புதன், 21 ஆகஸ்ட், 2013

பொதுநல அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் : இராமதாசு

பொதுநல அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் : இராமதாசு

காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த இலங்கை அதிபர் மகிந்த இராஜபக்சே மற்றும் போர்ப்படைத் தளபதிகள் மீது போர்க்குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தமிழக தமிழர்களும், உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களும் கடந்த 4 ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் போதிலும், இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய இந்திய அரசு அமைதியை கடைபிடித்து வருகிறது. போர்க்குற்ற நாடான இலங்கைக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், அங்கு வரும் நவம்பர் 15 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் காமன்வெல்த் ஆட்சித் தலைவர்கள் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்கவில்லை.
இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும்  வலியுறுத்தி உள்ளனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ஏழு கோடி தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்பது பற்றி மத்திய அரசு இதுவரை எதையும்  கூறவில்லை.
இலங்கைப் பிரச்சினையை பொறுத்தவரை இந்திய அரசு ஆரம்பத்திலிருந்தே இராஜபக்சே அரசுக்கு ஆதரவாகவும், ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் தான் செயல்பட்டு வருகிறது. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது கடந்த மார்ச் மாதம் வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் மற்றும் போர்க்குற்றங்களைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்  என்று தமிழக கட்சிகள் வலியுறுத்தின. இதுகுறித்து மற்ற கட்சிகளுடன் பேசி முடிவெடுப்பதாக கூறிய மத்திய அரசு,  அண்டை நாட்டிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வெளியுறவு கொள்கை இடமளிக்காது என்று கடைசி நேரத்தில் கூறிவிட்டது. அதேபோல், ஐ.நா மனித உரிமை ஆணையத்திலும் தமிழகத்தின் கோரிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்தது. ஆனால், காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் சுட்டதற்காக பாகிஸ்தானைக் கண்டித்து கடந்த 14-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை நான் வரவேற்கிறேன். ஆனால், எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறியதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற அனுமதித்த வெளியுறவுக் கொள்கை, லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் கொண்டு வருவதற்கு மட்டும் இடம் தராதது ஏன்? என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்.
அதேபோல் காமன்வெல்த் அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டாலோ அல்லது ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டாலோ, அந்த நாடுகளை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் இந்தியா தான் தீவிரம் காட்டியிருக்கிறது. காமன்வெல்த் அமைப்பு தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரையிலான 65 ஆண்டுகளில் பாகிஸ்தான், ஃபிஜி தீவுகள், ஜிம்பாப்வே, நைஜீரியா ஆகிய 4 நாடுகள் மட்டுமே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. 2007-ஆம் ஆண்டில் காமன்வெல்த் அமைப்பிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டதற்கு அந்நாட்டின் ராணுவத் தளபதி பதவியில் இருந்து விலக அதிபர் முஷராப் மறுத்தது, ஊடகங்களை அச்சுறுத்தி ஒடுக்கியது, சுதந்திரமாக தேர்தலை நடத்த தடை போட்டது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பணியிடை நீக்கம் செய்தது ஆகியவை தான் காரணமாக கூறப்பட்டன. இந்த குற்றங்களை எல்லாம் இலங்கை அதிபர் இராஜபக்சேவும் செய்திருக்கிறார். கூடுதலாக லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களை இனப்படுகொலை செய்திருக்கிறார். அவ்வாறு இருக்கும்போது, பாகிஸ்தானை காமன்வெல்த் அமைப்பிலிருந்து இரு முறை நீக்க நடவடிக்கை எடுத்த மத்திய அரசு, இலங்கைக்கு எதிராக அதே நடவடிக்கையை எடுப்பதற்கு மட்டும் தயங்குவது ஏன்? பாகிஸ்தானுக்கு ஒரு நீதி....  இலங்கைக்கு ஒரு நீதியா?
உலக வரலாற்றை ஆய்வு செய்து பார்த்தால் மற்ற எந்த சர்வாதிகாரிகளையும் விட இலங்கை அதிபர் இராஜபக்சே அதிக குற்றங்களை இழைத்திருக்கிறார். இதற்காக சர்வதேச சமுதாயத்தால் தண்டிக்கப்பட வேண்டிய அவர், காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தி தமக்கு உலகத்தின் ஆதரவு இருப்பதாக காட்டிக்கொள்ள முயல்கிறார். ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்ததுடன், இந்திய மீனவர்களை தாக்கியும், கொன்றும், கைது செய்தும் கொடுமைப் படுத்திவரும் இராஜபக்சேவை தண்டிப்பதற்கு பதிலாக, காமன்வெல்த் அமைப்பின் நடப்புத் தலைவராக அவர் மகுடம் சூடிக்கொள்வதற்கு இந்தியா துணைபோவது கொலைக் குற்றவாளிக்கு நீதிபதி பதவி தருவதற்கு ஒப்பானதாகும்.
எனவே, உத்தமர் வேடம் போட முயலும் இராஜபக்சேவுக்கு இந்தியா எந்த வகையிலும் துணை போகக் கூடாது. மாறாக தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
1) காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளக்கூடாது.
2)  வரும் நவம்பர் 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில், அந்த அமைப்பிலிருந்து இலங்கையை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நட்பு நாடுகள் மூலமாக கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்.
3) இலங்கையில் நடைபெற்ற ஈழத்தமிழர் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்.
4) இலங்கை அதிபர் இராஜபக்சே மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5) இலங்கையில் சிங்களர்களுடன் தமிழர்கள் ஒன்றாக வாழ வாய்ப்பே இல்லை என்பதால், தமிழர்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து, அதை தமிழீழமாக அறிவிப்பது குறித்து ஐ.நா.மன்றத்தின் மூலம்  உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே வாக்கெடுப்பு நடத்த வகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக