சனி, 20 ஜூலை, 2013

தலைமை நீதிபதி சதாசிவத்துக்குப் பாமகவின் 3 கோரிக்கைகள்

தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு ப் பாமகவின் 3 கோரிக்கைகள்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள சதாசிவத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மூன்று முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் குக்கிராமத்தில் பிறந்த நீதியரசர் ப. சதாசிவம் உச்சநீதிமன்றத்தின் தலைமை  நீதிபதியாக இன்று பொறுப்பேற்றிருக்கிறார். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து மக்களோடு, மக்களாக பழகிய ஒரு தமிழர் முதன்முறையாக இந்திய தலைமை நீதிபதியாக பதவியேற்றிருப்பது தமிழக மக்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.
தமிழக மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று அவர் கூறியிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. எனவே, நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் மூன்று முக்கிய கோரிக்கைகளை அவர் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்ட நீதியரசர் சதாசிவம், நீதிபதி பணிக்கான தகுதியில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் பல்வேறு சமுதாயங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்காகத் தனிச் சட்டம் எதுவும் கொண்டுவரத் தேவையில்லை என்ற போதிலும், 1993ஆம் ஆண்டில் நீதிபதிகள்   நியமனத்திற்காக கொலிஜியம் முறை எவ்வாறு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்படுத்தப்பட்டதோ, அதேபோல நீதிபதிகள் நியமனத்தில் தகுதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் நிரந்தரமான ஓர் ஏற்பாட்டை தலைமைநீதிபதிசெய்ய வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. 2006ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இன்று வரை அத்தீர்மானத்திற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.  இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் இந்தியில் வாதிடவும், வழக்கு நடத்தவும் அனுமதி அளிக்கப்படும் நிலையில்,  தமிழில் வாதிடப்பட்ட ஒரே காரணத்திற்காக வழக்குகளே தள்ளுபடி செய்யப்படும் அவலம் தமிழ்நாட்டில் அரங்கேறியிருக்கிறது. எந்த ஓர் இனத்திற்கும் அவர்களின் சொந்த மொழியில் வாதிடும் வாய்ப்பு மறுக்கப்படுவது மிகவும் கொடுமையானது. எனவே, இந்த பிரச்சினையில் உள்ள முட்டுக்கட்டைகளை அகற்றி, சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறிவிக்க நீதியரசர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாட்களாக  கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழகத்திலிருந்து தில்லிக்கு சென்று வருவது சாதாரண மக்களால் சாத்தியமாகக் கூடிய ஒன்றல்ல. எனவே, உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்கவும் நீதியரசர் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
நீதியரசர் சதாசிவம் அவர்கள் 9 மாதங்கள் மட்டுமே தலைமை நீதிபதி பதவியில்  இருப்பார் என்ற போதிலும், அவரது பணிக்காலம் தமிழர்கள் பெருமையும், பெருமிதமும் படும் வகையில் இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக