வியாழன், 19 செப்டம்பர், 2013

ஏரியில் குதித்து ஆறு பேரை மீட்டெடுத்த அமைச்சர்!

ஏரியில் குதித்து ஆறு பேரை மீட்டெடுத்த அமைச்சர்!

கர்நாடக மாநிலத்தின் தொடக்கக் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் கிம்மனே ரத்னாகர் (61) , ஏரி ஒன்றில் குதித்து, ஆறு உயிர்களைக் காப்பாற்றியுள்ளார்.
தனது சொந்த ஊரான  தீர்த்தஹள்ளியில் இருந்து பெங்களூர் சென்று கொண்டிருந்த அமைச்சர், பெகுவள்ளி ஏரியை அடைந்தபோது மாருதி ஸ்விப்ட் சிற்றுந்து ஒன்று ஏரியில் மூழ்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துள்ளார்.
உயிர்கள் தத்தளிப்பதைக் கண்ணுற்ற அமைச்சர் உடனடியாக  அவரது பாதுகாவலர் ஹல்ஸ்வாமி, ஓட்டுநர் சந்திரசேகர், பாதுகாப்பு வாகனத்தின் ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சகிதம் ஏரிக்குள் குதித்து 55 வயது பெண் உள்பட மூன்று பெரியவர்களையும் மேலும் மூன்று குழந்தைகளையும் மீட்டுள்ளனர்.பின்னர் உடனடியாக மருத்துவர் ஒருவரை அமைச்சர் அழைத்து முதலுதவி செய்யவும் பணித்துள்ளார்.
மருத்துவர் வந்து, அமைச்சர் மற்றும் ஊழியர்களால் காப்பாற்றப்பட்ட உதய்குமார்(40), அவரது மனைவி சுமா(35), 14 மற்றும் 8 வயது மகன்கள், உதயின் தாய் கீதா(55), உறவினரின் 3 வயது குழந்தை ஆகியோருக்கு சிகிச்சை அளித்துள்ளார். 
அதன் பிறகு உதய்குமார் குடும்பத்துக்கு உணவும் வாங்கிக் கொடுத்து, உதய்க்கு தனது உடைகளையும் அளித்து விட்டு அமைச்சர் பெங்களூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அமைச்சர் கிம்மனே ரத்னாகருக்கு உதய்குமார் குடும்பத்தினர் இதயம் நெகிழ்ந்து நன்றி தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக