திருநெல்வேலி மதுரை  திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி, வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், இலக்குவனார் இலக்கிய இணையம்  இணைந்து திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் இலக்குவனார் முப்பெருவிழாவினைச் சிறப்பாக நடத்தின.
  மாசி 12,13,14 தி.பி 2045 (பிப் 24,25,26.2014) ஆகிய  3 நாளும் தமிழ்ப் போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப்  பணிகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம், நூல்கள் வெளியீட்டு விழா, இலக்கியப் போட்டிகள் என மூன்று நாளும் முப்பெரு விழாக்கள் நடைபெற்றன.
  ம.தி.தா.இந்துக்கல்லூரி ஆண்டு நூற்றைம்பது கண்ட  தொன்மை வளம் சான்ற கல்லூரி. இக்கல்லூரியில் தமிழ்த்துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 1983ஆம் ஆண்டிலிருந்து வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய(முதலியா)ர் பெயரில் வெ.ப.சு.தமிழியல்  ஆய்வு மையம் இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பயின்றும் பயிற்றுவித்தும் சென்றிருக்கும் செந்தமிழ்ச் சான்றோர்க்கு விழாக்கள் கொண்டாடி மகிழ்வதில் இக்கல்லூரி முன்னோடியாகத் திகழ்கிறது. அவ்வகையில் இக்கல்லூரியில் பணியாற்றித் தமிழ்ச்செம்மலாகத் திகழ்ந்த பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் இன்றமிழ்ப்பணியை எடுத்துரைக்கும் வகையில் இந்த ஆண்டு மூன்று நாள் விழா சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது.
  முதல் நாள்  பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியன நெல்லை மாவட்ட மாணவ மாணவியர்க்கு நிகழ்த்தப் பெற்றன.
  இரண்டாம் நாள் பன்னாட்டுக் கருத்தரங்க நிகழ்ச்சிக்குக் கல்விச்சங்கப் பொருளாளர் திருமிகு தளவாய் தீ.இராமசாமி தலைமை வகித்தார். கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ஆ.செல்லப்பா வரவேற்றார். கல்லூரி  ஆட்சிக்குழுச் செயலர் மு.செல்லையா  நிகழ்வுகளைத் தொடக்கி வைத்து உரையாற்றினார். ஆட்சிக்குழு உறுப்பினர் ப.தி.சிதம்பரம், கல்லூரி முதல்வர் ப.சின்னதம்பி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
  பேராசிரியர் சி.இலக்குவனார் விழாவிற்குப்  பேராசிரியர் குடும்பத்தினர் வந்திருந்து சிறப்பித்தனர். பேராசிரியர் இலக்குவனாரின் மக்கள் பொறி.இ.திருவேலன், அகரமுதல இணைய  இதழ் ஆசிரியர் இ.திருவள்ளுவன், முனைவர் பேராசிரியர் இ.மதியழகி,  பேராசிரியர் மருமகள் அன்புச்செல்வி திருவள்ளுவன், பேரன் தி.ஈழக்கதிர்  ஆகியோர் குடும்பத்தினர் சார்பாக வந்திருந்து தம் குல முதல்வரின் நினைவைப் போற்றியதும் ஏற்றங்களை எடுத்துரைத்ததும் எண்ணற்குரியன.
  இதன்  தொடர்பில் வெ.ப.சு. தமிழியல் ஆய்வு மையத்தில் இலக்கியப் போட்டிகள், பன்னாட்டுக் கருத்தரங்கம், நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றன.
  சென்னை இராணிமேரிக்கல்லூரி மேனாள் தமிழ்த்துறைப்  பேராசிரியர் முனைவர் இரா.ஞானபுட்பம் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணி குறித்து உரையாற்றினார்.      மதுரை காமராசர் பல்கலைக்கழக மேனாள் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் ந.சொக்கலிங்கம்  கருத்தரங்கத்தின்  மையக் கருத்தை விரித்துரைத்தார். அறிஞர் படிக்கராமு இலக்குவனாரின் கவிதைத்திறன் குறித்துச் சொற்பொழிவாற்றினார்.
  இதனையடுத்து 4 நூல்கள் வெளியிடப்பட்டன. ‘பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்’ என்னும் மின்னணு நூலை ஆட்சிக்குழுப் பொருளாளர் தளவாய் தீ.இராமசாமி வெளியிட, பொறி.இ.திருவேலன் பெற்றுக் கொண்டார்.
  ‘சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்’ என்னும் கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்பு நூலை, கல்லூரி ஆட்சிக்குழுச் செயலர் மு.செல்லையா வெளியிட, அகரமுதல இணைய இதழ் ஆசிரியர் இலக்குவனார் திருவள்ளுவன் பெற்றுக்கொண்டார். வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மைய ஆய்வாளர்கள் பழ.இராசகோபாலன் எழுதிய ‘கம்பனின் நதியினிலே’, என்ற நூலும்  முனைவர் இரா.இந்துபாலா எழுதிய ‘இறையுணர்வும் இயற்கை உணர்வும்’ என்ற நூலும்  வெளியிடப்பட்டன.
