திங்கள், 16 செப்டம்பர், 2013

சொட்டு நீர்ப் பாசனத்தில் நெற்பயிர்!

சொட்டு நீர் ப் பாசனத்தில் நெற்பயிர்!


தண்ணீர் அதிகம் தேவைப்படும் நெற்பயிரை, சொட்டு நீர் பாசனத்தின் மூலமே அறுவடை செய்யும், விவசாயி சோலைமலை: நான், மதுரை மாவட்டம், நத்தம் அருகிலுள்ள அண்தமான் கிராமத்தைச் சேர்ந்தவன். ஒற்றை நாற்று முறையில், "சிஆர்1009' என்ற, 150 நாளில் அறுவடை செய்யும் நெல் ரகத்தை பயிரிட்டு, 50 சென்ட்டில், 4,136 கிலோ அறுவடை செய்து சாதித்தேன். இச்சாதனைக்காக, இந்திய ஜனாதிபதியிடமிருந்து, 1 லட்சம் ரூபாய் மற்றும் பட்டயமும்; தமிழக முதல்வரிடமிருந்து, 2011-12ம் ஆண்டிற்கான சிறந்த விவசாயிக்கான விருதையும் பெற்றேன். நெல்லுக்கு, நீர் அதிகம் தேவைப்படும். எனவே, குறைந்தபட்ச நீர் ஆதாரத்துடன் நெற்பயிரை பயிரிட என்ன செய்யலாம் என, யோசித்தேன். அச்சிந்தனையில் தோன்றியது தான், சொட்டு நீர் பாசனத்தில் நெல் சாகுபடி. 110 நாட்களில் அறுவடைக்கு தயாராகும், ஜே.சி.ஆர்., ரக நெல்லை, பயிரிட்டேன். இது, குறுவை சாகுபடிக்கும் ஏற்றது. செடிக்கு செடி, அரை அடி இடைவெளி உள்ளதால், நல்ல காற்றோட்டமான சூழ்நிலை உள்ளது. இதனால், பூச்சி தாக்குதல் ஏற்படாது. ஆனால், களைகள் வளர, வாய்ப்புகள் அதிகம். எனவே, களைக்கொல்லிகளை சரிவர பயன்படுத்த வேண்டும். நிலத்தில், தக்கை பூண்டு நட்டு அதை மடித்து உழுத பின் நடவு செய்வதாலும், ஆட்டுக்கிடை போடுவதாலும், நல்ல பயன் கிடைக்கும்.
சொட்டு நீர் பாசனம் என்பதால் உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை, குழாய் தண்ணீரில் கலந்து விட்டாலே போதுமானது. இதனால், எல்லா பயிர்களுக்கும் சரியான அளவில் ஊட்டச்சத்து கிடைக்கும். சோதனை முறையில் பயிரிட்டாலும், பயிர்கள் ஒரே அளவில் வளர்ந்து நல்ல விளைச்சலை எட்டின. இதன் மூலம், சாதாரண முறையில் நெல் பயிரிட்டால் கிடைக்கும் விளைச்சலை விட, சொட்டு நீர் பாசனத்தில் அதிக விளைச்சல் கிடைக்கும் என, நிரூபித்தேன். தமிழக அரசு சொட்டு நீர் பாசனத்திற்கு, 100 சதவீதம் மானியம் வழங்குவதால், விவசாயிகள் எளிதாக இம்முறைக்கு மாற முடியும். தொடர்புக்கு: 93441 31977.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக