ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

வெலிங்டனில் தமிழ்மணி!

வெலிங்டனில் தமிழ்மணி!







நியூசிலாந்தின் வெலிங்டனில் உள்ள "ரே பாபா' தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது 500 ஆண்டுகள் பழைமை மிக்கதாகக் கருதப்படும் பண்டைத் தமிழர்களின் தமிழ்மணி (ANTIQUE TAMIL BELL). இதை மிசினரி வில்லியம் கொலன்சோ (William Colenso) என்பவர் 1836-இல், நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள வங்கரே (Wangarei) என்ற நகருக்கு 15 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் கண்டுபிடித்துள்ளார். இந்த கிராமத்தில் வாழும் மக்கள் மயோரி இனத்தைச் சேர்ந்தவர்கள். அம்மக்கள் இதை சமையல் பாத்திரமாக (குறிப்பாக உருளைக்கிழங்கு வேகவைக்க)ப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்றும், உடைந்த நிலையில் காணப்படும் இந்தத் தமிழ்மணி பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல மணி என்றும், இந்த மணி பல ஆண்டுகளுக்கு முன் சூறாவளியால் தூக்கி எறியப்பட்ட ஒரு பெரிய மரத்தில் கண்டெடுக்கப்பட்டது என்றும் கொலன்சோ கூறியுள்ளார். "புரிரி' என அழைக்கப்படும் அந்த மரத்தில் இந்த மணி பல்லாண்டு காலம் மறைந்து கிடந்ததாகவும் தெரியவந்துள்ளது.
13 செ.மீ. உயரமும் 9 செ.மீ அகலமும் உடைய இந்த மணியைச் சுற்றிலும் பழங்கால தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் முகையிதீன் பக்ஸ் கப்பல் மணி என்னும் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. பண்டைத் தமிழர்களின் கப்பலில் பயன்படுத்தப்பட்ட இந்தத் தமிழ்மணி, மயோரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருந்தது என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது. இந்தத் தமிழ்மணி குறித்து மேலும் விரிவான விளக்கங்களைப்பெற கூகுலில் சென்று தேடுங்கள்; அடைவீர்கள்!
எது எப்படியோ... நம் பண்டைய தமிழர்களின் தமிழ்மணி நியூசிலாந்தில் பாதுகாக்கப்பட்டு வருவது தமிழர்களுக்குப் பெருமைக்குப் பெருமை சேர்க்கிறதே...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக