வெள்ளி, 14 ஜூன், 2013

300 ஆண்டு பழைமையான மரத்துக்கு மறு பிறவி!


300 ஆண்டு பழைமையான மரத்துக்கு த் "தினமலர்' செய்தியால் மறு  பிறவி!
திருப்பூர்: திருப்பூரில், மழைக்கு சாய்ந்த 300 ஆண்டுகள் பழமையான வன்னி மரம் நேற்று மீண்டும் நடப்பட்டது.

திருப்பூர், பெருமாநல்லூர்-கணக்கம்பாளையம் ரோட்டில் இருந்த 300 ஆண்டுகள் பழமையான அரிய வகை மரமான வன்னி மரம், கடந்த 2ம் தேதி பெய்த மழைக்கு வேருடன் சாய்ந்தது. மரத்தை மீண்டும் நட வேண்டும் என, ஜூன் 3ல் "தினமலர்' நாளிதழ் திருப்பூர் இணைப்பில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அம்மரத்தை அப்பகுதி மக்கள், வன்னி ஈஸ்வராக வழிபட்டு வந்துள்ளனர். அதனால், மரத்தை காக்க முடிவு செய்து, நெடுஞ்சாலைத்துறையிடம் இருந்து 7,500 ரூபாய்க்கு மரத்தை ஏலம் எடுத்தனர். புதிய இடத்தில் நட, நாதம்பாளையம் பாத விநாயகர் கோவில் முன், துணை தலைவர் வீரக்குமார் தோட்டத்தில் இடம் தேர்வு செய்து, 11 அடி அகலம் 10 ஆழத்துக்கு குழி வெட்டப்பட்டது. 2 கி.மீ., தூரம் எடுத்துச் செல்ல வசதியாக, மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டன. இயந்திரங்களின் உதவியுடன் பெரிய லாரியில் ஏற்றி செல்லப்பட்ட மரம், குழியில் நடப்பட்டது. 12 மணி நேர முயற்சிக்கு பிறகு, இரவு 7.00 மணிக்கு மரம் நடவு செய்யப்பட்டது. தாங்கள் வணங்கி வந்த மரம் மீண்டும் நடப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இரண்டு கிலோ மீட்டர் மரம் பயணம் செய்தபோது, வழி நெடுகிலும் திரளான மக்கள், மலர் தூவியும், தண்ணீர் தெளித்தும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர். மரத்தை மீண்டும் எடுத்து நடும் பணியில், கணக்கம்பாளையம் கிராம மக்கள், வர்ஷா இன்டர்நேஷனல் பங்குதாரர் ராமசாமி, நிப்ட்-டீ கல்லூரி சேர்மன் ராஜா சண்முகம், கிரீன் அண்டு கிளீன் அமைப்பு, "தினமலர்' நாளிதழ் செய்தியை பிரதி எடுத்து, மக்களிடம் நிதி திரட்டிய பொன்சுந்தரம், கணக்கம்பாளையம் ஊராட்சி தலைவர் லட்சுமி சண்முக சுந்தரம் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். "தினமலர்' நாளிதழ் செய்தியே, மீண்டும் மரம் நட உந்துதலாக அமைந்ததாக அனைவரும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக