சனி, 27 டிசம்பர், 2014

“செல்லமே மாற்றத்தை உருவாக்குவோம்” விருதுகள் வழங்கும் விழா


chellame_virudhu08

‘செல்லமே’ மாத இதழ் சார்பில்

2014 ஆம் ஆண்டிற்கான

“செல்லமே மாற்றத்தை உருவாக்குவோம்”

விருதுகள் வழங்கும் விழா

சென்னையில் நடைபெற்றது.

  தமிழில் பெற்றோருக்காக வெளிவருகின்ற வார இதழான ‘செல்லமே’ தன்னுடைய முதலாவது பிறந்தநாளினை முன்னிட்டுத் தமிழ்நாட்டில் பல்வேறு திறமைகளைக்கொண்டு, மக்களுக்காகத் தங்களை ஒப்படைத்துக்கொண்ட, மற்றவர்களால் அறியப்படாத 10 அருவினையாளர் (சாதனையாளர்)களுக்கு விருது வழங்கும் விழா சென்னை, கந்தன் சாவடியில் நடைபெற்றது.
 இவ்விழாவில், விருது வழங்கப்பட்ட அருவினையாளர்களில் 12 அகவை யோகேசு என்ற சிறுவனும் அடக்கம். இவர் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் மின்னணுத்துடைப்பான் ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளார்.
தீபக்
மாற்றுத்திறனாளியான இவர் இலண்டனில் மனநலமருத்துவத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். பெரிய, பெரிய மருத்துவமனைகளில் பணி புரியாமல் தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தொண்டாற்றுவதற்கு ஒப்படைத்துக் கொண்டுள்ளார்.
மோகனா சோமசுந்தரம்
ஓய்வு பெற்ற பேராசிரியரான இவர் மார்பகப் புற்றுநோயில் இருந்து போராடி மீண்டு வந்தவர். கிட்டதட்ட 38 வருடங்களாகத் தமிழ்நாடு அறிவியல் கழகத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றார். சிற்றூர்ப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கு அறிவியலை எளிமையாக விளக்கும் பணியினைச்செய்து வருகின்றார்.
நாகராசன்
நெசவாளியான இவர் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகப் பல்வேறு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். கிட்டதட்ட 10,000க்கும் அதிகமான மரங்களை நட்டுள்ளார் இவர்.
வைகிங்‘ ஈசுவரன் – ‘வைகிங்‘ நிறுவன முதலாளியான இவர் இன்று ஒரு வெற்றிகரமான தொழிலதிபர். மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த இவர் தனது கனவுகளை நனவாக்கக் கடுமையாக உழைத்தவர்.
அல்போன்சு லிக்கோரி
சென்னை, செங்குன்றத்தினைச்சேர்ந்த இவர் புழல் பகுதியில் வேலை பார்க்கும் செங்கல் சூளை, அரிசி ஆலை கூலித்தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உணவூட்டம், நலவாழ்வு பற்றிய விழிப்புணர்வுகளைப் பற்றி விளக்கமளிக்கும் பணியினைச் செய்து வருகின்றார்.
மருத்துவர். ரிபப்ளிக்கா சிரீதர்
சென்னையின் முன்னாள்   மாநகரஅண்ணலான(Sheriff) ஆர்.எம் தேவின் மகளான இவர் ஒரு மருத்துவமனை ஒன்றினை நடத்தி வருகின்றார். இலவச நோய்த் தடுப்பு விழிப்புணர்வு முகாம்களையும் நடத்தி வருகின்றார்.
வேலு சரவணன்
தமிழ்நாட்டின் புகழ்வாய்ந்த தெருக்கூத்து கலைஞரான இவர் புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்று வருவதுடன், குழந்தைகளுக்கு தன்னுடைய கலையின் மூலமாக நல்லொழுக்கங்களையும் கற்பித்து வருகின்றார்.
முத்துகிருட்டிணன்
எழுத்தாளரான இவர் குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதுடன் இந்தியப் பண்பாடு, கலை, வரலாறு குறித்த கருத்துகளையும் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறி வருகின்றார்.
சிரீதர் வேம்பு
இவர் இசுகோ பல்கலைகழகத்தின் நிறுவனர். எல்லாக் கணிய(மென்பொருள்) நிறுவனங்களும் வேலை வாய்ப்பிற்காகப் படையெடுக்கும் போது, வேம்புவின் இசுகோ மட்டும் சிற்றூர்களை நோக்கிப் படையெடுக்கின்றது. இவருடைய பல்கலையில் சிற்றூர்ப்புற மாணவர்களுக்கு கணிய(மென்பொருள்) நிறுவனங்கள் குறித்துக் கற்பிக்கப்படுகின்றன.
இராம்கோ குழுவின் முதன்மை அதிகாரியான பி.ஆர்.இராமசுப்ரமணிய இராசா இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். விழாவில் பேசிய அவர், “பெற்றோர்களாக இருப்பது ஒரு கடினமான பணி. அத்தகைய பெற்றோர்களை வழிநடத்தும் சிறப்பான பணியினை ‘செல்லமே’ இதழ் மேற்கொண்டு வருகின்றது” என்று செல்லமே குழுவினருக்குப்புகழாரம் சூட்டினார்.
chellame_virudhu07
-புலி உறுமுது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக