வெள்ளி, 20 செப்டம்பர், 2013

குறைந்த செலவில் புற்றுநோய்ப் பண்டுவம்

குறைந்த செலவில் புற்றுநோய்ச் சிகிச்சை!

சமூக ஆர்வலர்கள் மற்றும் 60 மருத்துவர்களை ஒருங்கிணைத்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறைந்த செலவில் சிகிச்சையளிக்கும், மருத்துவர் மருது துரை: தஞ்சாவூர், நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தான் பிரதானம்.
சில ஆண்டுகளுக்கு முன், இங்கு புற்றுநோய் மருத்துவராக பணியாற்றினேன். இப்பகுதியின் பெரும்பாலான விவசாயிகள் புகையிலை, பாக்கு, பீடி போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவதால், புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். நாங்கள், நோயாளியை சோதனை செய்த பின், "உங்களுக்கு புற்றுநோய் இருக்கிறது' என கூறினால், அவர்களுக்கு உடனே மரண பயம் வந்துவிடும். ஏனெனில், புற்றுநோயை குணப்படுத்த அதிகம் செலவாகும் என்ற பயம் இருந்தது. மேலும், சென்னை அல்லது புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைகளில் தங்கி, தொடர்ந்து சிகிச்சை பெற முடியாமல், பலர் வீடு திரும்பியதும் இறந்தனர். இப்படி, பல துர்மரணங்களை தவிர்க்க, 60 மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை ஒன்றிணைத்து, 2010ம் ஆண்டு, "தஞ்சை புற்றுநோய் மருத்துவமனை'யை ஆரம்பித்தோம். இங்கு, 3 கோடி ரூபாயில், "கோபால்ட்-60' மற்றும் 9 கோடி ரூபாயில், அதிநவீன கதிரியக்க கருவியை வாங்கி, புற்றுநோய்க்கு குறைந்த செலவில், சிறந்த சிகிச்சை அளிக்கிறோம். இங்கு சிகிச்சை பெறும் ஏழை விவசாயிகளுக்கு, கட்டணம் வசூலிப்பதில்லை. மருந்துகளையும், 65 சதவீத கழிவு விலையிலேயே விற்கிறோம். "ஸ்கேன், எக்ஸ்-ரே' என, அனைத்து டெஸ்டுக்கும், 50 சதவீத கட்டணம் தான். எங்கள் சேவையை பாராட்டிய ஸ்டேட் பேங்க், ஓர் ஆம்புலன்ஸ் வண்டியை, இலவசமாக வழங்கியது. இதன் மூலம், நோயாளிகள் வீடுகளுக்கு நேரடியாக சென்று, வலி உபாதைகளுக்கான சிகிச்சைகளை இலவசமாக வழங்குகிறோம். மருத்துவமனை சார்பில், ஆண்டுதோறும், "சர்வைவல்' தினம் கொண்டாடுகிறோம். அன்று, இங்கு சிகிச்சை பெற்று குணமான நோயாளிகள் மூலம், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, தன்னம்பிக்கை ஏற்படுத்துகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக