழங்கப்பட்ட இலவசப் பாட நூல்களையும், மதிய உணவையும் கொண்டே நான் படித்தேன். அதனால் ஏழைக் குழந்தைகள் கல்வி பெறுவதில் உள்ள சிரமங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றார்.
நிகழ்ச்சியில், ஏழைக் குடும்பங்கள் மற்றும் தெருவோரக் குழந்தைகள் சிலரின் படிப்புக்கான கல்வி உதவித் தொகை குருகுலம் அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது.
முன்னதாக விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு வரதராஜுலு நாயுடு குடும்பத்தைச் சேர்ந்த ஜியா ரோஹித் என்ற சிறுமி மலர்க் கொத்துகள் வழங்கி வரவேற்றார். விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவரான பத்மாசினி தயானந்தா, இறுதியாக நன்றி
கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக