திங்கள், 10 ஜூன், 2013

ஓயாத மக்கள் அலை



ஓயாத மக்கள் அலை
கோவை, உக்கடம், பெரியகுளத்தை த் தூர்வாரும் மகத்தான பணியில், நேற்று மட்டும் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர். பெரியகுளத்தை தூர்வாரும் பணி, கடந்த மாதம் 2ம் தேதி துவங்கியது. இப்பணியை "ராக்' அமைப்பிடம், மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. இதில், "சிறுதுளி' அமைப்பும் இணைந்துள்ளது. பருவமழை துவங்கும் முன், பணியை முடிக்க, நவீன இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணி தீவிரமடைந்துள்ளது. இப்பணியில், பொதுமக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக, ஞாயிறு தோறும் "ஊர்கூடி தூர்வாரும்' நிகழ்வும் நடந்தது. பல ஆயிரம் மக்கள், உணர்வுப்பூர்வமாக பங்கேற்று, தங்களின் வியர்வையை குளத்துக்கு காணிக்கையாக்கினர்.

குளம் தூர்வாரும் பணியில் மக்கள் பங்கேற்பது, நேற்றுடன் நிறைவு பெற்றது. நேற்று மட்டும், ஏறத்தாழ 10 ஆயிரம் மக்கள், சமூக அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசுப்பணியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என, பல அமைப்புகள் களம் இறங்கி தூர்வாரியதாக, "ராக்' அமைப்பினர் தெரிவித்தனர். மக்கள் வெள்ளம், கரைபுரண்டதால், உக்கடம் குளம் எங்கும் மனித தலைகளால் நிரம்பியது. இயற்கையை நேசிப்போர் சிந்திய வியர்வை துளிகளால், குளத்து மண்ணில் ஈரம் கசிந்தது. உக்கடம் குளத்தின் மொத்த பரப்பு 326 ஏக்கர். இதில், 80 ஏக்கர் அளவுக்கு தற்போது தண்ணீர் உள்ளது. இதுவரை, 197 ஏக்கரில் தூர்வாரப்பட்டுள்ளது. இன்னும் 25 ஏக்கர் மட்டுமே, பணிகள் நடக்க வேண்டியுள்ளது.பறவைகள் ஓய்வெடுக்கவும், கூடுகட்டி வாழவும் வசதியாக, 175 மீட்டர் அகலம், 12 மீட்டர் உயரத்தில் 4 தீவுகள் குளம் நடுவே அமைக்கப்பட்டுள்ளன. குளக்கரையில், 6 கி.மீ., சுற்றளவுக்கு மண் கொட்டி பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, "சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன், "ராக்' அமைப்பின் செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் கூறியதாவது:தூர்வாரும் நிகழ்வில், இவ்வளவு எண்ணிக்கையில் மக்கள் வருவார்கள் என்று, நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது, கோவை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்துவிட்டது. தற்போது, தூர்வாரும் பணி முடிந்துள்ளது. குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் வேலைகளை துவங்க வேண்டும். குளத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள தீவுகளில் கனி மரங்களை நட்டு, பறவைகள் தங்குவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். இக்குளத்தில் நான்கு இடங்களில், சாக்கடை கழிவு நீர் கலக்கிறது. நான்கு குழாய்களையும் ஒன்றாக இணைத்து சுத்திகரிப்பு நிலையம் மூலம் மறுசுழற்சி செய்து, அதன்பிறகு தண்ணீரை குளத்தில் விடுவதற்கான பணிகளை செய்ய வேண்டும். இதற்கு மாநகராட்சி நிர்வாகத்தின் உதவியை கேட்டுள்ளோம். உக்கடம் குளம் சீரமைப்பு பணிக்காக, கோவை எம்.பி., நடராஜன் 50 லட்சம் ரூபாய், தொகுதி நிதியில் இருந்து வழங்க முன்வந்துள்ளார், என்றனர்.
கரசேவைக்கு கைகொடுத்தோர்!



*மாநகர போலீசார் 1000 பேர்
*மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர்
*கோவை மெரைன் கல்லூரி மாணவர்கள்
*தேசிய மாணவர் படையினர்
*"தினமலர்" நாளிதழ் ஊழியர்கள்
*ஆம் ஆத்மி கட்சி
*கண்ணம்பாளையம் பசுமை திட்டம் அமைப்பினர்
*விமானப்படை வீரர்கள்
*எல்.ஐ.சி., ஊழியர்கள்
*ஈஷா யோக மையம்
*சூரியா சேவா சங்கம்
*இயற்கை பாதுகாப்பு சங்கம்
*பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா
*கார்மேக்கர் கார்டன் அமைப்பு
*சோசியல் டெமாக்கரடிக் பார்ட்டி
*மனிதநேய மக்கள் கட்சி
*முஸ்லிம் முன்னேற்ற கழகம்
*லோக் சக்தா
*கோவை தகவல் தொழில் நுட்ப அமைப்பு (சி.ஐ.டி.ஏ.,)
*ஒய்ல்டு விங் சொசைட்டி
*நேச்சர் கன்சர்வேஷன் சொசைட்டி
*இயற்கை பாதுகாப்பு குழு
*சி.எம்.எஸ். கல்லூரி, கோவை
*அக்வா குரூப்.
*ரெய்ன்போ வாக்கர்ஸ்
*ரேடியோ சிட்டி
*கொடிசியா வீ எஸ். அலாய்ஸ்
*ஹீமோபீலியா சொசைட்டி
*மதுக்கரை "ஏசிசி' நிறுவனத்தினர்
*காளம்பாளையம் மக்கள்
*நிக் டியூசன் சென்டர்
*பூமார்க்கெட் அரேபியா ஹாஸ்டல்
*புல் மெசின்ஸ் நிறுவனம்
*இந்தியன் டென்டல் அசோசியேஷன்
*லயன்ஸ் ஓரியன் கிளப்
*ஏர்கண்டிஷன் ஓனர்ஸ் அசோசியேஷன்
*பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனம்
*கோவை நுகர்வோர் மற்றும் வினியோகஸ்தர்கள் அசோசியேஷன்
*பேப்பர் வியாபாரிகள் சங்கம்
*ஏ.பி.டி., நிறுவனம்
*ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமம்மற்றும் பல அமைப்புகள், மக்கள் குழுக்கள்.

குளம் தூர்வாரிய மக்களுக்குஉணவு, உபகரணம் அளித்தோர்:
*உணவு: அன்னபூர்ணா ஓட்டல் மற்றும் ஓட்டல் ஓனர்ஸ் அசோசியேஷன்
*குடிநீர்: சபோல் மினரல் வாட்டர், பாரதிராஜா வாட்டர் சர்வீஸ்
*இனிப்பு: பி.எஸ்.ஜி., குழுமம்
*போட்டோ: போட்டோ சென்டர் கோவை
*வீடியோ: ஐ.ஏ.பி., கோவை
*மண் அள்ளும் உபகரணங்கள்: பில்டர்ஸ் அசோசியேஷன் மற்றும் ஹார்டுவேர் அசோசியேஷன், கோவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக