thaayumanavar01

தாயுமானசுவாமி தமிழ் வளர்ச்சி மன்றம்

 
பெ. சிவசுப்பிரமணியன்
ஆட்சி அலுவலர் (ஓய்வு)
தலைவர்
25/47, இரண்டாவது தெரு,
செரியன் நகர், புதுவண்ணையம்பதி, சென்னை – 81. 
 044 – 2591 0102
செந்தமிழைப் போற்றுவோம்!

       அயல் மையலை விரட்டுவோம்!

பேரன்புடையீர்,
வணக்கம். உலகில் உள்ள எல்லா நாடுகளும் தங்கள் தாய்மொழியைப் போற்றுகின்றன.
ஆசியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அய்ரோப்பா, ஆசுதிரேலியா என ஆறு கண்டங்களிலும் அவரவர் தாய்மொழியே கோலோச்சுகின்றன. எந்த நாட்டிலும் அயல் மொழி மோகம் காணப்படவில்லை! தங்களது தாய்மொழியைப் போற்றி வளர்க்கத் திட்டமிட்டு உலகளவில் மூன்று நாள் சிறப்பு நாட்களாக அடையாளம் காணப்பட்டு, தக்க வகையில் கொண்டாடப்படுகின்றன. தாய்மொழி மேம்பாடு கருதி (1) ’தாய்மொழி நாள் – பிப்ரவரி 21(2) ’எழுத்தாக்க நாள் – மார்ச்சு 6
(3) ’கவிதை நாள் – மார்ச்சு 21என சிறப்பு நாட்களாக உலக நாடுகள் அவை அடையாளப்படுத்தியுள்ளது.
இந்த மூன்று நாட்களையும் உண்மையாக – உளப்பூர்வமாக பயன்படுத்தி நம் தாய்மொழியாம் செந்தமிழை உயர்த்த அனைவரும் உழைத்தல் கடப்பாடு. கடமையை உணர்ந்து தாயுமானசுவாமி தமிழ் வளர்ச்சி மன்றம் உலக நாடுகள் அவையில் உறுப்பினர் நாடான நம் நாட்டில் உலகத் தாய்மொழி நாளை முன்னிறுத்திட வேண்டுகோள் விடுத்ததனைத் தொடர்ந்துத் தமிழகத்தில் நீறு பூத்த நெருப்பாய்க் கிடந்த தமிழ் வேட்கை காரணமாகப் பெரும் உற்சாகத்துடன் 2013ஆம் ஆண்டில் பல்வேறு நிறுவனங்களும் மக்களும் சீரும் சிறப்புமாகக் கொண்டாடினர்.
2013ஆம் ஆண்டில் சில மாதங்கள் ஐக்கியப் பேரரசு எனப்படும் – இங்கிலாந்து நாட்டிற்குச் சென்றிருந்தபோது அந்நாட்டின் பள்ளிப் பாடப்புத்தகத்தின் மூலம் அங்கே ஆங்கிலம் மட்டுமல்ல – ஏழு மொழிகள் கோலோச்சுகின்றன என்ற புதிய செய்தியினை அறிந்தேன்! அப்பயண அறிவில் அறிந்தவை ’ஐக்கியப் பேரரசு-ஒரு பார்வை என நூல் வடிவம் கொண்டது. அஃது மாணிக்கவாசர் பதிப்பகத்தால் அச்சிட்டு 21-2-2014 தாய்மொழி நாளன்று சேக்கிழார் மன்றச் சிறப்புக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
ஆங்கிலம் உருப்பெற்ற தேசத்திலேயே அம்மொழி முழுமையாக கோலோச்ச இயலவில்லை! இங்கிலாந்து ஓர் பூர்விக கேல்சிய நாடு! ஆங்கிலத்தை மத்திய அரசு திணித்ததனை அங்குள்ள மாநில மக்கள் எதிர்த்துப் போராடி வெற்றி கண்டதன் விளைவாக 1998-1999 முதல், மாநில மொழிகளான கேல்சிய ஐரீசு மொழியும், கேல்சிய வேலிசு மொழியும், கேல்சிய இகாடிசு மொழியும் வட்டார மொழிகளான கேல்சிய காரன்வாலிசு மொழியும், கேல்சிய மாணக்சு மொழியும் மட்டுமன்றிப் பிரெஞ்சு மொழியும்கூட எல்லா வகையிலும் பயன்பாட்டு மொழியாகக் கோலோச்சுகின்றன. மேலும் உலகம் முழுமையும் ஆங்கிலம் என்பது உண்மையன்று. உலகில் 94% மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது. உலகளவில் 6% மக்களே ஆங்கிலம் அறிவர் போன்ற பல தகவல்கள் இந்நாளில் வலைத்தளங்களிலும் கிடைக்கின்றன. தமிழ் மக்கள் இவ்வலைத்தளங்களை உசாவி உண்மை நிலையை உணர்ந்து தெளிதல் கடமை!
