72water_melon01

நிகழ்பதிவித் தகவலால் நீர்ப்பூசுணை(தர்ப்பூசணி)

விற்பனை மந்தம்

தேவதானப்பட்டி பகுதியில் கோடைக் காலம் தொடங்கியவுடன் கம்பங்கூழ், இளநீர், மோர், நீர்ப்பூசுணை, நுங்கு போன்றவற்றை வாங்கிக் கோடைக்காலத்தைத் தாங்கத் தொடங்கியுள்ளார்கள். இந்நிலையில் நிகழ்பதிவி(WhatsApp) மூலம் நீர்ப்பூசுணையில் கலப்படம் என்று வந்த செய்தியை அடுத்து இப்பொழுது நீர்ப்பூசுணை வாங்குவதைப் பொதுமக்கள் தவிர்த்து வருகிறார்கள். நீர்ப்பூசுணையில் எரித்ரோசின் பி எனும் சிவப்பு நிறமியை ஊசி வழியாக உட்செலுத்துவதன் மூலம் அதன் நிறம் மாறுகிறது. இதனை உண்பவர்களுக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. என்பதுதான் அந்தத் தகவல்.
வணிகர்கள் சிலர், நீர்ப்பூசுணைப் பழத்தை வெட்டிச் சில வண்ணப்பொடிகளைச் சேர்த்து அதனைச் சிவப்பாக மாற்றுகிறார்கள். மேலும் சிலர் வண்ணப்பொடியைத் துணியில் கட்டி அதனை ஈரமாக்கி வெட்டப்பட்ட நீர்ப்பூசுணை மீது தெளிக்கிறார்கள். இதனால் நிறம் மாறுகிறது. இதனால் நீர்ப்பூசுணையுடைய நிறம் கவர்ச்சிகரமாக இருக்கும். இதனைப் பார்க்கும்போது வாங்கி உண்ண ஆசை வரும். இதே போல மாங்காயில் செயற்கைக் கற்கள் மூலம் பழத்தைப் பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனர். மேலும் அடுமனை(பேக்கரி), பெட்டிக்கடைகளில் விற்பனை செய்யப்படும் பொலந்தியுருண்டை(இலட்டுருண்டை), காரத்திரி(காராச்சேவு), காரக்கலவை போன்றவற்றிலும் நிறத்தை உண்டாக்கிப் பளபளப்பாகக் காட்டக் கலப்படம் நடைபெறுகிறது. எனவே நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் உணவு, திண்பண்டங்களை அவ்வப்பொழுது ஆய்ந்து கலப்படம் செய்யும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
72whatsapp
72vaikaianeesu