  இரண்டாம் நாள் பிற்பகல் கருத்தரங்க அமர்வில் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கப்பெற்றன. நாகர்கோயில் தெ.தி.இந்துக்கல்லூரியில் பேராசிரியர் சி.இலக்குவனாருடன் பணியாற்றிய, நெல்லைக் கம்பன்கழக நிறுவனர் பேரா.சிவ.சத்தியமூர்த்தி இலக்குவனாரின் அஞ்சாநெஞ்சம், அருந்தமிழ்த்தொண்டு, மனித நேயம் ஆகியவற்றை எடுத்துரைத்தார். வைணவ வள்ளல் முனைவர் கண்ணபிரான், சி.இலக்குவனாரின் உரைச்சிறப்பினை எடுத்துரைத்தார். ம.தி.தா.இந்துக்கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் நா.உசாதேவி சி.இலக்குவனாரின் வாழ்வியல் சூழலையும் தமிழ்ப்பணிகளையும் எடுத்துரைத்து, அவர்தம் சங்கப்பாடல்களின் உரைத்திறனையும்  மொழிந்தார். மேலும் பல ஆய்வாளர்கள் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் பன்முகப் படைப்புத் திறன் குறித்து ஆய்வுரைகள் அளித்தனர். கட்டுரையாளர்களுக்கும் கருத்தரங்கத் தொண்டர்களுக்கும் அன்புச்செல்வி திருவள்ளுவன் நினைவுப் பரிசுகள் வழங்கினார். கருத்தரங்கத்தைச் சிறப்பாக நடத்தும்  ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோ.சங்கரவீரபத்திரன் நன்றி கூறினார்.
  மூன்றாம்நாள் புதன்கிழமை. முற்பகல் திரு இலக்குவனார் திருவள்ளுவன் தலைமையில் பேரா.அறிவரசன், பேராசிரியர் இலக்குவனாரின் தமிழியக்கப் பணிகள் குறித்து உரையாற்றினார்.
  முனைவர் இ.மதியழகி தலைமையில் பேரா. முனைவர் இரா.ஞானபுட்பம்  பேராசிரியர் இலக்குவனாரின் படைப்புத்திறன் குறித்து உரையாற்றினார், முதல்வர் முனைவர் ப.சின்னதம்பி, தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ஆ.செல்லப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோ.சங்கரவீரபத்திரன் தொகுப்புரை வழங்கினார்.
  பிற்பகல் திரு . இலக்குவனார் திருவள்ளுவன் வழங்கிய  பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் குறித்த  உரைக்குப் பின்பு மாணவர்களின் பகிர்வுரை சிறப்பாக நடைபெற்றது.
  மாலையில்  இலக்கியப் போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு 15 முதன்மைப் பரிசுகளும் 75 ஊக்கப் பரிசுகளும் ‘இலக்குவனார் இலக்கிய இணையம்’ சார்பில் வழங்கப் பெற்றன. இலக்கியப் போட்டிகளில் சாராள் தக்கர் மகளிர் கல்லூரி மாணவிகள் முதலிடத்தையும் சாரதா மகளிர் கல்லூரி மாணவிகள் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
  பரிசுகளையும் சான்றிதழ்களையும் மீநாயகர்(கர்னல்)(ஓய்வு) சானகிராமன், முதல்வர் முனைவர் ப.சின்னதம்பி, ‘அகரமுதல’ இணைய இதழ் ஆசிரியர் இலக்குவனார் திருவள்ளுவன் ஆகியோர் வழங்கினர்.
  மூன்றாம் நாளாகிய நிறைவு நாளில்  மேனாள் தமிழ்த்துறைத்தவலைவர் முனைவர் நா.உசாதேவி, கருத்தரங்க நூலை  அச்சிட்டுத் தந்த மணிவாசகர் பதிப்பகத்திற்கும் அதன் மேலாளர் குருமூர்த்திக்கும் விழாவில் பல வகைகளிலும் ஒத்துழைத்த அனைவருக்கும்  ஏற்பாட்டாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
  முப்பெருவிழாவில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளின் தமிழ்த்துறையினரும் மாணவ மாணவியரும் தமிழன்பர்களும் வந்திருந்து சிறப்பித்தனர். குற்றாலம்  பராசக்தி மகளிர் கல்லூரி இதழியல் துறையினர் துறைத்தலைவருடனும் பேராசிரியருடனும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
  முப்பெருவிழா ஏற்பாடுகளைத் தமிழ்த்துறைத் தலைவர் வழிகாட்டுதலிலும் முனைவர் கோ.சங்கர வீரபத்திரன்  ஒருங்கிணைப்பிலும் பேராசிரியர்கள் அ.சுந்தரம், த.கருப்பையா, தி.முத்துலெட்சுமி, ஆ.இரந்திர்குமார், பிரம்மஅரிசங்கர், கற்பகம் முதலானோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
  தமிழ்ப்போராளிபேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ் மணத்தை அனைவரும் நுகர்வதற்கு இம்முப்பெருவிழா உதவியாக அமைந்ததால் தமிழ்த்துறையையும் கல்லூரி முதல்வர், ஆட்சிக்குழுவினரையும் வந்திருந்தோர் பாராட்டினர்.