இந்நிலையில், 2014 உலகத் தாய்மொழி நாளைப் பல்வேறு நிறுவனங்கள் அமைப்புக்கள் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி என வடக்கே திருத்தணிகை முதல் தெற்கே கன்னியாகுமரி வரை கிழக்கே புதுச்சேரியிலிருந்து மேற்கே கோவை வரை எழுச்சியுடன் அறிவுப்பூர்வமாக கொண்டாடின. தமிழக அரசு சென்னை எழும்பூரில் கன்னிமாரா நூலக அரங்கில் கவியரங்கம், கருத்தரங்கம், வாழ்த்தரங்கம் என மூன்று அமர்வுகளாக மாலை 3 மணி முதல் இரவு  7 மணி வரை  கொண்டாடியது. மேலும் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர்கள் மட்டுமன்றி ஏனைய பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர்கள், பேராசிரியப் பெருமக்கள், தமிழ் அறிஞர் பெருமக்கள், ஆர்வலர்கள், தமிழ் வளர்ச்சி மன்றங்கள், ஆன்மிக அமைப்புகள், வாசகர் வட்டங்கள் எனப் பலதரப்பினரும் இவ்வாண்டு தமிழ் தாய்மொழி நாளைத் தாய்த் தமிழ் திருவிழா எனக் கருதி அவரவர் வழியில் அறிவுப்பூர்வமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். கூட்டங்கள், கருத்தரங்குகள் இவ்வாண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெற உள்ளன.
உருது மொழித் திணிப்பை எதிர்த்து வங்கத் தேசத்தவர் சில காலம் போராடி வெற்றி கண்டனர். அதன் விளைவாக அங்கே வங்கமொழி கோலோச்சுகின்றது. ஆனால் தமிழ் மொழியைக் காக்க1937 முதல் இந்தித் திணிப்பை எதிர்த்து நாம் போராடி வந்தாலும் கூட தமிழகத்தில் தமிழ் முழுமையாகக் கோலோச்சுகின்றதா? தமிழைத் தள்ளி வைத்து ஆங்கிலம் அல்லவா அரியணை ஏறிக் கொண்டுள்ளது! ஏன்? தமிழைப் போற்றிக் காக்க இந்தி எதிர்ப்பா! அல்லது ஆங்கிலத்திற்குப் பட்டம் சூட்டவா? சிந்திப்பீர்!
’செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க செய்யாமை யானும் கெடும்(466)
என்ற பொய்யாப் புலவரின் திருவாக்கைப் புறந்தள்ளி பல ஆண்டுகளாக, தமிழ் பின்னோக்கித் தள்ளப்படுகிறது எனத் தமிழறிஞர்கள் தங்கள் வேதனையினை வெளியிடுகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் அது தமிழ் மன்பதைக்கு மட்டும் இழப்பல்ல. மனித மன்பதைக்ககே மிகப் பெரிய இழப்பாகும். 5000 ஆண்டுகளுக்கு மேலாகப் பண்பட்ட மொழியும் அதன் மேன்மைமிகு இலக்கண இலக்கியங்களும் பயன்பாடற்றால் – உலக மக்களுக்குப் பல்லாண்டு காலமாக வழிகாட்டும் தாய்த் தமிழைத் தமிழகம் மறந்து போனால் – உலகமே பெரிய இழப்பிற்கு உள்ளாகும் என அறிஞர் பெருமக்கள் இவ்விழாவினையொட்டி மிக விரிவாக எடுத்துரைத்து வருகின்றனர்.
தமிழராய்ப் பிறக்கவும், குடிபெயர்ந்து தமிழ்நாட்டில் வாழவும், என்ன புண்ணியம் செய்தோம் எனச் செம்மாந்து – உலக நாடுகள் அவையின் அறிவுரைகளை ஏற்று – பொன்னே போலப் போற்றி – இவ்வாண்டு முழுவதுமே நம் தாய்மொழியாம் செந்தமிழை ஆட்சிமொழியாக, கல்விமொழியாக, வழிபாட்டு மொழியாக, நீதிமொழியாக கலப்பின்றிப் பயன்பாட்டு மொழியாகப் போற்றி வளர்ப்போம் என உறுதி கொண்டு ஒவ்வொருவரும் தொய்வின்றி தமிழ்ப் பணியாற்றுவோம்.
தமிழைப் படைத்தது மட்டுமன்றி இறையனாராகத் தமிழ்ச்சங்கத்திற்குத் தலைமைப் பொறுப்பேற்று நடத்திட்ட இறைவனை வணங்கி வழிபட்டுச் செந்தமிழைக் காப்போம்! கற்போம்! கற்பிப்போம்! போற்றுவோம்! உலகின் மூத்த வளம் கொழிக்கும் நம் மொழிக்கு நம்மாலான சிறப்புகளை நம் வாழ்நாளெல்லாம் செய்வோம்.
செந்தமிழ் நாட்டில் ஏப்பு(எயிட்சு) நோய் போலப் பரவி வரும் அயல்மொழி மையலை விரட்டுவோம். இக்காலம் ஊடகங்களின் காலம்! எனவே ஊடகங்கள் தனிக் கவனம் செலுத்தி ஆங்கில மோகத்தை விரட்டுவதனைக் கடமையாகக் கருதி தமிழ்ப் பணியாற்றும் என்போம்.
வாழிய செந்தமிழ்! வாழிய நற்றமிழர்!
வாழிய தமிழர்தம் பண்பாடு!