வியாழன், 7 நவம்பர், 2013

வரிவடிவச்சிதைப்பு முயற்சியாளனுக்கு எதிர்ப்பு

ஒரு கட்டுரையும் எதிர்வினையும்

Comment (46)   ·   print   ·   T+  
1
  • படங்கள்: க. ஸ்ரீபரத்
    படங்கள்: க. பரத்து
கண்கொள்ளாக் காட்சி அது. பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தோரும் ஒன்றிணைந்து சென்னையில் உள்ள ‘தி இந்து’ அலுவலகத்துக்கு நேற்று வந்தார்கள். ஜெயமோகன் எழுதிய ‘ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?’ கட்டுரைக்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வந்த அவர்கள், எதிர்வினையாகக் கையெழுத்திட்டுக் கொடுத்த கண்டன அறிக்கை இது.
மனக்குமுறலோடு ஒரு மடல்
‘‘வணக்கம், இந்த மடலின் இறுதியில் கையொப்பமிட்டுள்ள பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் ஆகியவற்றின் பொறுப்பாளர்களும், தமிழ் உணர்வாளர்களுமாகிய நாங்கள் ‘தி இந்து’நாளிதழில் (4.11.13) வெளியாகியுள்ள எழுத்தாளர் ஜெயமோகனின் ‘ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?’ என்னும் கட்டுரையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
உலகெங்கும் வாழும் பல கோடித் தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் விதத்திலும் ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தை இழிவுபடுத்தும் விதத்திலும் எழுதப்பட்டுள்ளது. ‘எழுத்தாகிய உடல் இல்லையேல், மொழியாகிய உயிர் அழியும்’என்பார் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார். இப்போது தமிழ் மொழியின் உடலை அழிக்கும் முயற்சியில் ஒரு ‘மாமேதை’இறங்கியுள்ளார். அதற்கு ‘தி இந்து’நாளிதழ் துணைபோகலமா?
தன்னை ஒரு நாயர் என்று பெருமையாகக் கூறிக்கொள்ளும் அவர், மலையாள மண்ணின் மீது மாறாத பற்றுடையவர் என்பதை அறிவோம். அந்த மலையாள மண்ணில் மாற்றங்களை எல்லாம் செய்துமுடித்துவிட்டு, தமிழ் எழுத்து வடிவத்தை அழிக்க ஜெயமோகன் புறப்படட்டும்.
மலாயுடன் ஒப்பிடலாமா?
மலாய் மொழியைத் தமிழுக்கு ஒப்பிட்டுக்காட்டுவது எவ்வகையில் பொருந்தும்? தங்களுக்கென்று தனி வரிவடிவம் இல்லாத நேரத்தில், பிற வரிவடிவங்களைக் கையாள்வது இயல்புதான். மலாய் மொழி ஆங்கில எழுத்துருவுக்கு வந்திருப்பதாகக் கட்டுரையாளர் சொல்கிறார். அது லத்தீன் எழுத்துருவிலும், சுமத்ரா பகுதியில் அரபு எழுத்துருவிலும்கூட எழுதப்படுகிறது என்பதை அவர் அறிவாரா?
தமிழ் எழுத்துகளின் மூல எழுத்து ‘பிராமி’என்பது தவறான கருத்து என்பதை மொழியியலாளர்களே இன்று ஏற்கின்றனர். அதனால்தான், ‘தமிழ் பிராமி’என அழைக்கத் தொடங்கியுள்ளனர். இதனை எல்லாம் மொழியியல் மேதை ஜெயமோகன் அறிவாரா?
எழுத்துருவை மாற்றும்போது (உச்சரிப்பு) ஒலிப்பு முறை முற்றிலும் மாறிவிடாதா? தமிழ் நூல்களின் எழுத்துரு அனைத்தையும், ஒரு தலைமுறைக் காலத்தில் முற்றிலுமாக மாற்றிவிட வேண்டும் என்று ஜெயமோகன் துடியாய்த் துடிக்கிறார். தமிழின் சுவடுகள்கூட இல்லாமல் அதனை அழித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடுதானே இது? கனத்த நெஞ்சுடன், மீண்டும் எங்களின் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.’’
கையெழுத்திட்டவர்கள்
தொல்.திருமாவளவன், கலி.பூங்குன்றன், சுப.வீரபாண்டியன், தியாகு, பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன், க.திருநாவுக்கரசு, சைதை க.வ.சிவா, மே.ப.காமராஜ், கி.த.பச்சையப்பன், வா.மு.சே.திருவள்ளுவர், பா.இறையெழிலன், கோ.பாவேந்தன், தமிழ்மகன், உதயன், முத்தையா குமரன், கோவேந்தன்.
கருத்துகளை மதிக்கிறோம்
தமிழ்ச் சூழலில், ஒரு புதிய விவாதக் களத்தை ‘தி இந்து’ தொடங்கிவைத்திருக்கிறது. மிகக் குறுகிய காலத்தில் அது பெரும் வீச்சை உருவாக்க ஆரம்பித்திருக்கிறது. ‘கருத்துப் பேழை’ மற்றும் ‘அரசியல் கள’த்தைத் தாங்கிவரும் நம்முடைய நடுப்பக்கங்கள் வெவ்வேறு குரல்களின் கருத்துகளை முன்வைக்கும் தளமாகவே வருகின்றன. கட்டுரையாளர்கள் அல்லது பேட்டியாளர்களின் கருத்துகள் நம்முடையவை அல்ல. அதே சமயம், எல்லா விதமான கருத்துகளும் சங்கமிப்பதே ஜனநாயகத்தின் அடிப்படை என்று நாம் நம்புகிறோம். எதிர்வினைகளுக்கும் நாம் இடம் அளிக்கிறோம். அதன் ஒரு பகுதியாக இன்று முதல் வாசகர் கடிதங்களுக்கான இடத்தையும் கூடுதலாக்குகிறோம். தமிழால் இணைவோம்!
- ஆசிரியர்