ஞாயிறு, 30 ஜூன், 2013

தமிழ்நாடு என்பது தமிழர் நாடா அல்லது அயலவர் நாடா - இலக்குவனார் திருவள்ளுவன் வினா : தமிழக அரசியல்



குமரியில் திருப்பதியின் கிளை!


கிளம்பும் எதிர்ப்பு
ஆரா & இக்னேசியசு
[நன்றி : தமிழக அரசியல் : நாள்: 03.07.2013 ;பக்கம் : 10-11]

[இதன் ஒரு பகுதி :]

இந்த சர்ச்சை பற்றித் தமிழ்க்காப்புக்கழகத்தின் தலைவர் திருவள்ளுன் இலக்குவனார் வேறு கோணத்தில் கருத்து தெரிவிக்கின்றார்.

"எந்தக் கோயிலுக்கும் சென்று எக்கடவுளையும் வழிபடும் உரிமை  எவருக்கும் உண்டு.  அவரவர்கள் வாய்ப்பையும் வசதியையும் பொறுத்து விரும்பும் கோயிலுக்குச் செல்லலாம். ஆனால், அதற்காக  வணிக நிறுவனங்களின் கிளைபோல் பிற மாநிலக் கோயில்களுக்குக் கிளை அமைப்பது முற்றிலும் வணிகமேயன்றி வேறில்லை.

திருப்பதியில் வேண்டுமென்றே செயற்கையான நெரிசலை உருவாக்கி வருவோர் எண்ணிக்கையையும் தவறாகக் காட்டி, இறையன்பர்களை ஏமாற்றி வருகின்றனர். திருப்பதிக்கு வருவோர்களை ஆங்காங்கே கூண்டிற்குள் தேவையின்றி அடைத்து வைப்பதற்கு மாறாகச் சீரான ஒழுங்கில் வரிசையாக அனுப்பி வைத்தால் விரைவாகவும் அமைதியாகவும் அனைவரும் வழிபட இயலும்.  அவ்வாறில்லாமல்,  தமிழ்நாட்டிலுள்ள மக்கள் வழிபட வசதியாக இங்கே குமரியில் திருப்பதி கோயிலைக் கட்டுவது என்பது வணிகத்திற்காகத் தொடங்கப்படும் கிளைக்கடைதான் என்பதில் ஐயமில்லை.

முதலில் தமிழர்க்கு உரிமையான திருப்பதியை ஆந்திரர்கள் மத்திய அரசின் உதவியால் பறித்தனர். இப்பொழுது  தமிழர்களின் செல்வத்தைப் பறிக்கப் பார்க்கின்றனர். திருப்பதி கோயில் தமிழர்க்கு உரியதே என்பதை வரலாறு அறிந்தவர்கள் நன்கு அறிவர்.

ஏற்கெனவே நாம் தமிழ்நாட்டின் எல்லையாகிய திருப்பதியை ஆந்திரத்திடம் பறிகொடுத்துள்ளோம். இதனால் தமிழரால் கட்டடப்பெற்றுத் தமிழ் மக்களால் நிறைந்த கருவூலமும் ஆந்திராவிற்குச் சென்று விட்டது. இப்பொழுது தமிழ்நாட்டில் திருப்பதி கோயிலைக் கட்டுவது என்பது தமிழ் மக்களின் பணத்தைத் தமிழ்நாட்டிலேயே சுரண்டலாம் என்ற எண்ணம்தான். இதற்கு இறையன்பர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அரசும்இதை உடனே தடை செய்ய வேண்டும்.

கோயில் கட்டுவதற்கு விவேகானந்தர் நிலையம் நன்கொடையாக நிலம் தருகின்றது. இந்த நிலம் எந்த நோக்கத்திற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டதோ அதை மீறி நன்கொடையாக வேறு நோக்கத்திற்குக் கொடுப்பதும் தவறாகும்.  தமிழ்நாட்டிலுள்ள அயல் மாநிலத்தவர் அமைப்புகளின் வருவாயில்  முக்கால் பங்கைத் தமிழக அரசிற்குத் தமிழ் மக்களின் நலத்திட்டத்திற்காகப் பெறும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.
கன்னியாகுமரியிலுள்ள குமரி அம்மன் கோயிலைப் பகவதி அம்மன் என விளம்பரப்படுத்தி மலையாளக் கோயில் போல் காட்டி வரும் போக்கு இப்போது நிலவுகிறது. இதோடு ஆந்திரமக்களின் கட்டுப்பாட்டிலுள்ள கோயிலுக்கான கிளையை இங்கே தொடங்குவது என்பது தமிழ்நாடு என்பது தமிழர் நாடா அல்லது அயலவர் நாடா என்ற ஐயப்பாட்டை எழுப்புகின்றது" என்கிறார் திருவள்ளுவன் இலக்குவனார்.

விரிவிற்குக் காண்க :







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக