திங்கள், 26 ஆகஸ்ட், 2013

கேதார் நாத்தும் அசோக் கேடியாவும்...

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_787332.jpg








கேதார் நாத்தும் அசோக் கேடியாவும்...

சென்னையில் உள்ள புகழ் பெற்ற கல்வி நிறுவனமான ஜெய்கோபால் கரோடியா பள்ளியின் நிர்வாக அறங்காவலராக இருப்பவர் அசோக் கேடியா.
இவருக்கு சிறு வயது முதலே புகைப்படம் எடுப்பது என்பது விருப்பமான பொழுதுபோக்கு

சென்னையில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கும் மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டியை, புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் பொன்னுசாமியுடன் சேர்ந்து கடந்த 2002ம் ஆண்டு துவக்கியவர். இந்த அமைப்பு இந்தியா இன்டர்நேஷனல் போட்டோகிராபிக் கவுன்சில், பெடரேஷன் ஆப் போட்டோகிராபி, போட்டோகிராபி சொசைட்டி ஆப் அமெரிக்கா ஆகிய புகைப்பட கழகங்களுடன் இணைந்து செயல்படும் சிறப்பைக்கொண்டதாகும்.
அமைப்பின் நண்பர்களுடன் சேர்ந்து அவ்வப்போது பல ஊர்களுக்கும் சென்று படமெடுக்கும் இவர் கடந்த மே மாதம் கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய பகுதிகளுக்கு சென்று புகைப்படம் எடுத்தார்.

இந்தியாவின் ஆன்மிகம் குடிகொண்டிருக்கும் இந்த மலைகளின் அழகை, அற்புதத்தை, இயற்கையை, பசுமையை, வெள்ளியை உருக்கி ஊற்றியது போன்ற உயிரோவியத்தை, வெயிலின் ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு முகம் காட்டும் சிகரங்களை, கண்ணாடி போல தெளிந்து ஒடும் ஆறுகளின் அழகை தனது கேமிரா கண்களால் அள்ளினார்.
இத்தனை நாள் இத்தகைய அழகை பார்க்காமல் இருந்துவிட்டோமே, இனிமேல் அடிக்கடி இங்கு வரவேண்டும் என்று தான் எடுத்த படங்களை எல்லாம் நண்பர்களுக்கு போட்டுக் காண்பித்து அடுத்த கேதார்நாத் பயணத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்.

இவர் கேதார்நாத் போய்வந்து சரியாக ஒரு மாதம் கூட ஆகாத சூழலில்தான் அந்த துயரம் நடந்தது. உத்தர்கண்ட் மாநிலத்தின் பேரழிவாக கருதப்படும் அபாய வெள்ளம் ஏற்பட்டது. கண்ணில் பட்டவைகளையும், கரையில் இருந்தவைகளையும் சூறையாடிய வெள்ளம் கேதார்நாத்தின் பெரும்பகுதியை விழுங்கிவிட்டது.
இவர் போய்வந்த பகுதிகள் எல்லாம் மண்மேடிட்டதை பார்த்து முதல் இவருக்குள் ஏற்பட்ட சோகமும், வருத்தமும் இன்னமும் குறையவில்லை.

சமீபத்தில் நடந்த உலக புகைப்பட தினவிழாவின் போது இவர் சென்னை அண்ணாநகரில் உள்ள ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் தான் எடுத்த கேதார்நாத்தின் உயிரோட்டமுள்ள படங்களை கண்காட்சியாக வைத்திருந்தார். படங்களின் அழகை பார்க்க, பார்க்க எப்படி இருந்த கேதார்நாத் என்று பார்த்தவர்கள் மனதிலும் வலி.
இவரிடம் கேதார்நாத் புகைப்பட அனுபவங்கள் பற்றி பேசவும், மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டி பற்றி தெரிந்து கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9841026580.

இவரது கேதார்நாத் படங்களை சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரி பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக