வெள்ளி, 24 மே, 2013

இலவய ஊர்தி உதவிகள்!

இலவச வாகன உதவிகள்!

மாற்றுத் திறனாளிகளுக்கான, இலவச மோட்டார் வாகனங்களை பெறும் முறைகளை விளக்கும், சூர்ய.நாகப்பன்: நான், "காலிப்பர்' என்ற, மாற்றுத் திறனாளிகளுக்கான ஆலோசனை மையத்தை, கோவையில் நடத்தி வருகிறேன். மாற்றுத் திறனாளிகள், தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களுக்கு எளிதில் சென்று வர, அரசு உதவியுடன், இலவசமாகவே, மூன்று சக்கர மோட்டார் வாகனங்களை பெறலாம். 18 வயது பூர்த்தியடைந்த, மேற்கல்வி பயில்வோர், சுயதொழில் செய்பவர் விண்ணப்பிக்கலாம். மாணவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை உண்டு. தாங்கள் பயிலும், கல்லூரி அல்லது கல்வி நிறுவன முதல்வரிடமிருந்து அத்தாட்சியும், மாற்றுத் திறனாளி என்பதற்கான, தேசிய அடையாள அட்டையின் நகலையும் இணைத்து, தாங்கள் வசிக்கும் மாவட்டத்தின், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலருக்கு, உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நல அலுவலர், விண்ணப்பதாரரை நேரடியாக அழைத்து, சான்றிதழ்களின் உண்மை தன்மையை விசாரித்து, மருத்துவ பரிசோதனை செய்வர். அதன் முடிவுக்கு ஏற்ப, உடற் குறைபாட்டை பொறுத்து, முன்னுரிமை கிடைக்கும். ஆனால், மூன்று சக்கர மோட்டார் வாகனம் ஓட்டும் அளவிற்கு, கரங்கள் வலு உள்ளதாக இருப்பது அவசியம். ஒவ்வொரு ஆண்டும், மாநில அளவில் தேர்வு செய்யப்படும், 1,000 பயனாளிகளுக்கு, சுதந்திர தினம், குடியரசு தினம், மாற்றுத் திறனாளிகள் சர்வதேச தினமான, டிச., 3ம் தேதி, ஆகிய நாட்களில், மூன்று சக்கர மோட்டார் வாகனங்கள், இலவசமாக வழங்கப்படும். அலுவலர் பரிசீலித்த பின்னும், வாகனம் வழங்க தாமதித்தால், மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், முதல்வரின் தனி பிரிவுக்கும், மனு அளிக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விண்ணப்பித்து, எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பெறலாம். ராஜிவ் காந்தி மெமோரியல் டிரஸ்ட், கார்ப்பரேட் நிறுவனங்கள், லயன்ஸ் கிளப், ரோட்டரி சங்கம் போன்ற தனியார் அமைப்புகளும், மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மோட்டார் வாகனங்களை வழங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக