சனி, 7 செப்டம்பர், 2013

தமிழர்களுக்கு மத்திய அரசு சார்பாக இல்லை - கலைஞரின் கண்டுபிடிப்பு



1/2) கலைஞரை அறியாத ஒருவர் படித்தால் ஆகா! ஓகோ! என்று பாராட்டலாம். ஆனால், இப்பொழுதுதான் மத்திய அரசு இவ்வாறு நடந்து கொள்வதுபோலும் கலைஞரும் இப்பொழுதுதான் இதை அறிந்ததுபோலும் பேசுவது வேடிக்கையாக உள்ளது. அப்பொழுதும்கூட மத்திய அரசு, “தமிழர்களுக்கு அனுசரணையாக  இல்லை என்றுதான் சொல்கிறாரே தவிர தமிழர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் எதிராகக்  கொலைவெறியுடன் நடந்து கொள்வதைக் கண்டிக்க வில்லை. காரணம் இங்கே அவர் தமிழர்கள் எனக் குறிப்பது, தன் குடும்பத்தவராக இருக்கலாம். மற்றொன்று காங்.உடன்  மறைமுகக் கூட்டணி வைத்துக் கொண்டுள்ள அவர் வரும் தேர்தலில் கூட்டணி மூலம் நன்மை அடையும் வகையில் பேரம் பேசவும் தமிழ் உணர்வுள்ள கட்சிக்காரர்களையும் தோழமைக் கட்சிக்காரர்களையும் ஈர்த்து வைத்துக் கொள்ளவும் போடும் நாடகமாகவும் இருக்கலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


 2/2) மேலும், ‘உலக உண்ணா நோன்பு நாடகச் சாதனையாளர் என்ற பட்டத்தை மாற்றுவதற்காக அடிக்கடிப் போரை நிறுத்தியதாக  இந்திய அரசு சொன்னதால் நாடகம் நடத்தியதாகக் கூறுவதற்கும் பயன்படுத்தி உள்ளார். 2009-ஆம் ஆண்டு இலங்கையில் போர் நடைபெற்றபோது, இலங்கை அரசுக்கு, இந்தியா உதவி செய்ததாக சிலர் விமர்சனம் செய்த நேரத்தில் திமுக அதை நம்பவில்ல  என்றும் கூறி உள்ளார். முதல்வர் பதவியில் இருந்தும் உண்மைகள் தெரியாமல் இருந்தன எனில் இவர்  அப்பதவியில் இருந்து என்ன செய்தார் என்ற வினா  வருவதை அவர் மறந்து விடுகிறார். இலங்கையைப் பற்றியும் ஈழத்தைப்பற்றியும் அவர் அமைதி காப்பதே அவர் கட்சிக்கும் அவருக்கும் நல்லது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


தமிழர்களுக்கு மத்திய அரசு சார்பாக  இல்லை: கருணாநிதி


தமிழர்களுக்கு அனுசரணையாக இல்லாமல், இலங்கை அரசுக்கே இந்தியா அனுசரணையாக இருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடல் எல்லையைப் பாதுகாக்க இலங்கைக்கு 2 போர்க் கப்பல்களை இந்தியா வழங்கும் என்று செய்தி வெளியாகியுள்ளது.2009-ஆம் ஆண்டு இலங்கையில் போர் நடைபெற்றபோது, இலங்கை அரசுக்கு, இந்தியா உதவி செய்ததாக சிலர் விமர்சனம் செய்த நேரத்தில் திமுக அதை நம்பவில்லை.இலங்கை அரசைக் கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினேன்.
அந்த நேரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாகவும், இலங்கை அரசு போரை நிறுத்தி விட்டதாகவும் எனக்குத் தகவல் கொடுத்து, உண்ணாவிரதத்தை முடிக்கச் செய்ததும் இந்திய அரசுதான்.இலங்கைத் தமிழர் பிரச்னை மற்றும் தமிழக மீனவர்கள் சிங்கள அரசினால் துன்புறத்தப்பட்ட நேரத்தில், தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்று, இந்திய அரசு பல நேரங்களில் முயற்சிகளை மேற்கொண்டது.
எனினும் 2 கப்பல்களை இந்தியா வழங்குகிறது என்ற செய்தியின் மூலம் இலங்கை அரசுக்குத்தான் இந்தியா உதவி செய்கிறதே தவிர, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கோ மற்றும் இந்திய மீனவர்களுக்கோ அனுசரணையாக இல்லை என்று சிலர் தொடர்ந்து எடு்த்து வைத்து வரும் குற்றச்சாட்டு உறுதியாகிறது.கடல் எல்லையைப் பாதுகாக்க இந்தியா இலங்கைக்கு வழங்கும் 2 போர்க் கப்பல்களில் இருந்துகொண்டு, அந்தப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவர்.2017-ஆம் ஆண்டில் இந்தக் கப்பல்கள் இலங்கைக்கு வழங்கப்படும் என்று தகவல் கூறப்பட்ட போதிலும், இப்படிப்பட்ட முயற்சியினை தொடக்கத்திலேயே நிறுத்திட வேண்டும்.இலங்கைக்கு உதவிடும் எண்ணத்தை அறவே தவிர்க்கவும் இந்தியா முன் வரவேண்டும்.
பால் கொள்முதல் விலை: 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் பாலின் கொள்முதல் விலை 4 முறை உயர்த்தப் பட்டது. பசும் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.6.60 வரையும், எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.12.70 வரையும் உயர்த்தப் பட்டன.தமிழகத்தில் 11 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன.அதில் 4.25 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி அவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.எனவே, தமிழக அரசு பால் உற்பத்தியாளர்கள் சங்கப் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்துப் பேசி, கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக