புதன், 21 ஆகஸ்ட், 2013

உயர்மன்ற வழக்காடும் மொழியாகத் தமிழ்? : தலைமை நீதிபதி சதாசிவம்

உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத் தமிழை அறிமுகப்படுத்த போதிய தமிழ்ச் சுருக்கெழுத்தாளர் , தமிழில் சட்ட நூலு்கள  முதலான உள்கட்டமைப்பு வசதிகள் தேவை எனத்  தமிழக் அரசிற்குப் பலமுறை தெரிவித்துள்ளதாகத் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.  இதற்கு, இதுவரையிலான அரசுகள் என்ன செய்துள்ளன என விளக்க வேண்டும்.
எனினும் இப்பொழுதே இதனை நடைமுறைப்படுத்தலாம். போதிய தமிழ்ச் சுருக்கெழுத்தாளர்கள் நியமிக்கப்பெற வேண்டு்ம். அவ்வாறு அவர்கள் கிடைப்பினும் கிடைக்காவிடினும், ஒலிப்பதிவு முறையில் தீர்ப்பைப் பதிந்து கொண்டு பின்னர் கணியச்சிடும் முறையை நடைமுறைப்படுத்தலாம். தேவை இருக்கும் பொழுதுதான் சட்ட நூல்கள் வெளியீடு பெருகும். எனவே, ஆங்கில நூல்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கோள் கூறித் தீர்ப்புகள் வழங்கினால், அதுவே சட்டக் கூறாக மாறும். தமிழில் வாதிடும் தேவை கருதித் தமிழில் சட்ட நூல்கள் பல பெருகும். எனவே, முதலில் தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள், உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்குரை மொழியாக அரங்கேற உடனே ஆவன செய்ய வேண்டும். உச்சநீதிமன்றத்திலும் தமிழ் இடம் பெறவும் நடவடிக்கை எடுத்து வெற்றி காண வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


உயர்மன்றத்தில் வழக்காடும் மொழியாக த் தமிழ்? : தலைமை நீதிபதி சதாசிவம் 
http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_785245.jpg 

சென்னை: "சென்னை ஐகோர்ட்டில், தமிழை வழக்காடும் மொழியாக கொண்டு வருவதில், இதுவரை முடிவு எட்டப்படவில்லை' என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் கூறினார்.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு, சென்னை ஐகோர்ட்டில் பாராட்டு விழா நடந்தது. தமிழ்நாடு பார் கவுன்சில் உடன் இணைந்து, சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம், சென்னை பார் அசோசியேஷன், பெண் வழக்கறிஞர்கள் சங்கம், லா அசோசியேஷன், ஆகிய சங்கங்கள், இந்த நிகழ்ச்சியை நடத்தின.

நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி சதாசிவம் பேசியதாவது: நான் வழக்கறிஞராக பதிவு செய்த பின், முதல் நாள், என் மூத்த வழக்கறிஞர் கே.துரைசாமி, ஒரு வழக்கில், விசாரணையை தள்ளிவைக்க கோரும்படி, அனுப்பி வைத்தார். அது தான், நான் ஆஜரான முதல் வழக்கு. இளம் வழக்கறிஞர்கள், கடுமையாக உழைத்தால், நல்ல நிலைக்கு வரமுடியும். மக்களின் உரிமைகளை பாதுகாக்க, வழக்கறிஞர்கள் உதவ வேண்டும். நீதித்துறையில், உயிர் நாடியாக, வழக்கறிஞர்கள் உள்ளனர். சாதாரண மனிதனுக்கும், சட்டத்துக்கும், பாலமாக, வழக்கறிஞர்கள் திகழ்கின்றனர். பொது மக்கள் மத்தியில், வழக்கறிஞர்கள் பற்றிய எண்ணம் மாற வேண்டும். வழக்கறிஞர்களாக மட்டுமல்லாமல், ஆலோசகர்களாக திகழ வேண்டும். அப்போது தான், வழக்கறிஞர் தொழிலில், மக்களுக்கு மரியாதை ஏற்படும். நீண்ட வாதம், தேவையில்லாமல் வாய்தா கேட்பது, நடைமுறையை தவறாக பயன்படுத்துவது, போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தற்போது தகவல் தொழில்நுட்பம் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில், 100 சதவீதம், மின்னணு முறை அமல்படுத்தப்படுகிறது. வழக்கு தாக்கல் செய்யும்போது, வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரர்களின் இ-மெயில், மொபைல் போன் எண்களை வாங்குகிறோம். வழக்கு தொடர்பான விவரங்களை, அவர்களுக்கு அனுப்பி வைக்கிறோம்.டில்லி ஐகோர்ட்டில், ஏழு கோர்ட்களில், மின்னணு முறை பின்பற்றப்படுகிறது. சென்னை ஐகோர்ட்டையும், மின்னணு கோர்ட் ஆக உருவாக்கவேண்டும். முல்லை பெரியாறு வழக்கு விசாரணை, 21ம் தேதி (இன்று) முடிவுக்கு வரும் என, நம்புகிறேன். இவ்வாறு, தலைமை நீதிபதி சதாசிவம் பேசினார்.

பின், நிருபர்களிடம், தலைமை நீதிபதி கூறியதாவது: சென்னை ஐகோர்ட்டில், வழக்காடும் மொழியாக, தமிழை கொண்டு வரவேண்டும் என்றால், தமிழ் சுருக்கெழுத்தாளர், தமிழில் சட்டநூல்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை முதலில் ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக, ஏற்கனவே பல கோரிக்கைகள், தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஐகோர்ட் நீதிபதியாக நான் பதவி வகித்த போது, நீதிபதிகள் கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. வழக்கறிஞர்களும், போலீசாரும், பொதுமக்களுக்காக பணி செய்கிறோம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இருதரப்பினரும் சுமூகமாக பேசி பிரச்னையை தீர்த்துக் கொள்ளவேண்டும். தென் மாநிலங்களில், சுப்ரீம் கோர்ட் கிளை அமைப்பது பற்றி, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூட்டம், பல முறை நடந்தது. தலைமை நீதிபதிகள், முதல்வர்கள் மாநாட்டிலும், ஆலோசிக்கப்பட்டது. எந்த முடிவும் எட்டப்படவில்லை. தென் மாநிலங்களில், அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் மாநிலத்தில், சுப்ரீம் கோர்ட் கிளை அமைக்க வேண்டும் என கோருகின்றனர். தென் மாநிலங்களில் அமைக்க, இப்போதைக்கு வாய்ப்பு இல்லை. சென்னை ஐகோர்ட்டுக்கு, தேவையான அனைத்து நிதி உதவிகளையும் செய்வதாக தமிழக முதல்வரும், மத்திய அரசும் கூறியுள்ளது. ஐகோர்ட்டை மின்னணு கோர்ட் ஆக மாற்றுவதற்கு, நான், ஒரு பாலமாக இருந்து செயல்படுவேன். இவ்வாறு, தலைமை நீதிபதி சதாசிவம் கூறினார்
.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக