செவ்வாய், 17 டிசம்பர், 2013

அரிவாளாலும் சுத்தியலாலும் பிண ஆய்வு - கோவையில் அதிர்ச்சி




http://img.dinamalar.com/data/gallery/gallerye_002549983_874578.jpg

"சுத்தியலால் அடித்து மண்டையைப் பிளந்து... அரிவாளால் வயிற்றைக் கிழித்து... கோவை அரசு மருத்துவமனையில்,  பிணஆய்வு நடக்கிறது...' என்றால், நம்புவதற்குக் கடினமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கலாம்; ஆனால், அதுதான் உண்மை.

கோவை நகரின் மையப்பகுதியில், 18.5 ஏக்கர் பரப்பிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 92தொகுதிகள், 25க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவப் பிரிவுகள் உள்ளன. கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த பலஇலட்சம் ஏழை மக்கள், உயர்மருத்துவம் பெறும் இடமாக, இந்த மருத்துவமனை உள்ளது. சென்னையை அடுத்து, அனைத்து நோய்களுக்கும்  மருத்துவம் அளிப்பதற்கான சிறப்புப் பிரிவுகள் இங்கு உள்ளன.  அன்றாடம் வெளிநோயாளிகள் 6,000 பேரும், உள்நோயாளிகள் 1,200 பேரும் மருத்துவம்  பெறுகின்றனர். சாலை  நேர்ச்சிகளில் இறந்தவர்கள், தீ  நேர்ச்சி, மின்  நேர்ச்சி,  நீரில் மூழ்கி இறந்தவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், கொலை செய்யப்பட்டவர்கள், இறப்பில்  ஐயமுள்ளவர்களின் உடல்கள் என,  நாள்தோறும் ஏறத்தாழ  15 உடல்கள்,  பிண ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
பேரிடர் எச்சரிக்கை: இங்குள்ள பிணவறை, கடந்த 1950 இல் கட்டப்பட்டு, 1952 முதல் செயல்படுகிறது.
பிணவறையின் தரைத்தளம் யாரும் நுழைய முடியாத அளவுக்குப் பாழடைந்துள்ளது. அந்த அறை மழைக்காலத்தில், தண்ணீர் தேங்கும் குளமாக மாறி விடுகிறது. பயன்பாட்டில் உள்ள முதல் தளத்தில்  பிண ஆய்வு நடக்கிறது.  உறவற்ற பிணங்களை வைக்கும் குளிர்ப்பதன வசதியுள்ள பெட்டிகளில் 25  சடலங்களை அடுக்கி வைக்க வசதியுள்ளது. வெளி அறையில் ஆறு  சடலங்கள் வைக்க இடமுள்ளது. பிணவறைக் கட்டடம் 20 ஆண்டுகளுக்கு முன்பே உறுதித் தன்மையை இழந்து விட்டதாகப் பொதுப்பணித்துறை சான்று கொடுத்து, கட்டடத்தைப் பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்துள்ளது.

கொடூர ஆய்வு: வேறு கட்டடம் இல்லாததால், உறுதித்தன்மை இழந்து, உருக்குலைந்த கட்டடத்திலேயே  பிணஆய்வு நடக்கிறது. இங்கு, மருத்துவக்கருவிகளைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, சுத்தியலால் அடித்து மண்டையைப் பிளந்தும், அரிவாளால் வயிற்றைக் கிழித்தும்  பிணவாய்வு நடத்தப்படுகிறது. பிணவறைக் கட்டடங்களுக்கு மிக அருகிலேயே புதுப்பிக்கப்பட்ட உடனடித் தொகுதி செயல்படுகிறது.  நேர்ச்சி, அவசரப்பண்டுவங்களுக்காக மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளும் இந்தத தொகுதிக்குக் கொண்டு வரப்பட்டு, முதலுதவி வழங்கப்பட்ட பின்னரே  தொகுதிகளுக்கு  மாற்றப்படுகின்றனர். இந்தத் தொகுதியின் அருகிலேயே  பேணுகையற்ற பிணவறை
இருப்பதால்,  தீயநாற்றம் வீசுகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக அனைத்துப் புதிய மருத்துவ வசதிகளும், சிறப்பு மருத்துவப் பிரிவுகளும் கோவை அரசு மருத்துவமனையில் இருந்தாலும்,  பேரிடர் நிலையிலுள்ள பிணவறை அனைத்துப் பெருமையையும் பாழ்படுத்துகிறது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், "" பிணவறைக்கான புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடம் கட்ட, தற்போது சட்டம் சார்ந்த மருத்துவத்துறை செயல்பட்டு வரும் இடம், பழைய  உ.ம.அ.(ஆர்.எம்.ஓ.) குடியிருப்பு ஆகிய இரு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. புதிய கட்டடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்துவருவதால் கட்டுமானப்பணிகள்  தொடங்குவதில்  காலத்தாழ்ச்சி ஏற்படுகிறது'' என்றனர்.

1.82 கோடியில் புதிய பிணவறைக் கட்டடம்: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணைகண்காணிப்பாளர் ஐசக் மோசசு கூறியதாவது: பழுதடைந்த பிணவறைக் கட்டடத்தை இடித்து, அங்குப் புதுமை வசதிகளுடன் பிணவறை கட்ட அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அரசு 1.82 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. 2,500 சதுர அடியில் மூன்று அடுக்கு கட்டடம் கட்டப்படுகிறது. மொத்தம் 50  சடலங்கள் வைக்க வசதி செய்யப்படும். புதுமைமருத்துவக் கருவிகள், மின்னாக்கி, மின்ணேணி ஏந்துகளும் ஏற்படுத்தப்படவுள்ளன. வரும் மார்ச்சுக்குள் புதிய கட்டடங்களுக்கான கட்டுமானப் பணிகள்  தொடங்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

செய்தி: கு.பிரசாத்து, தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக