புதன், 11 செப்டம்பர், 2013

உலகளவில்,பல்கலை: 200க்குள் இந்தியப் பல்கலைக்கு இடம் இல்லை



உலகளவில்,பல்கலை ப் பட்டியல் வெளியீடு: 200க்குள் இந்தியப் பல்கலைக்கு இடம் இல்லை
உலகளவில், தரம் வாய்ந்த பல்கலைகளின் பட்டியலை, அமெரிக்க நிறுவனம், நேற்று வெளியிட்டது. இதில், முதல், 200 இடங்களில், இந்திய பல்கலைகள் எதுவும் இடம்பெறவில்லை. டில்லி ஐ.ஐ.டி.,க்கு, 222வது, "ரேங்க்' கிடைத்துள்ளது.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும், "குவாகுரேலி சைமண்ட்ஸ்' என்ற நிறுவனம், கடந்த, 2004ல் இருந்து, உலகளாவிய அளவில் உள்ள பல்கலைகளை ஆய்வு செய்து, ஆண்டுதோறும், தர வரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. 10வது ஆண்டாக, நேற்று, பல்கலைகளின் தர வரிசை பட்டியலை வெளியிட்டது.இதில், அமெரிக்காவின், மாசாசூட்ஸ் தொழில்நுட்ப பல்கலை, இரண்டாவது ஆண்டாக, முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. ஹார்வர்டு பல்கலை, இரண்டாவது இடத்தையும், கேம்பிரிட்ஜ் பல்கலை, மூன்றாவது இடத்தையும் பிடித்து, சாதனை படைத்துள்ளன. முதல், 200 இடங்களில், இந்திய பல்கலைகளில் ஒன்றுக்கு கூட இடம் இல்லை.டில்லி, ஐ.ஐ.டி., 222வது இடம் பிடித்துள்ளது. மும்பை, ஐ.ஐ.டி.,க்கு, 233வது இடமும், சென்னை, ஐ.ஐ.டி.,க்கு, 313வது இடமும் கிடைத்துள்ளன. ஆசிய நாடுகள் என்ற அளவில் எடுத்துக்கொண்டால், சீன பல்கலைகள், அதிகம் இடம் பிடித்துள்ளன.

ஆசிய அளவில், ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலை, முதலிடத்தை பிடித்துள்ளது. சிங்கப்பூர் தேசிய பல்கலை, ஹாங்காங் பல்கலை ஆகிய இரண்டும், இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன. சியோல் தேசிய பல்கலை, மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.டில்லி, ஐ.ஐ.டி., 38; மும்பை, ஐ.ஐ.டி., 39; சென்னை, ஐ.ஐ.டி., 49; கான்பூர், ஐ.ஐ.டி., 51; காரக்பூர், ஐ.ஐ.டி., 58; ரூர்க்கி, ஐ.ஐ.டி., 66 மற்றும் டில்லி பல்கலைக்கு 80வது இடமும் கிடைத்துள்ளன.

ஆசியாவில், சீனா, தைவான், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளின் பல்கலைகள், அதிக இடங்களை பிடித்துள்ளன.இந்தியாவில், நாடு முழுவதும், 600க்கும் அதிகமான பல்கலைகள் உள்ளன. மத்திய அரசு, உயர் கல்விக்காக, பல ஆயிரம் கோடி ரூபாயை செலவழிக்கிறது. இருந்தபோதும், உலகளாவிய தர வரிசையில், முதல், 100 இடங்களில் கூட, ஒரு பல்கலையும் இடம் பெறாதது, அனைத்து நிலைகளிலும், உயர் கல்வியை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை, எடுத்துக் காட்டுகிறது.

-தினமலர் செய்தியாளர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக