செவ்வாய், 7 மே, 2013

குரல் அஞ்சல் தகவல்கள்!

குரல் அஞ்சல் தகவல்கள்!

வாய்ஸ் மெயில் மூலம், பயனுள்ள தகவல்களைத் தரும் விடியல் தொண்டு நிறுவனத்தின், காசிராசன்: நான், தேனி மாவட்டம், போடிநாயக்கனூரின் ராசிங்காபுரத்தை சேர்ந்தவன். பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில், "விடியல்' என்ற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து, அதன் வளர்ச்சி அலுவலராக பணியாற்றுகிறேன். இதன் மூலம் போடியை சுற்றியுள்ள, 280 பஞ்சாயத்துக் கூட்டமைப்புகளில் உள்ள பெண்களை இணைத்து, "விடிவெள்ளி பெண்கள் கூட்டமைப்பு' என்ற அமைப்பை உருவாக்கினோம்.இந்த அமைப்பின் மூலம், ஏழைப் பெண்கள் தொழில் துவங்க, பணம் தருவதற்கு முன், அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று, அவர்களுக்கான தொழில் குறித்த பயிற்சியை அளித்து வந்தோம். நேரடியாக வருவது மற்றும் மின் சாதனங்களை விட, மொபைல் போனில் உள்ள, "வாய்ஸ் மெயில்' தொழில்நுட்பம் மூலம், எளிதாக தகவலை பரிமாறலாம் என, சிந்தனை ஏற்பட்டது. ஒருவரின் பேச்சை பதிவு செய்து, அதை பலரது மொபைல் மூலம் கேட்க வைத்து, ஒரு தகவலை பரிமாறுவதே, வாய்ஸ் மெயில் எனப்படும். ஒரு முறை விவசாய மாநாட்டிற்காக டில்லி சென்ற போது, அங்கு என் கருத்தை தெரிவித்த போது, "இவ்கோ' என்ற நிறுவனம், வாய்ஸ் மெயிலை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்தது. "காமன்வெல்த் ஆப் லர்னிங்' என்ற கனடா நாட்டு அமைப்பின் உதவியுடன், எங்கள் குழுவில் உள்ள ஏழை பெண்களுக்கு, வங்கி கடன் மூலம், 10 ஆடு மற்றும் ஒரு மொபைல் போன் வாங்கி தந்து, அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற தகவலை, நாள் ஒன்றுக்கு, ஐந்து என்ற எண்ணிக்கையில், பயனாளிகளுக்கு வாய்ஸ் மெயிலாக அனுப்பினேன். வாய்ஸ் மெயிலால், சலிப்பு ஏற்பட கூடாது என்பதால், ஒரு நிமிட தகவல் மட்டுமே இருக்கும். அதிலும், 20 நொடி அறிமுகம், 40 நொடி தகவல், 20 நொடி முடிவு என்ற அடிப்படையில், ஆடு வளர்ப்பு பற்றிய புது புது தகவல்களை தினமும் அனுப்புவோம். எங்கள் கூட்டமைப்பில் உள்ள ஏழைப் பெண்கள், இத்தகவலை பயன்படுத்தி, வங்கி கடனை அடைத்து, 30 முதல், 40 ஆடுகள் வரை, சொந்தமாகவும் வைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக