திங்கள், 5 ஆகஸ்ட், 2013

அழிந்து போன அறிவுக் களஞ்சியம்!


தினஇதழ் Home / அபூர்வ தகவல்கள் / அழிந்து போன அறிவுக் களஞ்சியம்!
அழிந்து போன அறிவுக் களஞ்சியம்!

அழிந்து போன அறிவுக் களஞ்சியம்!

ஓர் இனத்தை அழிக்க வேண்டும் என்றால், முதலில் அவர்களுக்குச் சொந்தமான நூலகங்களை அழித்தால் போதும். அந்த இனத்தையே அறிவு பெறச் செய்யாமல் முழுவதுமாக அழித்துவிடலாம் என்பார்கள். அதையேதான் செய்தார்கள் சிங்களவர்கள். இலங்கையில் தமிழர்களின் அறிவுப் பெட்டகமாக இருந்த யாழ்ப்பாணம் நூலகத்தை ஒரே இரவில் சாம்பல் குவியலாக மாற்றிவிட்டனர். தமிழர்கள் மீதான தங்கள் வெறியை தீர்த்துக்கொள்ள அன்று நிகழ்த்தப்பட்ட ஒரு பெரும் நிகழ்வுதான் யாழ்ப்பாண நூலகம் எரிப்புச் சம்பவம்.1934&ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐசாக் தம்பையா தன் நண்பர்களுடன் ஒரு சிறிய கூட்டம் போட்டிருந்தார்.
அதில் ஒரு முக்கிய முடிவை எடுத்தனர். அனைவரும் பணம் போட்டு ஒரு சிறிய நூலகத்தை உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த க.மு.செல்லப்பா என்பவர் திரட்டிய 184 ரூபாய் பணத்தில்தான் ஒரு சிறிய நூலகத்தை உருவாக்க ஆயத்தமாகினர்.ஒரு வாடகை அறையில் 844 நூல்களுடன் 1934 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்டது. அதில் புத்தகம் கூட படிக்க முடியாத இடர்பட்ட நிலையில் 1935 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு பெரிய வீட்டினுள் தாராளமாக நடத்தினர். சகல வசதிகளையும் உடைய நவீன நூலகத்தை உருவாக்குவதுதான் அவர்களுடைய ஒரே குறிக்கோள். ஆனால் சில வருடங்களுக்குப் பிறகே அதற்கான பணியை செய்யத் தொடங்கினர்.1952&ஆம் ஆண்டு ஆனி மாதம் சபாபதி தலைமையில் நடந்த ஒரு மாநாட்டிற்குப் பிறகு நூலகத்தைக் கட்டு வதற்கான ஆயத்தப் பணியில் இறங்கினர். நூலகத்தின் அமைப்பிற்கான திட்டங்களை வகுத்துக் கொடுக்க சென்னை அரசின் கட்டிடக் கலை நிபுணர் கே.எஸ்.நரசிம்மன் இலங்கை சென்று நூலகக் கட்டடத்திற்கான வரைபடத்தை தயாரிக்க உதவினார். இதெல்லாம் முடியவே ஒரு வருடம் ஆக, 1953 ஆம் ஆண்டு கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினர்.
பொது நூலகத்தின் முதற்கட்டடம் பூர்த்தி செய்யப்பட்டு 1959 ஆம் ஆண்டு அதி விமர்சையாக யாழ் முதல்வர் அ.த.துரையப்பா திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து நூலகத்திற்கு மற்ற கட்டடங்களும் கட்டப்பட்டது.15 ஆயிரத்து 910 சதுர அடியில் கட்டப்பட்ட யாழ் நூலகம் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக திகழ்ந்தது. இலங்கையில் இருந்த அரசு தலைமை நூலகங்களைவிட பெரிய நூலகமாக இருந்தது. புத்தகம் வாசிப்பதற்கு தனி இடம், சிறுவர் நூலகம், கலை அரங்கம், நூல் சேமிப்புக் கூடம் என பல்வேறு பகுதிகள் அந்தக் கட்டடத்தில் இயங்கி வந்தன.நூலகத்திற்கு அன்பளிப்பாக வந்த நூல்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க அரிய நூல்களை பாதுகாக்க ஒரு அறை இருந்தது. ஒரே நேரத்தில் 60 பேர் அமர்ந்து படிக்கும் அளவுக்கு மேசைகளும் நாற்காலிகளும் போடப்பட்டு வாசகர்களுக்கு வசதியான ஒரு சூழலைக் கொண்டிருந்தது அந்த அறை. அதில் மட்டும் 29 ஆயிரத்து 500 புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன.
சிறுவர் நூலகப் பிரிவில் மட்டும் 8ஆயிரத்து 995 நூல்கள் அடுக்கிவைக்கப்பட்டு இருந்தது. நூலகம் என்றாலே வயதானவர்கள் மட்டுமே பொழுதைப் போக்க வரும் இடமாகக் கருதப்படும் இந்தக் காலத்தில், அங்கே நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கும் புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை உருவாக்கியது யாழ் நூலகம். இலங்கை தமிழர்கள் தன் பெரும் பொக்கிஷமாக கருதிய, தன் உயிருக்கும் மேலாக கருதி அதைப் பாதுகாத்து வந்த அனைவருக்கும், 1981 மே 31ம் தேதி கருப்பு நாளாக மாறியது. இரவு பத்து மணிக்கு நூலகத்தினுள் புகுந்த ஒரு கும்பல், அதில் இருந்த புத்தகங்களை ஒன்றாக குவித்து தீயிட்டு தன் வெறியைத் தீர்த்துக்கொண்டனர். அதுவும் அரிய நூல்களைக் பாதுகாத்து வந்த அறையில் ஒரு துண்டு காகிதங்கள் கூட கிடைக்காத அளவுக்கு முழுமையாக அழித்துவிட்டனர். தமிழ் குழந்தைகள் அறிவில் சிறக்கக் காரணமாக இருந்த சிறுவர் நூலகத்தை முற்றிலுமாக கொளுத்தினர். அதுமட்டுமின்றி புதிய ஏடுகளும், பருவ வெளியீடுகளும் வைக்கப்பட்டிருந்த பகுதியில் மட்டும் அதிக சேதமில்லை.
எனினும் அங்கிருந்த ஏடுகள் அனைத்தும் ஒரு மூலையில் குவித்து தீ மூட்டப்பட்டிருந்தன.‘‘நூலகம் தீப்பற்றி எரிவது, அன்றிரவு 10.15 மணிக்கே எனக்கு தகவல் கிடைக்க, தீயணைப்பு வாகனங்களையும், மாநகர சபை ஊழியர்களையும் அங்கு அனுப்பி தீயை அணைக்க முயன்றேன். ஆனால் நூலகத்திற்கு அருகிலிருந்த துரையப்பா விளையாட்டரங்கில் இருந்த போலீசார் அவர்களைத் தடுத்துவிட்டனர்’’ என்று சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு குழுவிடம் சாட்சியளித்திருக்கிறார் மாநகர சபையின் ஆணையாளர் சி.வி.கே.சிவஞானம். தமிழ்ச்சொத்தை அழித்தொழிப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் இலங்கை சிங்கள அரசின் அமைச்சர் காமினி திசநாயக்கா என்பது பின்நாளில் தெரியவந்தது.முதலில் தமிழனின் அறிவாயுதத்தை அழித்தார்கள். பின் உரிமைக்காக போராடிய தமிழர்களை அழித்தார்கள். இன்னும் அழிப்பதற்கு அங்கே என்ன இருக்கிறது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக