செவ்வாய், 25 ஜூன், 2013

மிதிவண்டியில் ஆற்றைகடக்கலாம்!

மிதிவண்டியில் ஆற்றைகடக்கலாம்!

ஆற்றைக் கடந்து செல்ல, மிதக்கும் மிதிவண்டியைக் கண்டுபிடித்துள்ள கல்லூரி மாணவன், சூர்யா: நான், வேதாரண்யம் மாவட்டத்தின், செம்போடையில் உள்ள, ஆர்.வீ., பாலிடெக்னிக் கல்லூரியில், இயந்திரவியல் இறுதிஆண்டு படிக்கிறேன். ஆற்றங்கரையில் அமைந்துள்ள, பல தமிழக கிராமங்களில், ஆற்றைக் கடந்து செல்ல போதுமான வசதிகள் இன்றி, பல கி.மீ., தூரம், சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழைக் காலங்களில், இவர்கள் படும் துன்பங்களை விவரிக்க முடியாது. ஆற்றில், நீரோட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் கடக்க முயன்று, அடித்துச் செல்லப்பட்டவர்களும் அதிகம். இப்பிரச்னைக்குத் தீர்வு காண, நான் கண்டுபிடித்ததே, இந்த மிதவை சைக்கிள். லாரியின், "டயர் டியூபை' அரை வட்ட வடிவில் இரண்டாகப் பிரித்து, அதில் காற்று நிரப்பி, சைக்கிளின் முன் டயரில் ஒன்றும், பின் டயரில் ஒன்றுமாக இணைத்தேன். இரும்பு தகடுகளால் செய்யப்பட்ட, சிறப்பு விசிறியை, இரு புறத்திலும் இணைத்தேன். காற்று நிரப்பப்பட்ட டியூபால், சைக்கிளுக்கு மிதக்கும் தன்மை கிடைக்கும். பெடலை அழுத்தும் போது, பின் சக்கரம் சுற்ற, விசிறியும் சேர்ந்தே சுற்றப்பட்டு, முன்னோக்கி செல்கிறது. மற்ற சைக்கிள்கள் போல் இல்லாமல் சக்கரங்களில், "புஷ் பேரிங்' பொருத்தப்பட்டு உள்ள தால், பெடலை மெதுவாக அழுத்தினாலே மணிக்கு, 15 முதல், 20 கி.மீ., வேகத்தில், தண்ணீரில் செல்ல முடியும். இந்த சைக்கிளில் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து பொருட்களுமே, உள்ளூர் சந்தைகளில் எளிதில் கிடைக்கக் கூடிய, குறைந்த விலை பொருட்களே. சாலையில் ஓட்டும் சைக்கிளை, மிதக்கும் முறைக்கு மாற்ற, 1,500 ரூபாய் செலவாகிறது. மிதக்கும் அமைப்பை எளிதில் மாற்றி, "டூ இன் ஒன்' போன்று, சாதாரண சைக்கிளாகவும் பயன்படுத்தலாம். சிறு மீனவர்களால், படகு வாங்க முடியாது. எனவே, ஏரி, குளம், ஆறு போன்றவற்றில், மீன் பிடிப்பதற்கு, மிதவை சைக்கிளை படகாகப் பயன்படுத்தலாம். சைக்கிளில் இணைக்கப்படும் மொத்த எடை, 7.5 கிலோ என்பதால், சைக்கிள் தண்ணீரில் மூழ்கிவிடும், என்ற பேச்சுக்கே இடமில்லை. தொடர்புக்கு: 96888 80213.

1 கருத்து: