திங்கள், 24 ஜூன், 2013

கோயில்களில் அன்னதானத் திட்டத்திற்குத் தணிக்கை தேவை.

பெரும்பாலும் எல்லாக் கோயில்களிலும் 100 பேருக்கு உணவு என்றால் 60 வில்லைகள் கொடுப்பார்கள். இவற்றில் 10 எடுத்து வைக்கப்பட்டு இறுதிநேரம் வருபவர்களுக்கு வழங்கப்படும். பிச்சைக்காரர்கள் உணவு நேரம் நெருங்குவதற்கு முன்னரே வந்து அமர்ந்து விடுவார்கள். இவர்களைப் பார்த்த பிறர்   சேர்ந்து உண்ணத் தயங்கிச் சென்று விடுவர். 40 உணவு விவரம் பற்றி விளக்கத்  தேவையில்லை.  வடக்கே பல கோயில்களில் பாகுபாடின்றி உணவு நேரம் வரும் இறையன்பர்கள் யாவரும் உண்ண வசதி உள்ளது.  இங்கு பிச்சைக்காரர்களை மறுவாழ்வு இல்லங்களில் சேர்க்க வேண்டும். உணவுக்கொடைக்கு உரிய எண்ணிக்கை அளவில் உணவு வழங்க வேண்டும். மோசடிகளைத் தடுக்க வேண்டும்.  தினமலரின் செய்தி அரசின் கண்களைத் திறந்தால் நன்று.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

கோயில்களில் அன்னதானத் திட்டத்திற்குத் தணிக்கை தேவை.
பிச்சைக்காரர்கள் தொடர்ந்து வருவதால் சிக்கல்

தமிழக க் கோவில்கள் பலவற்றில், அன்னதான திட்டத்தின்கீழ் சாப்பிட பிச்சைக்காரர்கள் குவிவதால்,ஏழை மக்களும், பக்தர்களும் சாப்பிடதயக்கம் காட்டி வருகின்றனர்.
362 கோவில்களில்...: தமிழகம் முழுவதும் அறநிலையத் துறையின் கீழ் உள்ள வருமானம் மிகுந்த கோவில்களில், ஏழைகள், பக்தர்கள் பசியாறிட,
2002ம் ஆண்டு, முதல்வர் செயலலிதா அன்னதான திட்டத்தை துவக்கி வைத்தார். முதற்கட்டமாக, 63 கோவில்களில் துவங்கிய அன்னதான திட்டம், ஏழு கட்டமாக, 362 கோவில்களில் விரிவுபடுத்தப்பட்டது.கடந்த, 2011 செப்டம்பர் மாதம், 106 கோவில்களில் அன்னதான திட்டத்தை விரிவுப்படுத்தியதால், தற்போது தமிழகத்தில், 468 கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுகிறது.ஒவ்வொரு கோவில்களிலும், 50 முதல், 100 பேருக்கு மேல் உணவு வழங்கப்படுகிறது. பெரும்பாலான கோவில்களில் அன்னதானம் சாப்பிட அதிகமாக பிச்சைக்காரர்கள் குவிவதால், கோவிலுக்கு வரும் ஏழைகள், பக்தர்கள் அன்னதானம் சாப்பிட தயக்கம்காட்டி வருகின்றனர்.
தானமே நடக்கிறது:
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏழை, எளிய மக்கள் பயன்பெறவே அன்னதான திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டம் நடக்கும் பெரும்பாலான கோவில்களில், அன்னதானம் சாப்பிடும் பக்தர்களின் எண்ணிக்கை

குறைவாகவே உள்ளது. எனவே, வெளியில் இருந்த பிச்சைக்காரர்களுக்கு, தானம் செய்யும் நிலை இருந்தது.நாளடைவில், ரெகுலராக பிச்சைக்காரர்களே அதிகமாக கோவிலுக்குள் வந்து சாப்பிடுவதால், ஏழை, எளிய மக்கள் சாப்பிட தயக்கம் காட்டிவருகின்றனர். அன்னதான திட்டம் செயல்படும் கோவில்களில் ஆய்வு செய்ய, தணிக்கை குழு அமைக்க வேண்டும்.ஏழை, எளிய பக்தர்களுக்கு மட்டும், அன்னதானத்தை வழங்க, அந்தந்த மாவட்ட அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை, எளிய பக்தர்கள் வராத நிலையில், பிச்சைக்காரர்களையும், தினமும் வழிபட வருவோரையும் அனுமதிக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

-
தினமலர் செய்தியாளர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக