செவ்வாய், 7 ஏப்ரல், 2015

போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்!


u.n.o.spl.rep-with-tha.the.kuu

போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்!

ஐ.நா சிறப்புத் தூதுவரிடம் வலியுறுத்தியது த.தே.கூ

“இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள்- மனித உரிமைகள் தொடர்பில் அரசு ஆரம்பிக்கவுள்ள உள்ளக விசாரணையில் எமக்கு நம்பிக்கையில்லை.
எதிர்வரும் செப்டெம்பரில் ஐ.நா. விசாரணை அறிக்கையையே நாம் எதிர்பார்த்திருக்கின்றோம். ஐ.நா. விசாரணை அறிக்கைக்கிணங்கப் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.”என்று, ஐ.நாவின் சிறப்பு வல்லுநர் பப்லோ டி கிரெய்ப்பிடம் நேரில் வலியுறுத்தினர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
நேற்று கொழும்பு தாசு சமுத்திரா உறைவகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐ.நா. சிறப்பு வல்லுநர் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
காலை 7.30 மணியிலிருந்து 8.30 மணிவரை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேசு பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்புக்குறித்து கருத்து தெரிவித்த கூட்டமைப்பு உறுப்பினர்கள் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் குடியரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆட்சிபீடத்தில் ஏறிய புதிய அரசு, தமிழ் மக்களின் அனைத்துச் சிக்கல்களுக்கும் தீர்வு காண்போம் என்று வாக்குறுதியளித்துள்ளது.
ஆனால், இந்த வாக்குறுதிகளை செயலில் காட்டுவதில் காலத்தாழ்ச்சி காட்டுகின்றது புதிய அரசு. எனவே, வடக்கு,கிழக்கில் மீள்குடியேற்றம், இராணுவக் குறைப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல்போனோர் தொடர்பானவை உட்பட மக்களின் உடனடிச் சிக்கல்களுக்கும், இலங்கையில் நீண்டகாலமாகத் தொடரும் இனச் சிக்கல்களுக்கும் உடன் தீர்வை வழங்க இந்த அரசு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
இதற்கு ஐ.நாவின் அழுத்தம் தொடர்ந்து இருக்கவேண்டும்” – என்று கூட்டாக வலியுறுத்ததியுள்ளோம்.
மேலும் ” பன்னாட்டு அரங்கில் தமிழர் சிக்கல்கள் ஒலிக்க இலங்கை மீதான ஐ.நா. தீர்மானங்கள் முதன்மைப் பங்கு வகிக்கின்றன.
எனவே, இலங்கையில் தமிழர் எதிர் நோக்கிய அவலங்களுக்கு ஐ.நா. நீதியைப் பெற்றுக்கொடுப்பதுடன் நிலையான அரசியல் தீர்வையும் பெற்றுக்கொடுக்கவேண்டும்” – என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

(நாடகமாடாமல் இருந்தால் சரி!)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக