வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களோடு சாதிப் பெயர்களா?- உயர்நீதிமன்றம்

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களோடு சாதி ப் பெயர்களா? அரசு  விடை யிறுக்க உயர்நீதிமன்றம் அறிவிக்கை 

சென்னை: தமிழகத்தில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பெயர்களில், ஒட்டியிருக்கும் சாதிப் பெயர்களை, நீக்கக் கோரி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு, "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்ட ஐகோர்ட், விசாரணையை, செப்டம்பருக்கு தள்ளிவைத்துள்ளது.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்.,:

சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர், எஸ்.சரவணன் என்பவர், தாக்கல் செய்த மனு: ஜாதி முறையை ஒழிக்க வேண்டும் என்றால், மக்களுக்கு கல்வியறிவு புகட்டப்பட வேண்டும். தெருக்களின் பெயர்களில் இருந்த ஜாதி பட்டங்களை நீக்கும்படி, மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., உத்தரவிட்டார். ஜாதி வன்முறையை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, போக்குவரத்துக் கழகங்களின் பெயர்கள், 1997ல் மாற்றப்பட்டன. "மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, வெள்ளாளர் மகளிர் கல்லூரி, நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, சிக்கையா நாயக்கர் கல்லூரி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி, யாதவர் கல்லூரி, மதுரை சிவகாசி நாடார் கல்லூரி' என, பல கல்லூரிகளின் பெயர்களில், ஜாதியின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளைப் பொறுத்தவரை, சவுராஷ்டிரா பள்ளி, நாடார் சரஸ்வதி பள்ளி, அரசு கள்ளர் பள்ளி, ராமசாமி செட்டியார் பள்ளி, சி.பி.ராமசாமி அய்யர் பள்ளி என, பள்ளிகளின் பெயருக்குப் பின்னும், ஜாதி பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் மனதில்:

மக்கள் நல அரசானது, ஜாதியின் பெயரில், பள்ளிகள், கல்லூரிகளை நடத்தக் கூடாது. தலைவர்களின் பெயர்கள் இருப்பதற்கு ஆட்சேபனை இல்லை; ஆனால், அவர்களின் பெயருக்குப் பின், ஜாதி பெயரையும் இணைப்பது, அப்பாவி மக்களின் மனதில் ஜாதிய முறையை புகுத்துவது போலாகும். பள்ளிக் குழந்தைகளின் மனதில் பதிய ஆரம்பித்தால், இந்த சமூகத்தில், ஜாதி முறையை ஒழிக்க முடியாது. பள்ளிகள், கல்லூரிகளை, அரசு நடத்துவதற்கு, சட்டம் அதிகாரத்தை அளிக்கிறது. ஜாதி பெயரில், கல்வி நிறுவனங்களை நடத்த அனுமதிக்கவில்லை. எனவே, அரசு கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் ஒட்டியிருக்கும், ஜாதி பெயர்களை நீக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி சத்திய நாராயணன் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு, "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, செப்., 10ம் தேதிக்கு, "முதல் பெஞ்ச்' தள்ளிவைத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக