thatheperiyakkam
தீர்மானம் – 7: தமிழ்நாட்டை கதிர்வீச்சு நோயாளியாக, வேதியக் குப்பை மேடாக மாற்றாதே!
 neutrino01
இந்திய அரசு, தனது பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை ஆதாயத்திற்காகவும் தனது ஆதாயங்களுக்காகவும் மனித குல அழிவுத் தொழில்நுட்பமான அணுப்பிளப்புத் தொழிற்சாலைகளை மேலும் மேலும் தமிழ்நாட்டில் நிறுவி வருகிறது.
மற்ற மாநிலங்கள் மறுத்துவிட்ட நிலையில், தமிழகக் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் கட்டியது. அணுக்கதிர் வீச்சினால் உலகின் பல பகுதிகளில் மனிதப் பேரழிவு நேர்ந்ததை அறிந்து கொண்ட தமிழ் மக்கள், கூடங்குளம் அணுஉலையை மூட வலியுறுத்தி, இடிந்தகரையைத் தளமாகக் கொண்டு மூன்றாண்டுகளாகப் போராடி வருகின்றனர். அந்த எதிர்ப்பை ஒடுக்கி முதல் அணு உலையைச் செயல்படுத்திய இந்திய அரசு, இப்பொழுது அதே கூடங்குளத்தில் மேலும் 7 அணு உலைகள் திறக்கப்போவதாக அறிவித்துள்ளது.
இவற்றில், சிறிய அளவில் கதிர்வீச்சு வெளிப்பட்டாலும் தமிழ்நாடு சுடுகாடாக மாறக் கூடிய ஆபத்து உள்ளது. வட தமிழ்நாட்டில் ஏற்கெனவே செயல்படும் கல்பாக்கம் அணுமின் நிலையம் மேலும் மேலும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் தென்மேற்கே, தேனி மாவட்டம் தேவாரம் மலை அடிவாரத்தில், நுண்நொதுமி(நியூட்ரினோ) அணுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம், இந்தியா முழுவதுமுள்ள அணுக்கழிவுகளைப் புதைத்து வைக்குமிடம் ஆகியவற்றை கட்டி வருகிறது. அழிவு ஏற்பட்டால் தமிழகத்திற்கு, ஆதாயம் கிடைத்தால் மற்றவர்களுக்கு என்ற திட்டத்தில் இந்திய அரசு செயல்படுகிறது.
உலகத்தில் எங்கும் அமையாத அளவிற்கு கழிமுக மாவட்டங்களில், வளம் நிறைந்த காவிரிச் சமவெளியை இயற்கை தமிழ் மக்களுக்கு வழங்கியிருக்கிறது. அங்கு, சாண (மீத்தேன்) எரிவளி எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி, காவிரிப்படுகையை வேதியக் குப்பை மேடாக்கும் செயலில் இந்திய அரசு இறங்கியுள்ளது. மீத்தேன் திட்டம் செயல்படுத்தப்பட்டால், காவிரிப்படுகையில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, குடிநீருக்கும் பாசனத்திற்கும் பயன்படாத வேதியக் கலவையாக மாறிவிடும்.
கேரளத்திலிருந்து கருநாடகத்திற்கு எரிவளி கொண்டு செல்வதற்காகக் கோயம்புத்தூர்,
ஈரோடு, சேலம், தருமபுரி, கிருட்டிணகிரி போன்ற மாவட்டங்களில் விளை நிலங்களை பாழ்படுத்தும் வகையில் நிலத்தடிக் குழாய்களை புதைக்கிறது, இந்திய அரசின் கெயில் நிறுவனம்.
வெளிநாடுகளுக்குத் தாது மணலை அனுப்புவதற்காகத் தென் மாவட்டங்களின் நிலவளத்தைச் சூறையாட தனியார் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு இசைவளிக்கிறது.
உலகின் முதல் நாகரிகம், தமிழர் நாகரிகமாக அமைவதற்குக் காரணமாக உள்ள தமிழகத்தின் செவிலித்தாய்களாக விளங்கும் ஆறுகளைச் சின்னாபின்னப்படுத்தி சிதைப்பதற்கு, மணல் கொள்ளையை அனுமதிக்கிறது தமிழக அரசு. தமிழக ஆற்று மணல், வெளி மாநிலங்களுக்கும், கப்பல் கப்பலாக வெளி நாடுகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
இயற்கையின் கொடைகளாக உள்ள திருவண்ணாமலை கவுத்தி மலை, சேலம் சேர்வராயன் மலை போன்ற இடங்களில் உள்ள கனிம வளங்களை வெட்டி எடுத்துச் செல்ல தனியார் நிறுவனங்களை அனுமதித்துள்ளது, இந்திய அரசு.
தமிழக இயற்கை வளத்தை அழித்து, சுற்றுச் சூழலைக் கெடுத்து, தமிழக மக்கள் வாழத் தகுதியில்லாத மண்ணாக மாற்றிவிடும் மேற்படித் திட்டங்கள் அனைத்தையும் உடனடியாகக் கைவிட வேண்டுமென்று, இந்திய அரசையும், தமிழக அரசையும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இந்த வளங்களைப் பாதுகாக்க அங்கங்கே தனித்தனியாக நடைபெறும் போராட்டங்கள், ஒருங்கிணைந்த போராட்டமாக வடிவெடுக்க அனைவரும் முயல வேண்டுமென்றும், அந்த முயற்சியில் உறுதியாகப் பங்கேற்க வேண்டுமென்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் தீர்மானித்துள்ளது.
தீர்மானம் – 8: மொழிப் போர் ஈகி கீழப்பழுர் சின்னச்சாமியின் முழு உருவச் சிலையை உடனே திறக்க வேண்டும்.
 http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/02/chinnasami01-233x250.png
தமிழ் மொழியை அழிக்க வரும் இந்தித் திணிப்பை எதிர்க்கவும், தமிழ் மொழியைக் காக்கவும் முதன் முதலாக   தை 12, 1995 / 1964 சனவரி 25-இல், தீக்குளித்து மாய்ந்தவர் தழல் ஈகி கீழப்பழுர் சின்னச்சாமி. அவர் தீக்குளித்த திருச்சிராப்பள்ளி மண்ணில், அவருக்கு முழு உருவச் சிலை நிறுவப்படும் என்று தமிழக முதலமைச்சர் செயலலிதா அவர்கள் அறிவித்தார்கள். இன்னும், அச்சிலை நிறுவப்படாமல் உள்ளது. உடனடியாக, தழல் ஈகி கிழப்பழுர் சின்னச்சாமிக்கு திருச்சிராப்பள்ளியில் சிலை நிறுவித் திறக்குமாறு தமிழக முதல்வரை, தமிழ்த் தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.
1938 மற்றும் 1965 ஆண்டுகளில் இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழகத்தில் நடந்த போராட்டங்களையும் நிகழ்ந்த ஈகங்களையும், தமிழக அரசு பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டுமென்று, தமிழ்த் தேசியப் பேரியக்க சிறப்புப் பொதுக்குழு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது