வியாழன், 19 செப்டம்பர், 2013

துணிச்சலாகத் துரத்திப் பிடித்த ப‌ெண்!

துணிச்சலாக த் துரத்திப் பிடித்த சாதனை ப் பெண்!

நள்ளிரவு, 12:30 மணிக்கு, ரேஷன் அரிசி கடத்தல் காரர்களை, துரத்திப் பிடித்ததற்கு முதல்வரிடம், "கல்பனா சாவ்லா' விருது பெற்ற, சுகி பிரேமலா: நான், கன்னியாகுமரி, மார்த்தாண்டத்தை அடுத்த திருக்குறிச்சியை சேர்ந்தவள். 2 குழந்தைகளுக்கு தாயான எனக்கு, 38 வயது. எம்.ஏ., பொது நிர்வாகம் படித்து, 1993ல், குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இளநிலை உதவியாளர் பணிக்கு சேர்ந்தேன். "எந்த ஒரு பணியையும், அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும்' என, என் தந்தை அடிக்கடி கூறுவார். அதையே என் தாரக மந்திரமாக்கி, ஒப்படைத்த பணிகளை சரியாக செய்தேன். திறமை மற்றும் துணிச்சலுடன் செயல்பட்டதால், வருவாய்துறை ஆய்வாளர், தக்கலை தாலுகா துணை தாசில்தார், விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் என, அடுத்தடுத்து பணி உயர்வு பெற்று, தற்போது, குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவில், பறக்கும் படை வட்டாட்சியராக பணியாற்றுகிறேன். கேரளாவுக்கு கடத்த முயன்ற, 110 டன் ரேஷன் அரிசி, 22 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய், 1.5 டன், "அமோனியம் நைட்ரேட்' வெடிபொருள், கடத்தலுக்கு பயன்பட்ட, 50 வாகனங்கள் ஆகியவற்றை, இரவு நேரங்களில் மடக்கி பிடித்து, 40க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்களை கைது செய்திருக்கிறேன். இதனால், பலர் என்னை பழிவாங்கத் துடிக்கின்றனர். ஒரு முறை காரில் சென்ற போது, ஒரு டெம்போ லாரியை நேருக்கு நேர் மோத விட்டனர். என் கார் டிரைவரின் சாமர்த்தியத்தால், நூலிழையில் உயிர் தப்பினேன். கொலை மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் பயந்தால், இந்த
வேலையல்ல, எந்த வேலையையும் செய்ய முடியாது. ரேஷன் பொருள் கடத்தல் காரர்களை, துணிச்சலுடன் பிடிக்கும் என் நடவடிக்கையை பாராட்டி, சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில், வீர தீர சாகச செயல் புரிந்த பெண்களுக்கு வழங்கும், "கல்பனா சாவ்லா' விருதை, முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அத்துடன், 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும், 5 லட்சம் பரிசு தொகையும் பெற்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக