செவ்வாய், 8 ஜூலை, 2014

தனித்தமிழ் இயக்கம் – சிலப்பதிகார விழா

தனித்தமிழ் இயக்கம் – 

சிலப்பதிகார விழா

silappathikaravizhaa03
  தனித்தமிழ் இயக்கம் ஆனி 16, 2045 – 30.6.2014 அன்று மாலை சிலப்பதிகார விழா ஒன்றை அதன் தலைவர் தனித்தமிழறிஞர் முனைவர் க.தமிழமல்லன் தலைமையில் நடத்தியது. தமிழ்த்தென்றல் வரவேற்புரை வழங்கினார். திருவாட்டி த.தமிழ்இசைவாணி செயல்அறிக்கை படித்தார்.
  தூ.சடகோபன், நா.அப்பாத்துரை, முதலியோர் முன்னிலையில் அவ்விழா புதுவை வேல்.சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடைபெற்றது.
  திருவள்ளுவர் படத்தையும் மறைமலையடிகள் படத்தையும் கடலூர் மாவட்ட நூலகஅலுவலர் திருவாட்டி பெ.விசயலட்சுமி அவர்கள் திறந்துவைத்துப் பேசினார்.
  சட்டமன்ற உறுப்பினர் ஆ.அசோக்ஆனந்து, வாழ்த்துரை வழங்கினார்.
  ‘கற்பைப் போற்றிய கவுந்தியடிகள்’ என்னும் தலைப்பில் சீனு.வேணுகோபால் ‘ஆடல்அரசி மாதவி’ என்னும் தலைப்பில் அமலோற்பமேரி ஆகியோர் உரை நிகழ்த்தினர். ‘என்னைக் கவர்ந்த சிலம்பு’ என்பதைப் பற்றி முனைவர் கனகராசு, பாவலர் இரா.தேவதாசு ஆகியோர் பாட்டுரை வழங்கினர்.
  பேராசிரியர் இராச குழந்தைவேலனார் தலைமையில் வழக்காடு மன்றம் நடைபெற்றது. ‘செங்கோல் பிழைத்த பாண்டியன் குற்றவாளியே’ எனப் பேராசிரியர் பழ.முத்தப்பன் குற்றச் சாற்றை வழக்காகப் பதிவுசெய்தார். ‘குற்றவாளி இல்லை’ எனமுனைவர் கடவூர் மணிமாறன் மறுத்துப் பேசினார்.
  முதலமைச்சர் மாண்புமிகு ந.அரங்கசாமி சிறப்புரை நிகழ்த்தினார். ‘வெல்லும் தூயதமிழ்’ ஆசிரியர் த.தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.
சிலப்பதிகார விழாவில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  1. சட்டமன்றத்திலும் என்.ஆர்.பேராயம் (காங்கிரசு)தேர்தல் அறிக்கையிலும் உறுதி மொழி அளித்ததற்கு இணங்கப் புதுச்சேரி அரசு தமிழ் வளர்ச்சித்துறையை விரைந்து அமைக்கவேண்டும். அதற்கேற்பச் சட்டமன்றத்தில் வழங்கப்பெறும் பொருள் (நிதி) அறிக்கையில் பணஒதுக்கீட்டோடு அறிவிப்புச் செய்யவேண்டும். அத்துறையை அமைப்பதற்கு ஏற்பத் தனிஅலுவலர் ஒருவரை அரசு அமர்த்த வேண்டும்.
  2. பெயர்ப்பலகைகளைத் தமிழில் அமைக்காத வணிக நிறுவனங்கள்மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்
  3. அயல் மொழி அலுவலர்கள் தமிழ்கற்குமாறு புதுவை அரசு வற்புறுத்தவேண்டும்
  4. தமிழக அரசு பின்பற்றும் சமச்சீர்க்கல்வி முறையை மாற்றாமல் புதுச்சேரிஅரசு தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.
  5. வாணிதாசன் நூற்றாண்டு விழாவைப் புதுச்சேரிஅரசு சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.
  6. பாவேந்தரின் 125ஆம் ஆண்டு விழாவைப் புதுச்சேரிஅரசு சிறப்பாகக் கொண்டாடுவதோடு விழாவை முன்னிட்டும் சுற்றுலா வளர்ச்சியைக் கருதியும் புதுச்சேரிக் கடலில் பாவேந்தர்க்கு 150அடி உயரத்தில் சிலை ஒன்றை அமைக்க வேண்டும்

 ஒளிப்படங்களைச் சொடுக்கிக் காண்க.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக