ஞாயிறு, 12 மே, 2013

இராசபட்ச அரசு மீது பன்னாட்டு விசாரணை: கருணாநிதி

இராசபட்ச அரசு மீது  பன்னாட்டு விசாரணை: கருணாநிதி வலியுறுத்தல்

ஈழத் தமிழர்களின் படுகொலைக்குக் காரணமான ராஜபட்ச அரசு மீது சர்வதேச விசாரணை நடத்த தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களுக்கு இன்னமும் உரிய பரிகாரமும், நியாயமும் கிடைக்கவில்லை. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை முடிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது.
பல விசாரணைக் குழுக்கள், சர்வதேச அமைப்புகள் இலங்கையில் நடைபெற்ற கொடுமைகளை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று உணர்த்தியுள்ளன. கொடுமைகளுக்கான சான்றுகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. மேலும் ஒரு சான்றாக சர்வதேச பொதுமன்னிப்பு சபை விசாரணை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் இலங்கையில் நடைபெற்ற மற்றும் நடைபெற்று வரும் கொடுமைகளை அம்பலப்படுத்தியுள்ளது. போர் முடிந்த பிறகும் அரசியல், சமூக நடவடிக்கைகளில் இலங்கை அரசு பொறுமையின்மையை கடைப்பிடித்து வருகிறது. மனித உரிமைகளும், சர்வதேச சட்டங்களும் அப்பட்டமாக மீறப்படுகின்றன.
அநீதி இழைக்கப்பட்டோருக்கு நியாயம் கிடைக்கவில்லை. போருக்கு முன்னும் பின்னும் காணாமல் போனவர்கள் பற்றி எந்தத் தகவல்களும் இல்லை என பொதுமன்னிப்பு சபை கூறியுள்ளது.
பொதுமன்னிப்பு சபை, சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஐ.நா. பொதுச்செயலாளரால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு போன்றவை இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நம்பகத்தன்மை கொண்ட விசாரணை நடத்த வேண்டும் என குரல் கொடுத்தும் இதுவரை பலன் கிடைக்கவில்லை.
எனவே, ராஜபட்ச அரசின் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த நாமும் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக