ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

இந்த வாரக் கலாரசிகன் 22.09.2013

காப்புறை செய்வதை, மெருகூட்டம் (lamination) எனச் சொல்வதை விட இழையூட்டம் எனலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


இந்த வார க் கலாரசிகன்

புதுவையிலிருந்து கிளெமண்ட் ஈஸ்வரர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்துடன், அவர் சேகரித்து வைத்திருக்கும் அரிய பல நூல்களுள் ஒன்றான "குடியர்கள் சிறு புத்தகம்' (The Drunkard's pocket book) என்கிற சிறிய நூலை அனுப்பித் தந்திருந்தார். 81 ஆண்டுகளுக்கு முன்னால் புதுவை கத்தோலிக்க மிஷனரிப் பாதிரியார்களால் வெளியிடப்பட்ட புத்தகம் அது. 1932-இல் வெளியிடப்பட்ட அந்தக் கையடக்கப் பிரதியில், அது நான்காவது பதிப்பு என்று குறிப்பிடப்பட்டிருப்பதால், அந்த நாளில் பெரும் வரவேற்புப் பெற்றிருந்த புத்தகமாக அது இருந்திருக்க வேண்டும்.
இந்தப் புத்தகம் கிறிஸ்துவ சமுதாயத்துக்கு மட்டுமாக எழுதப்பட்ட புத்தகமல்ல. ஒட்டுமொத்த சமூகத்தின் நலன் கருதிப் பாதிரிமார்களால் வெளியிடப்பட்ட புத்தகம் என்பது படித்துப் பார்த்தபோது தெரிந்தது. மதுப்பழக்கம் எப்படி குடும்பங்களை சீரழிக்கிறது என்பது ஒரு கதை மூலம் விளக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, அந்தப் புத்தகத்தில் தரப்பட்டுள்ள அந்த நாள் விலைவாசி நிலவரம் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.
அந்தச் சிறிய புத்தகத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய பகுதி, சாராயம் குடிப்பதனால் வரும் கேடுகள் பற்றிய நிபுணர் குழுவின் அறிக்கை. அந்த அறிக்கையில் கையெழுத்திட்டிருக்கும் பிரமுகர்களில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியும் ஒருவர்.
""நூல் வெளியாகி அநேக ஆண்டுகளாகிவிட்டதால், ஏடுகள் அப்பளம்போல் நொறுங்கிவிழும் நிலையில் உள்ளன. மிகவும் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்'' என்கிற வேண்டுகோளுடன் அதை அனுப்பித் தந்திருக்கிறார் கிளெமண்ட் ஈஸ்வரர். அந்தப் புத்தகத்தை மின்பதிவாக்கம் (Digitalization) செய்தாகிவிட்டது. புதிய தொழில்நுட்பம் மூலம் அதை மெருகூட்டம் (lamination) செய்து பத்திரப்படுத்த முடியும் என்று எங்கள் நூலகர் நடராஜன் உறுதி அளித்திருக்கிறார். நிரந்தரமாகப் பாதுகாக்கும் முயற்சி அது.
எல்லாவற்றையும் விட, கிளெமண்ட் ஈஸ்வரர் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை மலைப்பை ஏற்படுத்துகிறது. அரை நூற்றாண்டுக்கும் மேலாகச் சேகரித்து வைத்திருக்கும் புத்தகம், என்னால் அழித்துவிடாமல் பாதுகாக்கப்படும் என்கிற அவரது நம்பிக்கைக்கு முன்னால், நான் வார்த்தையின்றி மெüனியாகிறேன்!

______________________________

மதுரை திருவள்ளுவர் கழகத்தார் "குறள் வேந்தர்' பண்டித திரு. மீ.கந்தசாமிப் புலவரின் தெளிவுரையுடன் கூடிய திருக்குறளின் மூன்றாவது பதிப்பை வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள். இதன் முதல் பதிப்பு 1960-இல் வெளியிடப்பட்டது. எனக்குத் திருக்குறள் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியதே மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் உள்ளே வடக்கு ஆடி வீதியில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் கழகம்தான் என்று முன்பே ஒருமுறை குறிப்பிட்டிருந்தேன்.
மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது மாலையில் நானும் சக மாணவர்கள் சிலரும் மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போய், வடக்கு ஆடி வீதியில் உள்ள திருவள்ளுவர் கழகத்தில் நடக்கும் திருக்குறள் வகுப்புகளில் பங்கு பெறுவதுண்டு. அப்போது, திருக்குறள் மனப்பாடப் போட்டியில் கலந்து கொண்டு பரிசாகப் பெற்ற புத்தகம் பண்டித திரு. மீ.கந்தசாமிப் புலவரின் இதே திருக்குறள் நூல். அந்தப் புத்தகம் புதிய பதிப்பாக வெளிவந்திருப்பதைப் பார்க்கும்போது பெருமகிழ்ச்சியாக இருக்கிறது.
திருக்குறள் தெளிவுரை பற்றிய சிந்தனை வந்தபோது, கவியரசு கண்ணதாசனுக்கும் திருக்குறளுக்கு உரை எழுத வேண்டும் என்கிற ஆசை இருந்தது நினைவுக்கு வந்தது. இதைப்பற்றி அவரே பலமுறை பேசியும் இருக்கிறார். ஆனால், அவரது சிந்தனை சற்று மாறுபட்டது.
திருக்குறளில் பல குறள்கள் தவறான அதிகாரங்களில் தரப்பட்டுள்ளன என்பது அவரது கருத்து. எடுத்துக்காட்டாக, "தகையணங்குறுதல்' அதிகாரத்திலுள்ள "உண்டார்கண் அல்லது அடுநறாக காமம்போல் (1090) என்கிற குறளும், "நினைந்தவர் புலம்பல்' அதிகாரத்திலுள்ள "உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்' (1201) என்கிற குறளும் ஒரே அதிகாரத்தில் இருக்க வேண்டியவை என்பது கவியரசரின் கருத்து.
கண்ணதாசனுக்கு இன்னொரு கருத்தும் உண்டு. திருக்குறளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று வரிசைப்படுத்துவது சரியல்ல என்பார். ""காமத்தில் பிறக்கும் குழந்தைக்குப் பொருள் தேவை. பொருள் தேடப் போகும்போதுதான் அறம் தேவை. முதலிலேயே அறத்திற்குப் போய்விட்டால் காமத்திற்கும், பொருளுக்கும் அர்த்தமில்லாமல் போய்விடும். அதனால் காமத்துப்பால், பொருட்பால், அறத்துப்பால் என்றுதான் திருக்குறள் வகைப்படுத்தப்பட வேண்டும் என்பார் அவர்.
""நான் இப்படித் திருத்தம் செய்து, திருக்குறளுக்குத் தெளிவுரை எழுதி வெளியிட்டால், புலவர்கள் எல்லோருமாக என்னிடம் சண்டைக்கு வந்துவிடுவார்கள்'' என்று சொல்லிவிட்டுக் கலகலவென்று கவியரசர் சிரித்தது கண் முன்னே நிற்கிறது.
பள்ளிச் சிறுவனாக மதுரை திருவள்ளுவர் கழகத்தில் பாடம் கேட்டதும், கல்லூரி மாணவனாகக் கவியரசர் குறள் பற்றிச் சொல்லக் கேட்டதும், பண்டித திரு. மீ.கந்தசாமிப் புலவரின் திருக்குறள் தெளிவுரை நூலைப் படிக்கும்போது நினைவுக்கு வந்தன. பகிர்ந்து கொண்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக